For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களால நான் கஷ்டப்படுறேன்.. வேதனைப்பட்ட விஷ்ணுப்பிரியா.. யுவராஜ் வெளியிட்ட பரபரப்பான உரையாடல்

Google Oneindia Tamil News

நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவிற்கும், தனக்குமான தொலைபேசி உரையாடல் ஆடியோவை வெளியிட்டுள்ளார் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் தனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் இடையே நடந்த உரையாடலையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் யுவராஜ்.

அதில், மிகவும் கேஷூவலாக, ‘ஹலோ குட்மார்னிங் நல்லாயிருக்கீங்களா?' என தன் பேச்சை ஆரம்பிக்கிறார் யுவராஜ். முதலில் யார் என்று அடையாளம் தெரியாமல், ‘நீங்க' என கேள்வி எழுப்புகிறார் விஷ்ணுபிரியா. அதற்கு யுவராஜ், ‘என்ன மேடம் பொசுக்குனு இப்டிக் கேட்டுப்புட்டீங்க. எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்டவங்க தான், ரெண்டு மாசமா என்னைத் தான் தேடிட்டு இருக்கீங்க. யுவராஜ் பேசறேன்' என்கிறார் யுவராஜ்.

Vishnupriya - Yuvaraj cellphone conversation released

அதனைத் தொடர்ந்து இருவரின் பேச்சுக்களும் இதோ உரையாடல் வடிவத்தில்,

வி.பி: இது தான் உங்க நம்பரா?

யுவராஜ்: ஆமா மேடம். இந்த நம்பரைத் தான் நான் வச்சிருக்கேன். இது உங்க டிபார்ட்மெண்ட்ல எல்லாருக்குமே தெரியுமே

வி.பி: என்ன பிரச்சினை உங்களுக்கு? எங்க இருக்கீங்க இப்போ? ஏன் தலைமறைவா இருக்கீங்க? உங்களால நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்

யுவராஜ்: நீங்க மட்டும் இல்ல மேடம்.. டிபார்ட்மெண்ட்ல நேர்மையா இருக்கற எல்லா அதிகாரிகளுமே கஷ்டப்பட்டுட்டுத் தான் இருக்கீங்க. அது எனக்கு நல்லாவேத் தெரியும்.

வி.பி. : இது வெரி வெரி பேட்... நான் அந்த 6 பேர் மேல குண்டாஸ் போடக்கூடாதுனு எவ்ளோ அதிகாரிங்க ஸ்ட்ரைக் பண்றாங்கனு எனக்குத் தெரியும். நீங்க இப்போ எங்க இருக்கீங்க?

யுவராஜ்: நான் இப்போ கேரளால கன்னூர்ல இருக்கேங்க

வி.பி: சரி ஏன் சரண்டர் ஆகமாட்டேங்குறீங்க.? என்ன பிரச்சினை உங்களுக்கு?

யுவராஜ்: எதுக்காக மேடம் சரண்டர் ஆகணும்? ஆரம்பத்துல இருந்து இதுல என்ன நடந்துட்டு இருக்கு, நான் சக்கரபாணி சார் கிட்ட பேசினேன். அப்புறம் உங்களோட கட்டுப்பாட்டுல இந்த வழக்கு கிடையாது. நீங்க நினைச்சா இதுல சட்டப்படி நடக்கமுடியும்னு நீங்களே சொல்லுங்க, நான் நாளைக்கே சரண்டர் ஆகறேன்.

வி.பி. : நீங்களே ஒரு லா கிராஜூவேட். சரண்டரான சுகுமாரை எப்படி சிறையில் அடைத்தோமோ அதேபோல், நீங்களும் சரண்டரானால், உங்களையும் ரிமாண்ட் செய்வோம். அதுக்கு அப்புறம் நீங்க கேசை பேஸ் பண்ணிக்கோங்க.

யுவராஜ்: கேஸை பேஸ் பண்றது பெரிய விஷயமேயில்லை மேடம். அதுல உள்ள இருக்கற விஷயங்கள் தான் பிரச்சினையே. இது ஒரு மர்டர் கேஸ்னு மட்டும் இருந்திருந்தா, 4வது நாளே நான் சரண்டர் ஆகியிருப்பேன். நான் சரண்டர் ஆகாததுக்கு முதல் காரணம், அப்போ நான் உள்ள வந்திருந்தா வெளில இருந்த யாரையுமே கண்ட்ரோல் பண்ணியிருக்க முடியாது. அது பெரிய கலவரத்துல போய் முடிஞ்சிருக்கும். எப்.ஐ.ஆர் போட்டதும் பேஸ்புக் ஸ்டேடஸ் மூலமா நான் சரண்டர் ஆகறது பத்தி சொல்லியிருந்தேன். அதுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனா, நீங்க ரெண்டு பேரை ரிமாண்ட் பண்ணினதுமே பிரேக். அதுக்கடுத்து உங்களது நடவடிக்கைகளால் முடிந்தால் பிடிக்கட்டும் என தலைமறைவானேன். இது தான் நடந்த உண்மை. மற்றபடி, சரண்டர் ஆகக்கூடாது, ஓடி ஒளிய வேண்டும் என்ற எண்ணமில்லை.

வி.பி.: சரி, நீங்க சொல்றதை நான் ஏத்துக்கறேன். ஆனா, கொஞ்சநாள் கழிச்சாவது நீங்க சரண்டர் ஆகியிருந்தா இந்த கேஸை ஈஸியா முடிச்சிருக்கலாமே? நீங்க கிடைச்சிருந்தா இந்தக் கேஸ் இவ்ளோ தூரம் வளர்ந்திருக்காது. ஒரு சாதாரண கொலை வழக்கா இது முடிஞ்சிருக்கும். உங்களையும், உங்க குடும்பத்தையும் விட்ருங்க, இந்த கேஸால எவ்ளோ போலீஸ்காரங்களுக்கு எவ்ளோ பிரஷர் தெரியுமா? அது இந்த டிபார்ட்மெண்ட்ல இருக்கற எனக்குத் தான் தெரியும்.

யுவராஜ்: உண்மை தான் மேடம். தமிழ்நாட்டுல நீங்க என்னை சலிக்காத இடமே இல்லை. கோயமுத்தூர்ல 45 நாளைக்கு முன்னால சாப்டுறதுக்காக ஒரு ஹோட்டலுக்கு போய் இருந்தேன். காரை நிறுத்திட்டு போய் சாப்டுட்டு வந்தேன். அந்த கடைக் கேஷியர் என்னை மேலும் கீழுமா பார்த்தார். ஏங்க இப்டி பார்க்குறீங்கனு கேட்டேன். அதுக்கு ‘உங்க பேரு யுவராஜா, சங்ககிரியானு கேட்டாரு. அதோட உங்களைக் கேட்டு 3 தடவை போலீஸ் வந்து போட்டோ காமிச்சு விசாரிச்சாங்கனு சொன்னாரு. அப்டியா, நான் இப்போ சாப்டுட்டு போனேனு சொல்லிடுங்கனு சொன்னேன். அதேமாதிரி, ஹோட்டல்ல ரூம் போட போனா, சார் உங்கபேர்ல போடாதீங்க, நீங்க வந்தா போலீஸ் தகவல் சொல்லச் சொல்லி இருக்காங்க'னு சொன்னாங்க. இங்க மட்டுமல்ல சென்னையிலும் இதே நிலைமை தான். உண்மையச் சொல்லணும்னா தலைமறைவா இருக்கணும்னு சத்தியமா எனக்கு எண்ணமேயில்லை. ஆரம்பத்துல இருந்து பிரஷர் அதிகமாகவும் தான் இப்டி ஆகிடுச்சு. ஒரு வாரம் ரிலாக்ஸா விட்ருந்தா நான் அப்பவே சரண்டர் ஆகியிருப்பேன்.

இதுல உங்களை நான் தப்பு சொல்லலை. உங்களுக்கு மேல இருக்கற அதிகாரிகள், உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ. உண்மையிலேயே உங்க மேல எனக்கு வருத்தம் தான் . பாவம் நீங்க இவ்ளோ கஷ்டப்படறீங்க. ஆனா சூழ்நிலை இப்டி அமைஞ்சிடுச்சி. நேத்துக் கூட வீட்டுக்கு போய் இருந்தீங்க போல, என் மனைவியை ரிமாண்ட் செய்ய.

என்கிட்ட நீங்க ஏதாவது கேள்வி கேட்கணும்னா கேளுங்க.. அதுக்கு தான் மெயினா நான் இப்போ போன் பண்ணினேன்.

வி.பி.: சரண்டர் ஆகறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?

யுவராஜ்: எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு முன் ஜாமீன் வாங்குறதுல டிபார்ட்மெண்டுக்கு என்ன பிரச்சினை?

வி.பி. : இந்த கேஸ்ல நீங்க இல்ல, நான் நினைச்சாக்கூட முன் ஜாமீன் தர்றதுக்கு ரெடியா இல்லை. நிலைமை இப்டி இருக்கு. இதுல சின்ன பேப்பரை நகர்த்தினாக் கூட எனக்கு 1000 போன் கால் வருது.

யுவராஜ்: எனக்குத் தெரியாதா மேடம், இது என்ன கேஸு, எப்டி பெயில் கிடைக்கும்னு. எனக்கும் லீகலா தெரியும் இதுல என்ன பிரச்சினைகள் இருக்குனு. ஆனா, எனக்கு உண்டான முயற்சிகளை நான் செஞ்சுத்தான ஆகணும். நீங்க சொல்ற மாதிரி இது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை நடந்தது தான் பிரச்சினை. ஒரு கொலை கேஸுங்கறதுக்காக இதுல இவ்ளோ தீவிரம் காட்டுறாங்களா மேடம். இதுமாதிரி எல்லா கொலை கேஸ்-லயும் தீவிரம் காட்டலையே?

வி.பி.: நீங்க டிபார்ட்மெண்டைக் குற்றம் சாத்துறீங்க. எதையுமே டிபார்ட்மெண்ட் தன்னிச்சையா முடிவு எடுக்க முடியாது.

யுவராஜ்: நான் ஆரம்பத்துலயே சொன்னமாதிரி, நீங்க சட்டத்துக்கு உட்பட்டு இதுல நடவடிக்கை எடுக்க முடியும்னு உறுதி கொடுங்க, நாளைக்கு காலைல 10 மணிக்கு நான் சரண்டர் ஆகறேன்.

வி.பி.: சரி நீங்க வாங்க, யார் என்ன பண்ணிடப் போறாங்க?

யுவராஜ்: யாரும் ஒண்ணும் பண்ணிடமுடியாதுனு எனக்கு தெரியும். நான் இப்போ சரண்டர் ஆனா, கந்தசாமி அண்ணன் வாங்குன அத்தனை அடிக்கு ஏதாவது மரியாதை இருக்கா?

வி.பி.: நீங்க மட்டும் நாளைக்கு சரண்டர் ஆகுங்க. இதுவரை கைதான எல்லா குண்டாஸையும் நான் கேன்சல் பண்றேன்.

யுவராஜ்: இந்த யுவராஜூக்காகத் தான் அத்தனை பேர் உள்ள போனாங்க, அடி வாங்குனாங்க. அந்த ஒண்ணுக்காகத் தான் நான் இப்போ மாட்டேன்னு சொல்றதுக்கான காரணம். நீங்க யார்யாரு என்கூட தொடர்புல இருக்காங்கனு நினைக்குறீங்களோ, அவங்கலாம் நிச்சயமா இல்லை. என்கூட தொடர்புல இருக்கறவங்கள நிச்சயமா உங்களால கண்டுபிடிக்க முடியாது. அங்க நடக்குற அத்தனை விசயமும் எனக்குத் தெரியும். அந்தளவுக்கு இல்லைனா நாம இயக்கத்தை நடத்தமுடியாது இல்லையா?

வி.பி: ஒரு கொலை கேஸ்ல இத்தனை பேர் உள்ள போகணுமா? இன்னும் அந்த 6 பேர் மேல குண்டாஸ் அப்ளை பண்ணலை. பண்ணக்கூடாதுனு நான் ஒத்தக்கால்ல நின்னுட்டு இருக்கேன். அப்டி இருக்கறப்போ நீங்க வந்து சரண்டர் ஆகுங்க.

இவ்வாறு யுவராஜைத் தொடர்ந்து சரண்டர் ஆகச்சொல்லி அந்த உரையாடலில் விஷ்ணுபிரியா வலியுறுத்துகிறார். ஆனால், அதற்கு அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி மறுக்கிறார் யுவராஜ்.

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை இறுதிக்கட்டதை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஆடியோ வெளியீடு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The absconding accused in Gokulraj murder case Yuvaraj has released a audio today, which has the cellphone conversation between him and DSP Vishnupriya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X