ஒகேனக்கல்: நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல், சுற்றுலா பயணிகளுக்கு தடை.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரிசல்கள் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் 8வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,500 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு
இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 80,000 கன அடியில் இருந்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

8வது நாளாக தடை
இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தால் ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 8ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல்லில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் ஒகேனக்கல்லை சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

தீயணைப்புத்துறை முகாம்
பொதுமக்களின் பாதுகாப்புக்காக தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.