துப்பாக்கி சூட்டைக் கண்டித்து போராட்டம் நடத்திய திருமாவளவனை விடுதலை செய்க.. விசிக ஆர்ப்பாட்டம்
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து கண்டனப் போராட்டம் நடத்திய விசிக தலைவர் திருமாவளவனை போலீஸார் கைது செய்தனர். அவரை விடுதலை செய்யக்கோரி, விசிகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எழும்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகல் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட ஏராளமான விசிக தொண்டர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், போலீஸாரைக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த விசிக தொண்டர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.