• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காங்கிரஸ் ‘ஏட்டுச் சுரைக்காய்’ சமைத்ததை பாஜக பயன்படுத்திக் கொண்டது: கி.வீரமணி

|

சென்னை: தோல்விக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அடிக்கட்டுமானமுள்ள திமுக விரைவில் எழுச்சி பெறும் எனத் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Veeramani's opinion on DMK's defeat

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்...

மத்திய அரசை உருவாக்கும் 16ஆம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி தரத்தக்கவையாகவே வெளி வந்தன. மத்தியில் பா.ஜ.க., தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் வெற்றி பெற்றன. பா.ஜ.க. 282 தொகுதிகள் (தனித்த பெரும்பான்மைக்கு மேலேயே) அதன் கூட்டணியாகிய தேசிய ஜனநாயக முன்னணி 336 பெற்றன.

அதிமுகவின் வெற்றி...

அ.இ.அ.தி.மு.க. மொத்தம் உள்ள 39 தமிழ்நாட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றது 37 ஆகும். புதுவை ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது (மூன்றாவது இடத்தைப் பெற்றது). தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் தி.மு.க. பெற்றுள்ள வாக்குகள் 24 சதவிகிதம் (23.6%) மிக அதிக வெற்றி பெற்றிட்ட அதிமுக பெற்ற வாக்குகள் 44 சதவிகிதம் (44.4%).

தி.மு.க. தோல்விகளைச் சந்தித்த கட்சிதான்!

24 சதவிகித வாக்குகள் பெற்றும்கூட தி.மு.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை! தி.மு.க.வுக்கு இது ஒன்றும் முதன் முறை அல்ல. ஏற்கெனவே நடந்த சில பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு இப்படி நிகழ்ந்துள்ளது என்பது உலகறிந்த உண்மை.

அதிமுகவின் தோல்வி....

பிறகு அதிலிருந்து மீண்டு, விழுந்த வேகத்திலேயே எழுந்தும் வந்துள்ளது. இது தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க.வுக்கும் இரண்டு, மூன்று முறை இத்தகைய நிலைமை பொதுத் தேர்தலில் ஏற்பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது. 2004 பொதுத் தேர்தலில் ஆளுங் கட்சியாக இருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட போதுகூட ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல், தற்போது தி.மு.க. அடைந்த தோல்வியைப் போலவே, அ.தி.மு.க.வும் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது, பிறகு மாறிய நிலையில் இப்படி வெற்றியும் பெற்றுள்ளது.

தி.மு.க. கதை முடிந்து விடாது!

எனவே, இந்த முடிவுகளை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு ‘தி.மு.க.வின் கதையே முடிந்துவிட்டது' என்று கூவுவது, குதூகலிப்பது, கும்மாளமிடுவது ஒரு தற்காலிக மகிழ்ச்சிப் படலமே தவிர, நிரந்தரமாகி விடாது; நிரந்தரமானதும் இல்லை.

வெளிப்படையான விசயம்...

மத்தியில் பங்கேற்போம் என்று கூறிய நிலையில், பலர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு தனித்த அறுதிப் பெரும்பான்மையைக் கொடுத்து விட்ட நிலையில் அந்தக் கனவும் நிறைவேற வாய்ப்பில்லாததாகி விட்ட வருத்தமும் வெளிப்படையாகவே தெரியும் ஒன்றாகியுள்ளது.

மோடி அலை என்பது உண்மையா?

இவ்வளவு பெரிய வெற்றியை பா.ஜ.க. அடைந்ததற்கு என்ன சரியான காரணம் என்று ஆராய்ந்தால், மோடி அலை என்றால் பா.ஜ.க.வின் வெற்றி கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும்கூடப் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டுமே; அப்படி ஏற்படவில்லை என்பது ஏன் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸின் செயல்பாடுகளே காரணம்!

விலைவாசி ஏற்றம், வேலை கிட்டாத நிலை, வெறும் வளர்ச்சிபற்றி "ஏட்டுச் சுரைக்காய்" சமைத்தது; சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குக் கதவு திறப்பு, வெளிநாட்டு வியாபாரம் உட்பட மக்கள் உணர்வுகளுக்கு விரோதமான போக்கு, உள்நாட்டுப் பிரச்சினைகள்; மாநில மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாதது, ஊழல் என்ற எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட ஓங்காரக் கூச்சலைக் கண்டு வேகமாக எதிர்த்து நிற்காதது. தயங்கித் தயங்கி முடிவுகளை அறிவித்து, கூட்டுப் பொறுப்பு பிரதமருக்கு -அமைச்சரவைக்கு உண்டு என்பதை அறவே மறந்து விட்டு தங்களை மட்டும் காப்பாற்றிட தற்காப்புவாத முறைகளையே பயன்படுத்தியது போன்றவற்றை பா.ஜ.க. மிக அருமையாகப் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் கட்சிமீது மக்களுக்கு நாளும் தணியாத கோபம் - வெறுப்பு நாளும் வளர்ந்ததே தவிர, குறையவே இல்லை.

சுனாமி பாய்ந்தது...

இவர்களோடு இருந்த காரணத்திற்காகவே தி.மு.க., ஆதரித்த பகுஜன் சமாஜ் கட்சி, கூட்டணி கட்சியினர் பரூக் அப்துல்லா கட்சி சரத்பவார் கட்சி முதலியவைகளையும், (வெளியேறினாலும் கூட தி.மு.க.வின்மீதும் கடுங்கோபம்); வெளியில் இருந்து ஆதரித்து 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி என்ற நிலையைத் தருவதற்குக் காரணமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி, லாலு கட்சி, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி எல்லாக் கட்சிகள்மீதும் இந்த ‘சுனாமி' பாய்ந்து விட்டது!

தி.மு.க.மீதும் கோபம்...

தி.மு.க.விற்கு உள்ள வாக்கு வங்கி சரியா விட்டாலும்கூட, புதிதாக அவர்களை ஆதரிக்க வேண்டிய மக்கள் காங்கிரசுக்கு உதவியவர்கள் என்ற கோபத்தில் தி.மு.க.வையும் தண்டித்துள்ளனர். பார்ப்பன ஊடகங்கள் கூறும் ஊழல் குற்றச்சாற்று காரணம் என்றால் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் எப்படி வெற்றி பெற முடிந்தன?

உதாரணம்...

ஊழலைக் களைவோம் என்றவர்களின் வேட்பாளரே (பி.ஜே.பி.) விலைக்கு வாங்கப்பட்ட நிலை பரவலாகப் பேசப்படவில்லையா? உதாரணத்திற்கு கர்நாடகத்தில் எடியூரப்பா, ஸ்ரீராமுலு போன்றவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் எப்படி?

பதிலடி கொடுத்திருக்க வேண்டும்...

பார்ப்பன உயர் ஜாதி ஊடகங்கள் திட்டமிட்டே தி.மு.க. மீது தனி வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தன. கடந்த சில ஆண்டுகளாக அதனை எதிர்த்துப் பதிலடிகளை திட்டவட்டமாகக் கொடுக்காமல், தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் தி.மு.க.வின் பிரச்சாரம் அமைந்ததும் அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது!

முன்னுரிமை...

புதிய இணையதள இளையர்களான வாக்காளர்கள் மேலெழுந்த வாரியான திட்டமிட்ட வளர்ச்சிப் பேச்சு, மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு என்பதுபோன்றவைகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர். காங்கிரஸ் - திமுகவை அவர்கள் பிரித்துப் பார்க்கவே தயாராக இல்லை.

பொய்யுடைய ஒருவன் சொல் வன்மையால்

மெய்போலும்மே மெய் போலும்மே!

என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது!

பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையும்

திமுகவில் உள்ள நோய்...

தி.மு.க.வின் "பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையும்" நோயாக ஆங்காங்கே உள்ளதையும் ஒப்புக் கொள்ளவே வேண்டும். இந்த நோயை மறைத்தால் அது பிறகு உயிர்க் கிறுதியாகி ஆகிவிடும். தி.மு.க. தலைவர் கலைஞர், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் போன்றவர்களது கடும் உழைப்பு, எதிர்பார்த்த பலனைத் தராததற்கு முக்கிய காரணம்; புதிய வாக்காளர்கள், பொதுவானவர்கள் நம்பிக்கையையும் தி.மு.க. பெற வாய்ப்பு இல்லை; இனி இதனையே ஒரு வாய்ப்பாக எண்ணி தகுந்த ஆய்வுகளோடு, புதிய அணுகுமுறைகளைப் புகுத்திட தயங்கக் கூடாது.

அசைக்க முடியாத தி.மு.க.வின் அடிக்கட்டுமானம்...

தி.மு.க. அடிக்கட்டுமானம் அசைக்க முடியாததாக இன்றும் உள்ளது என்பதில் அய்யமில்லை. இந்த முடிவுகளை அறைகூவலாக எடுத்துக் கொண்டால், திட்டமிட்டுச் செயல்பட்டால் நிச்சயம் ஆறு மாதங்களில் இயக்கம் புத்தெழுச்சி பெற்று விட முடியும். பெருஉருக் கொள்ள முடியும்.

மற்றபடி பண நாயக பவனி, பெற்ற வெற்றிகளைபற்றி தமிழ்நாட்டுத் தேர்தல் ஆணையரே "தமிழ்நாட்டில் கடைசி 2 நாள் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்று ஒப்புதல் வாக்கு மூலம் போல செய்தியாளர்களிடையே மதுரையில் 8.5.2014ல் கூறியுள்ளதைவிட, மிகப் பெரிய காரணம் வேறு தேவையா?

5 காரணங்கள்...

எனவே, பெரு வெற்றி அதி.மு.க.வுக்கென்று நினைத்து ஊடகங்கள் ஓகோ என்று புகழலாம்; ஆனால் உண்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் அறிய மாட்டார்களா?

1. ஆட்சி பலம், 2. தேர்தல் ஆணைய பலம், 3. ஊடகங்களின் ஒரு சார்பு நிலை, 4. பணப் பட்டுவாடா, 5. அதற்கு உதவிய 144 சட்டம் அமல் - இத்தியாதிகள் இத்தியாதிகள்.

அதிர்ச்சி தந்த இந்த தேர்தல் முடிவுகள் மூலம் நாடு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்றையும் சுட்டிக் காட்டுவதில் பெருமிதம் அடைகிறோம்.

பலமான கூட்டணி...

பலமான கூட்டணியை அமைத்து ‘நாங்கள் 39 இடங்களையும் கைப்பற்றுவோம்' என்றவர்களும் அவர்களுக்குத் துணைபோன ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளும், அதில் சிலர் பணத்தை வாரி வாரி இறைத்தும்கூட, பெரியார் மண்ணான இத்தமிழ் மண்ணைக் காவிமயமாக்க முடியவில்லை.

இந்தத் தோல்வியை, தமிழ் நாட்டிற்கான பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் போல், தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட கூட்டணியால் ஒரு பலனும் ஏற்படவில்லை என்று இன்று செய்தியாளர்களிடையே கூறியுள்ளார்.

அவர்கள் பெற்ற இரண்டு வெற்றிகளில் ஒன்று மதவாத வெற்றி; மற்றொன்று ஜாதி வாத வெற்றி என்பது உலகறிந்த உண்மையல்லவா?

ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்...

இந்த முடிவுகளிலிருந்து தோல்வி அடைந்தவர்கள் பாடம் பெற்று, அனுபவத்தை அறுவடை செய்வதோடு, அதை மனதிற் கொண்டே அடுத்து பயிரிடும் உழவாரப் பணிக்கு ஆயத்தமாக வேண்டும்.

தி.மு.க. தனது அணுகுமுறையிலும், அமைப்பு ரீதியாகவும், ஆழ்ந்து சிந்தித்து இப்போதே முடிவுகளை - அவை யாருக்கு எவ்வளவு கசப்பானவைகளாக இருந்தபோதிலும் - எடுக்கத் தவறக் கூடாது என்பதே உரிமையுடன் நாம் விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.

நட்டம் தி.மு.க.வுக்கா?

தி.மு.க. வைத் திட்டமிட்டு பலவீனப்படுத்தினால், அதனால் ஏற்படும் நட்டம் தி.மு.க.வுக்கு அல்ல; திராவிடர் இன நலத்திற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும், பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் முனைப்புடன் போராட வேண்டி உணர்வுகளுக்கும் ஏற்படுவதாக அமையும்.

"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்" - குறள் (668)

(நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்யத் துணியும் வினையை, மனக் கலக்கம் இல்லாமலும், சோர்வில்லாமல் காலத் தாழ்வு நீக்கியும் விரைந்து செய்து முடிக்க வேண்டும்).

-இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Dravidar Kalagam leader K.Veeramani has said that the DMK will revamp soon.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more