For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு.. வேல்முருகன் கடும் கண்டனம்

நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கி சூட்டை வேல்முருகன் கண்டித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Velmurugan condemns attack on Tamil fishermen

இந்திய கடற்பகுதியான கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ள ஒருவர் காரைக்காலைச் சேர்ந்த பாலமுருகன் மற்றொருவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த அரவிந்தன் ஆவர். இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் நடுக்கடலில் துப்பாக்கி முனையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்திய கடலோர எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. துப்பாக்கி சூடு நடத்துவது மட்டுமல்லாமல் சுமார் 100 படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களது நாட்டிற்கு எடுத்துச் செல்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று டெல்லியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்ட இலங்கை, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.

பாரம்பரிய மீன்பிடி உரிமையுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தொடர்ந்து மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதா? மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தித் தருவோம்; மீனவர் படகுகளை மீட்டுத் தருவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்த மத்திய பாஜக அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்காமல் தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும்.

மீனவர்களை தாக்குவது, படகுகளை நாசப்படுத்துவது; வலைகளை சேதப்படுத்துவது என நடுக்கடலில் சிங்கள கடற்படையின் தொடரும் அட்டூழியத்துக்கு மத்திய அரசுதான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குஜராத் மீனவர்களுக்காக துடியாய் துடிக்கிற பிரதமர் மோடி அவர்கள், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மட்டும் வஞ்சிப்பது ஏன்?

இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ள குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan has condemned the attack on Tamil fishermen by Sri Lankan Navy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X