For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தரம் மேம்படுமா…?

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவைக் கலைத்துவிட்டு, தற்போது புதிய குழுவை அமைப்பதாக ஆளுநர் அறிவித்திருப்பது, ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளது

Google Oneindia Tamil News

பா. கிருஷ்ணன்

சென்னை: ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் இல்லாத சென்னைப் பல்கலைக்கவகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்பட்டுவிட்டார். அதைப் போல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர் பொறுப்பேற்றுவிட்டார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் செல்லதுரை ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் இல்லாமல் நடத்தக் கூடாது என்று கல்வியாளர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் வலியுறுத்தி வந்தனர். அந்தப் பிரச்சினைக்கு தற்போது முற்றுப் புள்ளி வைக்க்கப்பட்டுவிட்டது.

Vice chancellor’s appointments, will education quality be improved?

துணைவேந்தர் நியமனம் குறித்து மூத்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தமிழக ஆளுநரும் பல்கலைகழக வேந்தருமான வித்யாசாகர் ராவிடம் சிலயோசனைகளைக் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் குழு தொடர்பாகச சில வழிகாட்டு நெறிகளைத் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் பணிக்காக விண்ணப்பிக்கும் கல்வியாளரிடம் பல்கலைக்கழகத்தை மேம்பட்ட கல்வி நிறுவனமாக மேம்படுத்த என்னெனன திட்டம் வைத்திருக்கிறார் என்பதைக் கேட்டறிய வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார். துணைவேந்தர் தெரிவுக் குழு ஆளுநரிடம் பரிந்துரையை அளிக்கும்போது, ஒவ்வொரு விண்ணப்பதாரரும் எந்த அளவுக்குத் துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்கள் என்பதை விளக்கிய குறிப்பையும் தரவேண்டும் என்றும் பாலகுருசாமி யோசனை கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, துணைவேந்தரைத் தெரிவு செய்யும் குழு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் விவாதிக்க வேண்டும் என்றும் யோசனை கூறியிருக்கிறார்.

புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு முன் தெரிவுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு துணைவேந்தரையும் நேரில் அழைத்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேர்காணலை நடத்தியிருக்கிறார். அதன் பிறகே, இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைவேந்தர் பொறுப்புக்கு விண்ணப்பிப்போர் பிஎச்.டி. பெற்றிருக்கவேண்டும். 15 ஆண்டுகள் ஆசிரியர் பணியும் ஆய்வுப் பணியும் நிறைவு செய்திருக்க வேண்டும். பல்கலைக்கழகத்திலோ தரமான கல்வி நிறுவனத்திலோ இயக்குநர், புலத் தலைவர், முதல்வர் போன்ற உயரி பொறுப்புகளை வகித்திருக்க வேண்டும்.

தேசிய, சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகளில் ஆய்வுரை நிகழ்த்தியிருக்க வேண்டும். தரமான ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியிருக்கவேண்டும்.

முனைவர் பட்ட வழிகாட்டியாகவும் கல்வி அமைப்புகளுக்குத் தலைமைதாக்குபவராகவும் மாணவர், மேம்பாட்டுத் திட்டம், பாடத் திட்ட உருவாக்கம் ஆகியவற்றில ஈடுபட்டிருப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் பாலகுருசாமி பல காலமாகவே யோசனை கூறி வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவைக் கலைத்துவிட்டு, தற்போது புதிய குழுவை அமைப்பதாக ஆளுநர் அறிவித்திருக்கிறார்.

இத்தகைய நடவடிக்கைகள் ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்வரையில் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கு திறமையும் தகுதியும் கொண்ட ஏ.எல்.முதலியார், நெ.து. சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷையா, மு.வ., தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், எஸ்.வி. சிட்டிபாபு, வ.சுப. மாணிக்கனார், வா.செ. குழந்தைசாமி, மூ. ஆனந்தகிருஷ்ணன், வசந்திதேவி, பாலகுருசாமி, முத்துக்குமரன் போன்ற நேர்மையான கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் மீது ஊழல் கறை இல்லை. ஆட்சியாளர்களின் நெருக்குதலுக்கு இடமளிக்காதவர்கள். பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னால், அவர்களது பேரைச் சொல்லும் வகையில் தடம் பதித்தவர்கள்.

அதற்குப் பிறகு, கட்சி ஆதரவாளர்கள், கட்சியிலேயே இருப்பவர்கள், அரசியல் தலைவர்களின் பரிந்துரை பெற்றவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

திமுகவைச் சேர்ந்த சபாபதி மோகன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்திற்கும், இரா.தாணடவன் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டதற்கு இவையே காரணம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த சிந்தியா பாண்டியன் அண்ணா திமுக பிரமுகர் பி.எச். பாண்டியனின் மனைவி.

ஏ.எல். முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 25 ஆண்டுகள் பதவியில் இருந்தவர். காமராஜர் ஆட்சியின்போது கல்வியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அழைத்தபோது, "நான் பணியில் இருக்கிறேன். ஏதாவது முக்கியமானால் பதிவாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டு துணைவேந்தர் பதவியின் இறையாண்மையை நிலைநாட்டினார் என்று சொல்வார்கள்.

அரசியல்வாதிகளின் பரிந்துரையில் துணைவேந்தர் பதவிக்கு வந்தவர்கள் மட்டுமல்ல, பணம் கொடுத்தும் துணைவேந்தர்களாக வந்தவர்களும் உண்டு என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுபோன்ற ஆரோக்கியமில்லாதநடைமுறையால் உயர்கல்வித் துறையும் சீரழிகிறது, ஆசிரியர்களின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் வீணாகின்றன.

துணைவேந்தர்களை நியமிக்கும் தெரிவுக் குழுவில் யார் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை. எல்லா விண்ணப்பங்களும் உயர்கல்வித் துறைக்கு நேரடியாக அனுப்பப்படவேண்டும்.

வேந்தர் என்ற முறையில் ஆளுநர் விருப்பு வெறுப்பு இல்லாமல் நேர்காணலை நடத்தி தேர்ந்தெடுப்பதும் நல்ல வழிமுறையாகும்.

இதுபோன்ற ஆரோக்கியமான சூழ்நிலை வலுப்பெற்றால் கல்வியும் மேம்படும்.

அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை கொண்டு வந்தாக வேண்டும். இல்லையென்றால், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குபவரே அதன் வேந்தராகவும், அவரது உறவினர்கள் யாராவது துணைவேந்தராகவும் பொறுப்பேற்கும் நிலை நீடிக்கும். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைத் தனியார் நடத்துகின்றனர் என்றாலும், வழங்கப்படுவது கல்விதானே ஒழிய, கடைச் சரக்கல்ல என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். கட்டடங்கள், இதர வசதிகளுக்கு வேண்டுமானால், அவர்கள் சொந்தம் கொண்டாடலாம். கல்வி என்பது பொருளல்ல சேவை என்பது உணர்த்தப்பட வேண்டும்.

அப்போதுதான் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் பட்டங்களுக்கும் மதிப்பு இருக்கும்.

English summary
Columnist Paa Krishnan welcomed the method adopted by the Chancellor and Governor of Tamilnadu in appointing new VCs for universities. He also appealed a similar pattern be adopted for the appointment of private universities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X