For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த்துக்கு தமிழில் இன்னும் பிடிக்காத வார்த்தை மன்னிப்புதான்! தப்பே செய்யலை என்கிறார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மன்னிப்பு... தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை என்று ரமணா திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் பேசிய டயலாக்கை, அரசியல்வாதி அவதாரம் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு வந்த பிறகும் மறக்கவில்லை போலும் விஜயகாந்த். தனது அநாகரீக செயலுக்கு கூட மன்னிப்பு கேட்கும் மனநிலைக்கு அவர் இன்னும் வரவில்லை.

திரைத்துறையில் மார்க்கெட் இழந்த பிறகு அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தை, தாங்கிப்பிடித்து தூக்கி நிறுத்தியது ஒரு சில ஊடகங்கள். கேப்டன் என்ற பெயரை மக்கள் மனதில் அதிகமாக பதிய வைத்ததில் அந்த ஊடகங்களுக்கு அபார பங்கு உள்ளது.

ஆனால், அரிதாரம் பூசி, பல டேக்குகள் வாங்கும்வரை வெளிவராத விஜயகாந்த்தின் சுயரூபம், பொதுவெளியில், பொது மேடைகளில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவருகிறது. நிதானம் தவறி, நாகரீகம் சற்றுமின்றி நடந்துகொள்வது விஜயகாந்த்தின் வாடிக்கையாகிவிட்டது.

மனித உரிமை எங்கே?

மனித உரிமை எங்கே?

பத்திரிகையாளர்கள் என்றில்லை, சக கட்சிக்காரர்களிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொள்கிறார். ஆசிரியர் கூட மாணவனை அடிக்க முடியாது என்கிற அளவில் மனித உரிமை சட்டங்கள் வலுப்பெற்றுள்ள இந்த காலகட்டத்தில், எம்.எல்.ஏவையே கை நீட்டி அடித்தவர்தான் விஜயகாந்த்.

மக்களை அடித்ததற்கு சமம்

மக்களை அடித்ததற்கு சமம்

மக்களின் பிரதிநியை அடிப்பது மக்களையே அடித்ததற்கு சமம். மானம், ரோஷம் அதிகமுள்ள தமிழக மக்கள் இதை சகித்துக்கொண்டது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வி.

உளறல் தொடர்கிறது

உளறல் தொடர்கிறது

தொடர்ச்சியாக 2 நிமிடங்கள் கூட கோர்வையாக பேச முடியாமல், தடுமாறிவருகிறார் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்திலுள்ள விஜயகாந்த். அவரது குடும்ப தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, விஜயகாந்த் நடவடிக்கைகளை கட் செய்து எடிட் செய்து ஒளிபரப்புவது பெரும் பணியாக இருக்கிறதாம். ஆனால் வேறு ஊடகங்கள் அவரது நடவடிக்கையை உள்ளது உள்ளபடி ஒளிபரப்பிவிடுகின்றன.

மறைக்கும் நாடகம்

மறைக்கும் நாடகம்

"எதையெடுத்தாலும் இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்டீர்களா என்று விஜயகாந்த் கூறுவது வாடிக்கை. இவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை, அல்லது நா குழறாமல் தொடர்ச்சியாக பேசமுடியவில்லை என்பதை மறைக்க, விஜயகாந்த் போடும் நாடகமே இந்த பேச்சு" என்கிறார், தேமுதிக பீட் பார்க்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

இசெட் பிளஸ் சும்மாவா

இசெட் பிளஸ் சும்மாவா

முதல்வருக்கு சில தனிப்பட்ட சலுகைகள் உள்ளன. விஜயகாந்த்தை போல ஊடகத்தால் வளர்ந்தவர் ஜெயலலிதா கிடையாது என்பதால் ஊடகங்களும் அவரை கண்டுகொள்வதில்லை. மேலும், இசெட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரிடம் ஈசியாக மைக்கை நீட்டிவிட முடியாது என்றும் அந்த நிருபர் சுட்டிக்காட்டுகிறார்.

கண்ணியம் போச்சே

கண்ணியம் போச்சே

காமராஜரும், அண்ணாவும் கால்வைத்த கண்ணியம்மிக்க சட்டசபையில் கூட நாகரீகமாக நடந்துகொள்ள தெரியாதவர் விஜயகாந்த். எதிர்க்கட்சி தலைவர் என்பவர் நிழல் முதல்வர் என்பார்கள். அந்த அளவு செல்வாக்கு உள்ள விஜயகாந்த் சட்டசபையில் என்னை பேசவிடவில்லை என்று கூறி மக்களுக்காக எதையும் பேசாமல் இருக்கிறார். ஆனால், பேச்சுரிமை என்ற அதிகாரத்தை (அதுவும் அவ்வப்போது நசுக்கப்படுகிறது) மட்டுமே வைத்துள்ள பத்திரிகையாளர்கள், ஜெயலலிதாவிடம் எல்லா கேள்விகளையும் கேட்டுவிட வேண்டும் என்று இவர் கூறுகிறார். அப்படியானால் கேப்டன் டிவியை கொண்டு ஜெயலலிதாவிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுக்க செய்யலாமே என்கிறார், தலைமைச் செயலகத்தின் மூத்த நிருபர்.

மானம் பெரிது

மானம் பெரிது

கருத்துகூற யாருக்கும் உரிமையுள்ளது, அடிப்பது, துப்புவது என்பது பிறரது கண்ணியத்தை களங்கப்படுத்தும் செயல். உயிரை விட மானத்தை பெரிதென்று, நினைக்கும் பண்பு சங்க காலத்தில் இருந்தே தமிழர்களுடையது. ஒரு கட்சியினர் தங்கள் தலைமை முன்பு கேள்விக்குறிபோல குனிந்து வணக்கம் சொல்வதை கடுமையாக விமர்சிக்கும் நாம், பிறரை அவமானப்படுத்தி அநாகரீகமாக நடந்துகொள்ளும் விஜயகாந்த்தை ஆதரித்தால் அதைப்போன்ற இரட்டை நிலைப்பாடு வேறு என்ன இருக்க முடியும்? சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, மானமும், வீரமும் வளைந்துவிடுமா என்ன?

மன்னிப்பு

மன்னிப்பு

விஜயகாந்த் தனது நிதானம் தவறி நடந்துகொண்டதாக எடுத்துக்கொண்டாலும், துப்புவது அநாகரீகம் என்ற பாலர் பாடத்தை பக்கத்தில் இருப்பவர்களாவது சொல்லி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், சம்பவம் நடந்து அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்திடம், மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்டதற்கு, ‘‘நான் பத்திகையாளர்களிடம் சொன்னதுக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் சொன்னது சரிதான்'' என்றார்.

தப்பென்றே தெரியவில்லை

தப்பென்றே தெரியவில்லை

தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்திக்கொள்வது முறை. ஆனால், தான் செய்தது தவறு எனக்கூட தெரியாத மனநிலையில் உள்ளார் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பது தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்திற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்.

தமிழில் பிடிக்கவில்லை

தமிழில் பிடிக்கவில்லை

ரமணா திரைப்படத்தில் "மன்னிப்பு... தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை" என்று விஜயகாந்த் கதாப்பாத்திரம் பேசும். அதையே நிஜவாழ்க்கையிலும் கடைபிடிக்கலாம் என்று நினைத்துவிட்டார்போலும் விஜயகாந்த். ஆனால், மன்னிப்பதுதான் மனிதனுக்கே உரிய குணம் என்பதை விஜயகாந்த்துக்கு, அவரின் மைத்துனர், மனைவி, உற்றார் உறவினர்கள் என கட்சியில் முக்கிய பொறுப்பிலுள்ளோர்கள், கைத்தாங்கலாக எடுத்துக்கூறுவது நல்லது.

English summary
Vijayakanth refused to say appology for his bad attitude towards journalist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X