For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா எம்.பி. பதவி: விஜயகாந்துடன் ஜி.கே. வாசன் ரகசிய பேரம்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vasan trying for secret deal with Vijayakanth?
டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் முயற்சி செய்யும் ஜி.கே.வாசன் தனக்கு ஆதரவு கோரி விஜயகாந்துடன் ரகசிய பேரம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 எம்.பிக்கள் பதவி காலம் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான மனுதாக்கல் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. நாளையுடன் மனுதாக்கல் முடிகிறது. அ.தி.மு.க. சார்பில் முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், சசிகலாபுஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகியோரும் அ.தி.மு.க. ஆதரவுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை இருக்கிறது.

தி.மு.க. சார்பில் திருச்சி சிவா நிறுத்தப்பட்டுள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் 26 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. 5 வேட்பாளர்களுக்கு அடுத்ததாக கூடுதலான ஓட்டு என்ற அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு கொண்டிருக்கும் காங்கிரஸ் மாநிலங்களவைக்கு ஒரு எம்.பி.யை கைப்பற்ற களம் இறங்க முயற்சி செய்தது.

பதவிக்காலம் முடிவடையும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் எம்.பி. பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்தினார். இது தொடர்பாக தே.மு.தி.க. தலைமையிடம் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஜனவரி 1ம் தேதி திடீரென்று விஜயகாந்தினை சந்தித்துப் பேசினார் வாசன்.

மறைந்த மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது எம்.எல்.ஏ.க்கள் 21 பேரின் ஆதரவை வாசனுக்கு கொடுக்க தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் சம்மதித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 26 பேர் உள்ளனர். இதனால் தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் 26 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்ற நிலையில் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்தே ராஜ்யசபா தேர்தலில் மோதி பார்த்து விடுவது என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்தது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அவசர அவசரமாக ஜி.கே.வாசன் டெல்லி சென்று ராஜ்யசபா தேர்தல் ஒத்திகைக்கு தயாரானார்.

தே.மு.தி.க.வில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரது ஆதரவை பெற்று விடலாம் என்றும் காங்கிரஸ் கணக்கு போட்டது.

திடீரென ராஜ்யசபா தேர்தலில் போட்டிக்கான சூழ்நிலை உருவாவதை அறிந்த தி.மு.க. கச்சிதமாக காய்நகர்த்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை தங்களுக்கு சாதகமாக ஓட்டு போட ஏற்பாடு செய்து விட்டதாக கூறப்படுகிறது. எனவேதான் காங்கிரஸ் கட்சியினர் ராஜ்யசபா தேர்தலில் கோதாவில் இறங்கும் திட்டத்தையே கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

தவிர காங்கிரசின் டெல்லி தலைவர்கள் மத்தியில் சிலர் தி.மு.க.வுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் தி.மு.க.வுடன் மோதல் போக்கு தேவையில்லை என்றே கருதுகின்றனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக, திமுக, காங்கிரஸ் இணைவதற்கான முன்னோட்டம் என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

English summary
Sources say that G K Vasan is trying for a scret deal with DMDK leader Vijayakanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X