For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்" என்ற பெயரை மீண்டும் சூட்டாவிட்டால்.... வேல்முருகன் எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்ற பெயரை நீக்கிவிட்டு மீண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என மாற்றாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்" (NLC) என்ற பெயரை கொல்லைப்புற வழியில் தற்போது NLC India Limited (Formerly Neyveli Lignite Corporation Limited) என என்.எல்.சி. நிர்வாகம் மாற்றியுள்ளதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Velmurugan codemns NLC name change

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதியைப் பெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழகத்தின் பெருமைக்குரிய சின்னம். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன மின்சாரம்தான் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் உருவாவதற்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் நிலங்களை, குடியிருப்புகளை தாரைவார்த்து கொடுத்துவிட்டு இன்னமும் உரிய நீதி கிடைக்காமல் போராடி வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்னமும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருந்து வருகின்றனர். நிலம் கொடுத்த மக்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் முன்வைக்கிற எந்த கோரிக்கைக்கும் தீர்வு காண மறுத்து வருகிறது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது மத்திய அரசு.

அதே நேரத்தில் தொடர்ச்சியாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதில் மத்தியில் அமையும் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதை ஒட்டுமொத்த தமிழகம் போராடி தடுத்து வருகிறது.

இத்தனை பிரச்சனைகள் இருக்கும் நிலையில் அண்மையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை மாற்றிவிட்டு 'என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்ற பெயரை வைப்பதற்கான ஒப்புதலை தொழிலாளர்களிடம் கேட்டிருந்தது மத்திய அரசு. வெளிமாநிலங்களிலும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்கள் இருப்பதால் இப்படியான ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டதாகவும் சொன்னது மத்திய அரசு.

இந்த நிறுவனத்தின் தலைவர்களாக வெளி மாநில அதிகாரிகள் நியமிக்கப்படும் போது தமிழர்கள் கொடுத்த நிலத்தில் தமிழர்களின் பெருஉழைப்பில் கிடைக்கும் லாபத்தை அப்படியே தங்களது சொந்த மாநிலங்களில் சுரங்கம் வெட்ட மடை மாற்றி விடுகின்றனர் அதிகாரிகள். அத்துடன் தமிழக மண்ணின் மைந்தர்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளியேற்றும் வகையில் வடமாநிலங்களில் இருந்து பெருமளவு அதிகாரிகள், ஊழியர்கள் இறக்கப்படுகின்றனர்.

இப்படி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து ஒட்டுமொத்த தமிழர்களை வெளியேற்றி வட இந்தியர்களை நியமிக்கும் வஞ்சகத்தை அரங்கேற்றவும் ஏதுவாகவே மாற்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதாக அப்போதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டித்தது. ஒட்டுமொத்த தமிழகமும் இதை கடுமையாக எதிர்த்தது.

இந்த எதிர்ப்புகளை மீறி தற்போது என்.எல்.சி. நிர்வாகமானது "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்" (NLC) என்ற பெயரை ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் மாற்றியிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக் கண்டிக்கிறது. "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்" என்ற பெயரை மறுபடியும் என்.எல்.சி. நிர்வாகம் சூட்டாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

English summary
TVK leader Velmurugan has condemned the name change of NLC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X