For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் தமிழகத்தில் ஒரு 'காவேரி'.. வஞ்சிக்கப்படும் தூத்துக்குடி விவசாயிகள் போராட்டம் - "எக்ஸ்க்ளூசிவ்"

By Shankar
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்ட விவசாயத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடப்படாததால், விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் இரு முக்கிய அணைகளான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில், பெய்து வரும் மழையினால் நீர்மட்டம் உயர்ந்தது. பாபநாசம் அணையில் 95 அடி உயரத்திற்கு நீர்மட்டம் இருந்த நிலையில், 1400 முதல் 1800 கன அடி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

Water dispute between Tirunelveli and Thoothukudi districts

அதைத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு மூலம் நெல்லை மாவட்டத்திற்கு 1200 கன அடி தண்ணீரும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெறும் 200 கன அடி மட்டுமே திறந்து விட்டார். அதிலும் 100 கன அடி தூத்துக்குடி மாவட்ட தொழிற்சாலைகளுக்கும் குடிநீருக்கும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 100 கன அடியில் வடகால் மற்றும் தென்கால் பாசனத்திற்கு தலா 50 கன அடி வீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பும் இருக்கையில், நெல்லை மாவட்ட கலெக்டரின் இந்த 'ஓரவஞ்சனை' நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

Water dispute between Tirunelveli and Thoothukudi districts

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் என்.வெங்கடேஷிடம் 4 தடவை இது குறித்து விவசாயிகள் மனு வழங்கியுள்ளனர். இரு மாவட்டக் கலெக்டர்களும் நண்பர்கள் என்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று திங்கட்கிழமை விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இன்னும் ஒரிரு தினங்களில் தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற கலெக்டரின் உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டால் தூத்துக்குடி மாவட்ட அளவில் பொதுமக்களைத் திரட்டி, நீதி கேட்டு போராடுவோம் என்று கூறினார்கள்.

குலையன்கரிசல், கூட்டாம்புளி, கோரம்பள்ளம், சேர்வைகாரன்மடம், மாரமங்கலம், தீப்பாச்சி மற்றும் அகரம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, பெண்கள் உட்பட சுமார் 300 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் திரண்டிருந்தனர். விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை பெருமாள் முன்னெடுத்துச் சென்றார்.

Water dispute between Tirunelveli and Thoothukudi districts

காமராஜர் ஆட்சிக்காலத்தில், தூத்துக்குடி கடை மடை விவசாயிகள் வரை தனி வரி வசூலித்து மணிமுத்தாறு அணை கட்டப்பட்டதாகவும், அந்த அணையில் 50 அடிக்கு மேல் உள்ள நீர் மட்டுமே தற்போதைய நெல்லை மாவட்ட பகுதிகளுக்கு பாத்தியதை உண்டு என்றும் ஒப்பந்தம் போடப்பட்டதாம். மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 50 அடிக்கு குறைவாக இருக்கும் போது, தூத்துக்குடி மாவட்ட பகுதி விவசாயத்திற்கு திறந்து விட வேண்டுமாம். தற்போது 45 அடி உள்ள நிலையில், அங்கிருந்தும் தண்ணீர் திறந்து விட நெல்லை மாவட்ட கலெக்டர் மறுக்கிறார் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரே மாநிலத்தில் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீரை பங்கு போட்டுத் தர இயலாதவர்களுக்கு, கர்நாடக மாநிலத்திடம் தண்ணீர் கேட்க என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியையும் விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.

Water dispute between Tirunelveli and Thoothukudi districts

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட கால்வாய்களிலிருந்தும், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நேரடியாகவும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து வரும் நிலையில், நெல்லை மாவட்ட நிர்வாகமும் வஞ்சிக்கும் போது, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தெரிகிறது.

தமிழகத்திற்குள்ளேயே ஒரு காவேரி பிரச்சனை உருவாகாமல் தடுக்க வேண்டியது முதல்வரின் கடமையாகும்.

- ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

English summary
There is water dispute between Thoothukudi and Tirunelveli district farmers. Upper stream Tirunelveli district collector is diverting all the water for his district, leaving Tuticorin district farmers in distress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X