For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் நிலை- வி. சி.க. தீர்மானம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பிரச்சனைக்காக திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் தங்களது நிலை என சென்னையில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

காவிரிநீர் சிக்கல் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் அடிப்படையான வாழ்வாதார உரிமை குறித்ததாகும். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பைக் கர்நாடக மாநில அரசு மதிக்காத நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பையும் கர்நாடக அரசு மீண்டும் அவமதித்துள்ளது. கர்நாடக அரசு மட்டுமின்றி மத்திய அரசும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட இயலாது எனவும், இதனை நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டமியற்றிய பின்னரே அமைத்திட இயலும் எனவும் கூறியுள்ளது. இது தமிழகத்திற்கு இந்திய அரசு இழைத்துள்ள மாபெரும் அநீதியாகும். இத்தகைய நெருக்கடியான ஒரு சூழலில், தமிழக மக்கள் யாவரும் கட்சி மாறுபாடுகளின்றி ஒருங்கிணைந்து போராடவேண்டிய வரலாற்றுத்தேவை எழுந்துள்ளது.

 எழும்பூர் கூட்டம்

எழும்பூர் கூட்டம்

இந்நிலையில்தான், தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தோம். எனினும், தமிழக அரசு அதனை ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியானது அனைத்துக்கட்சிக் கூட்டத்தை ஒருங்கிணைக்கத் தவறினால், எதிர்க்கட்சியாவது அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுத்தோம். தமிழக மக்களின் எதிர்காலம் குறித்த கவலையிலிருந்தே இக்கோரிக்கையை முன்மொழிந்தோம். அப்போது, தி.மு.க தரப்பில் அது ஏற்கப்படவில்லை. விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் ஆகியவை ஒருங்கிணைத்த கலந்தாய்வுக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றது. கடந்த 06.10.2016 சென்னை எழும்பூரில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றோம். அக்கூட்டத்தில் பா.ஜ.க, தி.மு.க, காங்கிரஸ், த.மா.க, மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

 ரயில் மறியல்

ரயில் மறியல்

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்தான் அக்டோபர் 17, 18, ஆகிய இரண்டு நாட்களில் வெற்றிகரமாக இரயில் மறியல் போராட்டம் நடந்தேறியது. அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பத்து இலட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது குறித்த செயல்திட்டத்தில்தான் அனைவரும் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், மாறாக, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்ததும், மக்கள் நலக்கூட்டணி சார்பில் இடதுசாரிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்ததும் நடந்தன. தற்போது, தி.மு.க தலைமையில் அக்டோபர் 25 அன்று அனைத்துகட்சிக் கூட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

 டெல்லி சந்திப்பு

டெல்லி சந்திப்பு

இந்நிலையில், கடந்த 21.10.2016 மக்கள் நலக்கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவரை சந்தித்தப்பின்னர் புது தில்லியில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடந்தது. அக்கூட்டத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல், அக்டோபர் 25 அன்று தி.மு.க. ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

 சிபிஎம் எதிர்ப்பு

சிபிஎம் எதிர்ப்பு

அந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுவதில்லை என்றும் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்றும் பெரும்பான்மையாகக் கருத்துகள் எழுந்தன. குறிப்பாக, இத்தேர்தலில் பங்கேற்பதில்லை என மூன்று கட்சிகளும் போட்டியிட வேண்டுமென ஒரு கட்சியும் கருத்துக்களை முன்வைத்தபோது, போட்டியிட வேண்டுமென கூறிய சிபிஐ (எம்) கட்சியின் சார்பில் மாநில பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிவிட்டு அறிவிக்கிறோம் என சொல்லப்பட்டது.

 காவிரி- சிறுத்தைகள் எதிர்ப்பு

காவிரி- சிறுத்தைகள் எதிர்ப்பு

அதேபோல, திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கூறிய விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பின்னர் கலந்துபேசி முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டது.

 நிர்வாகக் குழு தீர்மானம்

நிர்வாகக் குழு தீர்மானம்

அதனடிப்படையில், அக்டோபர் 24 திங்கள் கிழமை இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூடியது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

தேர்தல் அரசியலைத் தாண்டி, மக்கள் நலன்களை முன்னிறுத்தி பிரச்னைகளின் அடிப்படையில் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் மக்கள் நலக் கூட்டியக்கமாகவே ஒருங்கிணைந்து செயல்படுவது என தேர்தலுக்கு முன்பே முடிவெடுக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் உறுதியாகவுள்ளது. காவிரிநீர்ச் சிக்கல் தொடர்பாக அக்டோபர் 6 அன்று சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்பதையே விடுதலைச் சிறுத்தைகள் விரும்புகிறது.

 காவிரி உரிமை பேரணி

காவிரி உரிமை பேரணி

அதனடிப்படையில், பத்து இலட்சம் பேர் பங்கேற்கும் ‘காவிரி உரிமைப் பேரணி' ஒன்றைத் தலைநகர் சென்னையில் நடத்துவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டுமென மக்கள் நலக்கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கும் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

 திமுக அனைத்து கட்சி கூட்டம்

திமுக அனைத்து கட்சி கூட்டம்

இதுகுறித்தும், திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்தும், மக்கள் நலக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேசுவது என்று இக்கூட்டம் முடிவுச்செய்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

English summary
VCK said that its party willing to participate the DMK's All party meet for Cauvery Water Dispute. But PWF parties against their stand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X