For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவள்ளூர்: மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஓட ஓட வெட்டிக்கொலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம் பேடு ஊராட்சி தலைவர் தங்கராஜ் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமழிசையை அடுத்த மேல்மணம்பேடு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கராஜ் , 49. இவர் மேல்மணம்பேடு ஊராட்சி தலைவராக இருந்தார். இவரது மனைவி நிறைமதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. தங்கராஜ் அதே பகுதியில் செங்கல் சேம்பர் தொழில் செய்து வந்தார்.

Village panchayat president hacked to death

இன்று அதிகாலை தங்கராஜ் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் வெங்கடேஷ், மணி ஆகியோருடன் பட்டாபிராம் சாலையில் நடை பயிற்சி சென்றார். அரசு பள்ளி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம மனிதர்கள் திடீரென அவர்களை வழி மறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உள்பட 3 பேரும் உயிர் தப்பி ஓட்டம் பிடித்தனர். தங்கராஜை மட்டும் குறி வைத்த கொலை கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, முதுகில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் கொலைக் கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

தங்கராஜ் உடன் நடைபயிற்சி மேற்கொண்ட நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

தங்கராஜ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளவேடு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொலையுண்ட தங்கராஜ் 2 முறை ஊராட்சி தலைவராக இருந்து உள்ளார். தற்போது மேல்மணம்பேடு ஊராட்சி தலைவர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் தங்கையை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தங்கராஜ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் யாருடனும் மோதல் உள்ளதா? அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 1998ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலையில் தங்கராஜிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த வாரம் திருத்தணி 13-வது வார்டு அதிமுக கவுன்சிலரும், மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான ஆறுமுகம், கண்ணிகாபுரம் சாலையில் உள்ள தனது குடிநீர் ஆலைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, காரை மறித்த 5 பேர் கொண்ட கும்பல், ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் தப்பியோட முயன்ற போதும், விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல், அவரை வெட்டிக் கொன்றுவிட்டுதப்பிச் சென்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மேல்மணம்பேடு ஊராட்சி தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Tension prevailed near Tiruvallur following the murder of the president of Melmananmpedu village panchayat, allegedly by his relatives on Friday.Thangaraj was walking in today morning when an armed gang intercepted and hacked him to death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X