For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வினுப்பிரியாவின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்க லஞ்சம் கேட்ட போலீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: சென்னை சுவாதியின் கொடூர கொலை மனதை விட்டு அகலாத நிலையில், செல்போனில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படத்தை பார்த்த இளம்பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட குற்றவாளியை கைது செய்யும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்று பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

மகளின் ஆபாச படம் வெளியிடப்பட்டது குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளிக்கச் சென்ற போது, ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தை அழிக்க, 2 ஆயிரம் பணமும், ஒரு செல்ஃபோனும் போலீசார் லஞ்சமாக கேட்டதாகவும், அதை கொடுத்த பின்னரும், காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் காட்டிய அலட்சியமே ஒரு பெண்ணின் உயிரை காவு வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த வினுப்ரியா என்ற 20 வயது பெண்ணின் ஃபேஸ்புக்கில் இருந்த போட்டோவை மார்ஃபிங் செய்து ஆபாசமான படங்களோடு இணைத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டான் ஒரு கயவன். அதை வினுப்பிரியாவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் டேக் செய்தான்.

Vinupriya commits suicide after facing sexual harassment on Facebook

தனது போட்டோ இப்படி ஆபாசமாக வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்ரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த போட்டோ அளிக்கப்பட்டது. மீண்டும் அதே போல போட்டோ வெளியாகவே அவமானம் தாங்காமல் வினுப்பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வினுப்ரியா திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்து முடித்துள்ளார். மேற்படிப்பு அடுத்த வருடம் படித்துக் கொள்ளலாம் என்று இந்த வருடம் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மகள் வினுப்ரியாவின் மரணம் அவரது தந்தை அண்ணாதுரையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நெசவுத் தொழிலாளியான அண்ணாதுரைக்கு வினுப்ரியா, ஆகாஷ் என இரண்டு பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளில்தான் மூத்தப்பிள்ளையை பறிகொடுத்து விட்டு நிற்கிறேன் என்று கதறி அழுது கொண்டிருக்கிறார்.

என் பொண்ணு ரொம்ப அன்பான பொண்ணு. நானும் இரண்டு குழந்தைகளையும் அன்பாக வளர்த்தேன். மகிழ்ச்சியாக இருந்த எங்க குடும்பத்தில் ஜூன் 16ம் தேதி இடி விழுந்தார் போல என் செல்போனுக்கு 'ராங்க் கால்' வந்தது. அவளை ஒழுங்கா இருக்க சொல்லுன்னு அசிங்கம் அசிங்கமாக ஒருத்தன் திட்டினான்.

பதிலுக்கு நான், ‘‘டே, நீ யாருடா... என் பொண்ணு எப்படி இருந்தால் உனக்கு என்னடா... நீ என் பொண்ணை காதலிக்கிறயான்னு கேட்டேன். அதெல்லாம் இல்லைன்னு சொல்லி அசிங்க அசிங்கமாக பேசிட்டே, இருந்தான். நாங்களும் சரின்னு விட்டுட்டோம்.
17ம் தேதி என் தங்கை மகன் சதீஸ் , வினுப்ரியா போட்டோவை ஃபேஸ்புக்கில் ஆபாசமாக வந்திருக்குன்னு சொன்னான். நானும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

என் பொண்ணு பார்த்துட்டு கண்ணீர் விட்டு கதறினாள். நாங்கள் அவளை தேற்றி அம்மா, எந்த பையன் மீதாவது சந்தேகம் இருக்கான்னு கேட்டோம். சத்தியமா நான் எந்த பையன் கூடவும் பேசியதில்லை. எனக்கு யாரும் ஆண் நண்பர்கள் கிடையாதுன்னு சொன்னது.

தொடர்ந்து தினமும் ஃபேஸ்புக்கில அப்லோட் பண்ணிட்டே இருந்தானுக. உடனே குடும்பத்தோடு 19ம் தேதி சேலம் எஸ்.பி. அமித்குமார்சிங்கிடம் புகார் மனு கொடுத்தோம். அவர் சங்ககிரி டி.எஸ்.பி. கந்தசாமியிடம் கொடுக்க சொன்னார்.

டி.எஸ்.பி. கந்தசாமியிடம் கொடுத்தோம். டி.எஸ்.பி. கந்தசாமி மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுக்க சொன்னார். மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுத்தோம். மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சேலம் சைபர் க்ரைமில் கொடுக்க சொன்னார்.

சேலம் சைபர் க்ரைமில் கொடுத்தோம். அவர்கள் அந்த புகாரை வாங்கிக் கொண்டு இந்த ஐ.டி. உடனே அழிக்க முடியாது. இது ஆஸ்திரேலியாவில் தான் லிங் இருக்கு. அங்கு சொல்லி தான் அழிக்க முடியும். 10, 15 நாட்கள் ஆகுமுன்னு சொன்னார். இதனால் என் பொண்ணு ரொம்ப மனம் உடைந்து போய் நாங்க இன்று எஸ்.பி. ஆபீஸூக்கு வந்த பிறகு வீட்டை சாத்தி தூக்கு போட்டு இறந்து விட்டாள்.

இறந்த ஒரு மணி நேரத்தில் அந்த ஐ.டி.க்ளோஸ் ஆயிடுச்சு. இந்த செயலை முன்பே செய்திருந்தால் என் பொண்ணு பிழைத்து இருப்பாள். என் பொண்ணு இறப்புக்கு காரணம் காவல்துறை தான். என் பொண்ணுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பொண்ணுக்கும் நடக்க கூடாது.
அந்த குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ணும் வரை என் மகளின் உடலை வாங்க மாட்டேன்.

என் பொண்ணை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகின்றவனை பிடிக்க வேண்டும் என்று இந்த காவலர்களுக்கு 2000 ரூபாய் பணமும், ஒரு செல்போனும் வாங்கி கொடுத்தேன். போலீசின் அலட்சியமாக இருந்த என் தங்கம், மானம் தாங்காம மாண்டு போயிடுச்சே. இப்ப இந்த காவலர்கள் விசாரிக்க வராங்க. இந்த நாடு நாசமா போச்சு. எந்த பெண்களும் நிம்மதியாக வாழ முடியாது என்று கதறுகிறார் வினுப்பிரியாவின் தந்தை.

வினுப்ரியாவின் உடல் சேலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. குற்றவாளியை கைது செய்து அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வரை என் மகளின் சடலத்தை வாங்கமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த சேலம் எஸ்.பி பகிரங்க மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து மகளின் உடலை பெற்றுக்கொண்டனர்.

குற்றவாளியை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

English summary
Vinupriya, a B.Sc student began facing harassment on Facebook after she was tagged in a picture which was obscenely morphed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X