For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்து ஊழியர்களை 15 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துவதா? விஜயகாந்த் கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களை 15 மணி நேரம் தொடர்ச்சியாக பணி செய்ய கட்டாயப்படுத்தி, அதற்கு பாதி சம்பளம் கொடுப்பது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகத்தில் 1 இலட்சத்து 42 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். தொழிலாளர்களுக்கு 13வது ஊதிய உயர்வு 01.09.2016 ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். பத்து மாதம் கடந்தும் இன்னும் ஊதிய உயர்வு வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதை தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

Vijayakanth condemnes on tamil nadu state transport corporation

எங்கள் தொழிற்சங்க பேரவையும், அதன் கூட்டமைப்பும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை ஓய்வு பெறும்போது வழங்காததை கண்டித்தும், போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்காததை கண்டித்தும், தொடர் வேலைநிறுத்தம் செய்தனர். பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதை தொடர்ந்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் தங்களது வேலைநிறுத்தத்தை இரண்டு நாட்களோடு முடித்துக்கொண்டது.

அரசும், அரசு அதிகாரிகளும் தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நாள் ஒன்றுக்கு 2 கோடி பேர் பயணம் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகத்தை, அதிமுக அரசு இலவசத் திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு, இத்துறைக்கு போதிய நிதி ஒதுக்காமல் நிர்வாக இயக்குனர்களும், போக்குவரத்துத்துறை செயலாளரும் அலட்சியமாக செயல்பட்டு, இத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை எடுத்து நிர்வாகச்செலவுக்கு செலவு செய்துவிட்டு, தொழிலாளர்களை ஓய்வு பெறும்போது அலையவிடுவதும், பணிபுரியும் தொழிலாளர்களை பழிவாங்குவதும், அதிக கிலோமீட்டர் ஓட்டச்சொல்லி கட்டாயப்படுத்துவதும், கூட்டமில்லாத வழித்தடத்தில் வசூல் கொண்டுவா என வற்புறுத்துவதும், பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக பணி செய்ய கட்டாயப்படுத்தி, அதற்கு பாதி சம்பளம் கொடுப்பது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது. இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

போக்குவரத்துத் துறையின் நிர்வாக இயக்குனர்களின் நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட இந்த இழப்பை, அரசிடம் உண்மை நிலைகளை எடுத்துச்சொல்லி உரிய நிவாரணம் வாங்க தைரியமில்லாத நிர்வாக இயக்குனர்கள், தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும். தைரியத்தோடும், துணிச்சலோடும் இத்துறையில் உள்ள குறைபாடுகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் நிர்வாக இயக்குனர்களை பணியில் அமர்த்தி, அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்தும் இப்போக்குவரத்துத் துறைக்கு இலஞ்ச, ஊழலுக்கு அப்பாற்பட்டவரும், திறமையாக வழிநடத்தி செல்லக்கூடிய ஒரு அதிகாரியை போக்குவரத்துதுறை செயலாளராக நியமனம் செய்து, போக்குவரத்து நிர்வாகத்தை சீர்செய்து, தமிழகத்தில் இயங்கும் 22 ஆயிரம் பேருந்துகளில், 15 ஆயிரம் பேருந்துகள் காலாவதியாகி, அதிகமான கிலோமீட்டர் ஓடி, எந்த இடத்தில் நிற்குமோ என்ற பயத்தோடு பயணம் செய்யும் பொதுமக்களின் அச்சத்தை போக்கி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிரச்சனையையும், பணியில் உள்ள தொழிலார்களின் சம்பள உயர்வு பிரச்சனையையும், உடனே தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது ஆளுகின்ற அரசு தாங்களும், தங்கள் குடும்பத்தினர் வாழ்க்கையையும் பலப்படுத்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர, போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்காமல் அவர்களை அலட்சியப்படுத்துவது வேதனையாக உள்ளது. பொதுமக்களுக்காக பொது சேவையோடு உழைத்துக் கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை பிரச்சனைக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதற்கு முன், அரசு உடனடியாக தலையிட்டு, காலம் தாழ்த்தாமல் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth has condemnes on tamil nadu state transport corporation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X