For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் 91-வது பிறந்த நாள்- ஊழல் எதிர்ப்பு கட்சிகள் வைகோ அணியில் சேர அழைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய ஊழலுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் இணைய வேண்டும் என்று மூத்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

அரசியல் வாழ்வில் தூய்மையும், எளிமையும் , நேர்மையும் கொண்டவரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு மக்கள் நல கூட்டணி தலைவர்கள்  மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.

15 வயதில் இருந்து இன்று வரை மக்களுக்காகவே போராடி வருகிறார் தோழர் நல்லக்கண்ணு. 1925ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி கருப்பாயி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

போராட்ட களத்தில் நல்லக்கண்ணு

போராட்ட களத்தில் நல்லக்கண்ணு

நெல்லைச் சீமையில் வ.உ.சி. மூட்டிய சுதந்திரத் நெருப்புதான் 15 வயதிலேயே அவரை போராட்டக் களத்துக்கு கொண்டு வந்தது.

1944ல் ஸ்ரீவைகுண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை தொடங்கப் பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். விவசாய தொழிலாளர் அமைப்பில் மாநில, தேசிய அளவில் பொறுப்பு வகித்த அவர், 1992-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். 2005 வரை 13 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார்.

நேர்மையான தலைவர்

நேர்மையான தலைவர்

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர். 91 வயதிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தமிழகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாழ்வில் நேர்மை, தூய்மைக்கு எடுத்துக்காட்டு என்றால் அது தோழர் நல்லக்கண்ணுதான் என்று மாற்று கட்சியினரும் பாராட்டுகின்றனர்.

தாமிரபரணியின் பாதுகாவலன்

தாமிரபரணியின் பாதுகாவலன்

மணல் கொள்ளையர்களால் நெல்லையின் உயிர் நாடியான தாமிரபரணி நதி அழிந்து வருவதை கண்டு உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுக ளுக்கு அங்கு மணல் அள்ள தடை உத்தரவு பெற்றார். இதற்காக அரசியலை விட்டு ஓடு என்று அவருக்கு மிரட்டல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டி னார்கள் ஆனாலும் அஞ்சவில்லை. தூர் வாருதல் என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் அடுத்த வழக்கை தொடர்ந்தார்.

மக்கள் பிரச்சினை

மக்கள் பிரச்சினை

மக்கள் பிரச்சினைகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் குரல் கொடுப்பதுடன், போராடியும் வருவதால்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு எதிரானவர்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளார் நல்லகண்ணு. தற்போது சென்னை சி.ஐ.டி நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிக்கும் நல்லகண்ணு இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தலைவர்கள் வாழ்த்து

தலைவர்கள் வாழ்த்து

தனது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார். அவருக்கு மக்கள் நல கூட்டணி தலைவர்கள்  மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 91

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 91

செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு 1925 டிசம்பர் 26ம் தேதி கான்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கப்பட்டது. அதற்கு இன்று 91 வயது பிறக்கிறது. கட்சிக்கும் எனக்கும் 91 வயது பிறந்து உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். 1967க்கு பிறகு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி அமைந்து உள்ளன. ஆனால் அடிப்படை மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

நேர்மையான நிர்வாகம்

நேர்மையான நிர்வாகம்

ஊழல் ஆட்சி தான் நடைபெற்று வந்துள்ளது. நேர்மையான நிர்வாகம் அமையவில்லை. இதனால் வெள்ள சேதத்தின் போது 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுனாமியின் போது 12 ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும். மக்கள் நல கூட்டணி அதற்கான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறது.

மக்கள் நல கூட்டணி ஆட்சி

மக்கள் நல கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய ஊழலுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் எங்களது மக்கள் நல கூட்டணியில் இணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால் மக்கள் நல கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் அமையும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.

English summary
The Tamil Nadu unit of the Communist Party of India (CPI) is gearing up to celebrate the 91st birthday of its veteran leader R Nallakannu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X