For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மண் - மக்கள் - சூழல்’ என்ற அடிப்படையைக் கருத்தில் கொள்ளாமல், அதனை அழிக்கும் நோக்கிலா திட்டங்கள்?

மண்- மக்கள்- சூழல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அவற்றை அழிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது ஏன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வரைவு ' கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2018' என்பது, குறிப்பாக மீனவரின் வாழ்வுரிமையைப் பறிக்கும் திட்டமன்றி வேறன்ன? என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

கார்ப்பொரேட்டுகளின் லாபவெறிக்கான திட்டமிடலுக்கு மக்களாட்சி ஜனநாயகத்தில் இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன்,உடனடியாக இதனைத் திரும்பப்பெறுமாறு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! நாட்டின் கடல், கடற்கரை, கடல் சார்ந்த பகுதிகள் தொடர்பாக 1991ல் 'கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-1991' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது; பின்னர் அது 2011ல் மேலும் சீர் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அது, கடற்கரைச் சுற்றுச்சூழலையும் உயிர்ச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன்,மீனவர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் தற்போதைய மத்திய பாஜக மோடி அரசின் சுற்றுச்சூழல் துறை கடந்த ஏப்ரல் 18ல் புதிதாக வேறொரு 'கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2018' என்ற வரைவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இது 2011ல் வெளியிடப்பட்ட திட்டத்திற்கு நேர் எதிராக, குறிப்பாக மீனவரின் வாழ்வுரிமையையே பறிப்பதாக உள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்

ஏற்கனவே மோடி அரசு அறிவித்துள்ள சாகர்மாலா திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது. நீலப் பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் கடலை கார்ப்பொரேட்டுகளிடம் ஒப்படைப்பதாக உள்ளது. கார்ப்பொரேட்டுகளின் லாபவெறிக்காக கடல்,கடல் தீவுகள், கடற்கரை, கடல் சார்ந்த பகுதிகள் ஆகியவற்றைக் கையகப்படுத்தி, பாதுகாப்பு என்ற பேரில் அவற்றை ராணுவமயப்படுத்துதல்தான் சாகர்மாலா திட்டம்; அது பல்வேறு துணைத் திட்டங்களை உள்ளடக்கியது; அதில் ஒன்றுதான் இந்த வரைவு 'கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2018' திட்டம்.

4 மண்டலங்கள்

4 மண்டலங்கள்

மனித வாழ்வுரிமையை உறுதி செய்வது இந்த மண்ணும் அதன் சுற்றுச்சூழலும்தான். அந்த வகையில்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை மற்றும் கடல் சார்ந்த நிலங்களையும் நீர்நிலைகளையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப அவற்றின் பாதுகாப்பு, பயன்பாடு தொடர்பாகச் செய்யவேண்டியதை அறிவுறுத்துகிறது. இதில் முதன்மைக் கூறு, கடற்கரைச் சூழல் பாதுகாப்பு; இதில் சதுப்பு நிலங்கள், உப்பளங்கள் முதலானவை பாதுகாக்கப்பட வேண்டும்;துறைமுகங்கள், மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடல் சுவர் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி;தொழில் நிறுவனங்களுக்கான கட்டுமானங்கள் எதுவும் கூடாது.

துறைமுகங்கள்

துறைமுகங்கள்

ஆனால் இவை மோடியின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில் நீக்கப்பட்டு, சுற்றுலாத் திட்டங்களுக்கான கட்டுமானங்கள், பாலங்கள், சாலைகள்,தடுப்பணைகள் கூட அமைக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர் வண்டி இருப்புப் பாதைகள்,தொழிற்கூடங்கள், விடுதிகள், நிலக்கரி கிடங்குகள், எண்ணெய்-எரிவாயு சேமிப்புக் கிடங்குகள், நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி)அமைப்பதற்கும் இந்த அறிவிப்பாணை வழிவிடுகிறது. எனவே கடற்கரைகள், துறைமுகங்கள், தீவுகள் அனைத்துமே கார்ப்பொரேட்டுகளின் வசமாகிவிடும்.

அறிவிப்பாணை

அறிவிப்பாணை

இத்தகைய சாகர்மாலா திட்டத்திற்கு தற்போதைய கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2011 தடையாக இருப்பதால்தான்,மோடி அரசு புதிய அறிவிப்பாணை-2018ஐக் கொண்டுவருகிறது. இதில் கடலுக்குச் சொந்தக்காரர்களும் மண்ணின் மைந்தர்களுமான மீனவர்கள் காவு வாங்கப்படுவார்கள் என்பது பாஜகவுக்கும் மோடிக்கும் தெரியாமல் எப்படி? தெரிந்துதான் செய்கிறார்கள் இதனை! மோசடியாக ‘வளர்ச்சி' என்ற சொல்லைப் பயன்படுத்தி மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்ட பின் தங்களின் கார்ப்பொரேட் எஜமானர்களுக்காக,அவர்களின் லாப வெறிக்காக மண்ணையும் மக்களையும் சுற்றுச்சூழலையும் அழிக்கத் தயங்காத கயமைத்தனத்தின் வெளிப்பாடுதான் மத்திய பாஜக மோடி அரசின் இந்த வரைவு 'கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2018' என குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

திரும்ப பெறு

திரும்ப பெறு

குறிப்பாக, மீனவரின் வாழ்வுரிமையைப் பறிப்பதாக இது வடிவமைக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! கார்ப்பொரேட்டுகளின் லாபவெறிக்கான திட்டமிடலுக்கு மக்களாட்சி ஜனநாயகத்தில் இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன்,உடனடியாக வரைவு 'கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-2018'-ஐத் திரும்பப்பெறுமாறு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Tamilaga Vazhvurimai party condemns Central Government like Sagarmala, Coastal Regulation Zone 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X