For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோறே சொர்க்கம் சொக்கநாதா… நாக்கு கேக்கு… நான் என்ன செய்ய?

Google Oneindia Tamil News

சென்னை: ஏலே.. நாக்கு கேக்கு.. நான் என்னச் செய்ய? என்பார் எனக்குத் தெரிந்த அண்ணாச்சி. சோத்துல அண்ணாச்சியை அடிச்சிக்க ஆளே கிடையாது. உணவை அப்படி ரசிச்சி சாப்பிடுவாரு மனுஷன். இப்படி சோறே சொக்கநாதன்... சோறு கண்ட இடம் சொர்க்கம்... என என் நட்பு வட்டத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். என்ன தின்றோம்னே தெரியாம அபக்கு, அபக்குன்னு அடிச்சிகிட்டு வேலைக்கு ஓடி என்னத்தை கண்டோம், அப்படி ஒரு வாழ்க்கை எதுக்குன்னேன் என்பதே இவர்களின் வாதம். இந்த பொறப்புதான்.. நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது..ன்னு ஒரு பாட்டு வருமே, அந்த வரிகளின் வாழும் உதாரணங்கள் நம்ம ஆட்கள்.

we are food addicts but dont know how to live a healthy life

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நான் எந்த ஊருக்காவது செல்வதாக இருந்தால், அவரிடம் இந்த ஊருக்கு போகப் போறேன்னு சொல்லுவேன். உடனே, அந்த ஊர்ல பஸ் ஸ்டாண்ட் தாண்டி கொஞ்ச தூரம் போனா ஒரு சின்ன ஹோட்டல் வரும். அங்க போய் மட்டன் பாயா சாப்பிடுங்க, அசந்துபோயிடுவீங்க என்பார். இப்படி தமிழ்நாடு முழுக்க எந்த இடத்தில் என்ன ஸ்பெஷல் அயிட்டம் கிடைக்கும் என்பது அவருக்கு அத்துப்படி. பாய்ஸ் படத்துல வர்ற செந்தில் மாதிரி, மனுசுக்குள்ளேயே ஒரு சாப்பாட்டு டைரி வைத்திருப்பார்.

நாகைப்பட்டினம் போறதா இருந்தா வழியில காரைக்கால்ல இந்த இடத்துல ஒரு மெஸ் இருக்கு. அங்க போங்க. வாசல்ல ஒரு பெரிய யானை படம் மாட்டியிருக்கும். மண்பானை ஸ்பெஷல் மீன் குழம்பு கிடைக்கும். அப்படி ஒரு டேஸ்ட். இப்படி ஒரு குழம்புக்காகதான் சாகப் போறோம்னு தெரிஞ்சா அந்த மீனே நேரா சட்டிக்குள்ள டைவ் அடிச்சிடும். அப்படி ஒரு அட்டகாச சுவை, அற்புதமான சுவை, அசரடிக்கிற சுவை, அசால்ட் பண்ற சுவை என்று டிஆர் ரேஞ்சுக்கு அடுக்கிக்கிட்டே போவார். ஆனா போறதுக்கு முன்னாடி காலெண்டர் பார்த்துக்கங்க, ஏன்னா அமாவாசை, பௌர்ணமி அன்னைக்கு அந்த கடை லீவு என்பது வரை, நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரரைப் போல நம்மை பக்காவாக தயார் செய்து அனுப்புவார்.

we are food addicts but dont know how to live a healthy life

என் பெரியப்பா ஒருத்தர் இருந்தார். ஒரு கரண்டி மாவை எடுத்து அப்படி ஒரு சுத்து ஊத்தி, மேலாப்புல மழைச்சாரல் போல வெங்காயத்தை தூவி.. என்று ஊத்தப்பத்துக்கு வடிவேல் ஒரு நீண்ட செய்முறை விளக்கம் சொல்லுவாரே, அப்படிப்பட்ட ஆளு. நாங்கள் சின்ன பசங்களா இருக்கும்போது, அவருடன் ஹோட்டலுக்கு போனால், என்ன இருக்கிறது என்பதை சர்வரிடம் முதலில் விசாரிப்பார். பின்னர் தான் ஆர்டர் செய்யும் அயிட்டங்கள் எப்படி தயாரிக்கப்பட வேண்டும் என பாடம் எடுப்பார். தோசையில் எண்ணெய் கம்மியா, நல்லா முறுகலா.. என்று தொடங்கி அவர் முடிக்கும்போது எங்களுக்கு ஒருபக்கம் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிடும். இன்னொரு பக்கம் அவர் சொன்னதை கேட்டே நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். அவர் சொன்னா மாதிரியே செஞ்சு கொண்டு வந்துட்டா, வாய் வலிக்கிற அளவுக்கு சமையல்காரரை புகழ்ந்து தள்ளிடுவார்.

அதேபோல பில்லுக்கு பணம் கொடுக்கும்போது, கல்லாவில் இருக்கும் முதலாளியிடம் இந்தந்த அயிட்டம் சிறப்பா இருந்தது, இதில இன்னும் கொஞ்சம் இப்படி பண்ணியிருந்தா பட்டையை கிளப்பியிருக்கும் என்பது வரை Feedback கொடுக்கத் தவற மாட்டார். இப்போதுதான் பெரிய ஹோடல்களில் சாப்பிட்டு முடித்ததும் Feedback வாங்கும் முறை வந்திருக்கிறது. இதையெல்லாம் யாரும் கேட்காத போதே, அந்த காலத்துலயே முறையா செஞ்சவர் எங்க பெரியப்பா.

எங்க மாமா வேற லெவல். அவர் கிராமத்து ஆளு. ஹோட்டலுக்கே போக மாட்டார். ஆனால் அவர் வீட்டு விருந்துல கிடைக்கிற அயிட்டங்களை எந்த ஹோட்டலும் மேட்ச் பண்ண முடியாது. அப்படி வகை வகையா எடுத்துட்டு வந்து இலையில அடுக்கிறுவாங்க. நடக்குறது, பறக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறதுன்னு எல்லாமே இலையில இருக்கும். அந்த இலையை பார்த்தாலே பசி தீர்ந்துரும். சாப்பிடும்போதும் நம்ம நெப்போலியன் மாதிரி பக்கத்துல உட்கார்ந்து, இந்த காலத்து பசங்க என்னடா சாப்பிடுறீங்க.. நல்லா இறங்கி சாப்பிடு, இறங்கி சாப்பிடுன்னு ஏதோ போருக்கு இறக்கிவிடுறா மாதிரி நம்மை மோட்டிவேட் பண்ணுவாரு. அந்த இலையில இருக்கிற எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டா, உங்களால தானா எழுந்துக்க முடியாது, யாராவது கைத்தாங்கலா எழுப்பிதான் விடணும். அந்த இலை முன்னாடி உட்கார்ந்து சாப்பிட்டுட்டு தானா எழுந்த கூட்டம் வரலாறுலயே இல்லேன்ற ரேஞ்சுக்கு இருக்கும்.

we are food addicts but dont know how to live a healthy life

இப்படிப்பட்ட வம்சத்துல வந்துட்டு நாங்க சும்மா இருப்போமா. ஞாயிற்றுக்கிழமை ஆனா கூகுள்ள விதவிதமான ஹோட்டல்களை தேடிப் போய் பின்னி பெடலெடுக்குறோம். இதுக்காகவே கூகுளுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் சொல்லணும். கூகுள் காட்டத் தவறும் உணவகங்கள் கூட எங்கள் கண்ணில் இருந்து தப்ப முடியாது. மெரினா சுந்தரி அக்கா கடை, சுக்குபாய் பிரியாணி, மந்தைவெளி டவுசர் தாத்தா கடை தொடங்கி அதிகாலையில 3 மணிக்கே சூடா பிரியாணி கிடைக்கிற ஓட்டேரி ஏரியா கடை வரைக்கும் நமக்கு அத்துப்படி.

ஒருமுறை கொட்டும் மழையில் குற்றாலம் பார்டர் பரோட்டா கடையில் பிச்சிப் போட்ட பரோட்டாவை சுடச்சுட சால்னாவில் முக்கி, நல்லெண்ணையில் பொறித்த நாட்டுக் கோழியையும் தொட்டுக்கொண்டு சாப்பிட்ட அதிஅற்புத நாட்களை எப்படி மறக்க முடியும். இந்த பரோட்டாவை தொட்டுக்கொண்டு சாப்பிடக் கூடாது, நல்லா பிசைஞ்சு சாப்பிடணும் என்று உடன் வந்த நண்பர் பாடம் எடுத்தார். சாப்பிட்டு முடித்து அந்த தூக்கலான மிளகுத்தூள் காரம் படிந்த உதடுகளோடு மழையில் நனைந்துகொண்டே நடந்தபோது, வானில் பறப்பது போலவே இருந்தது.

வாணியம்பாடி ரயில்வே கேட் அருகில் சந்தில் இருக்கும் ஒரு சிறிய கடையில், சாப்பிட்டதைப் போன்ற ஒரு அசத்தலான தந்தூரி சிக்கனை இதுவரை வேறு எங்கும் நான் சாப்பிட்டதில்லை. காலியான டீசல் டிரம்மில் உள்ளே தணல் கனன்று கொண்டிருக்க, கம்பிகளில் குத்திய சிக்கன் துண்டுகள் வெந்தணலில் நிதானமாகவும், சீராகவும் வெந்து கொண்டிருந்தன. மனிதன் உணவை எப்படி எல்லாம் சமைக்க கற்றிருக்கிறான் என்று நினைத்துப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.

டாடி ஆறுமுகம் சமையல் தொடங்கி மல்லிகா பத்ரிநாத் சமையல் வரை எக்கச்சக்க சமையல் குறிப்புகள் இன்று யூ ட்யூப்பில் சக்கை போடு போடுகின்றன. புத்தக கண்காட்சிகளில்கூட சமையல் குறிப்பு புத்தகங்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. இதெல்லாம் ஏதோ இன்று நேற்று தொடங்கிய பழக்கம் அல்ல. சங்க காலத்திலேயே சமையல் குறிப்பு புக் இருந்திருக்கு. உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு பேர் மடை நூல். இதை வீமசேனன் என்பவர் எழுதி இருக்காரு. இந்த புத்தகத்துல ஏராளமான நுட்பமான சமையல் டெக்னிக்குகளை சொல்லி இருக்காராம். இவருக்கு அந்த காலத்துல நிறைய ஃபாலோயர்ஸ் இருந்திருக்காங்க. இது எப்படி உனக்கு தெரியும்னு கேட்கறீங்களா? இதைப் பத்தி சிறுபாணாற்றுப் படைப் பாடலில் ரொம்ப விரிவா சொல்லப்பட்டிருக்கு.

அதேபோல சங்க கால மக்கள் சாப்பாட்டை வாழை இலையிலும், தேக்கு இலையிலும் சாப்பிட்டாங்களாம். வசதியானவங்க தங்கத்தட்டிலும், வெள்ளித்தட்டிலும் சாப்பிட்டிருக்காங்க. அதேபோல சமைச்சதும் சுடச்சுட, நல்லா மென்று சாப்பிடுவாங்களாம். நாக்குனால நல்லா உணவை சுழற்றி மென்று சாப்பிடுவதை, "நாத்திறம் பெயர்ப்ப உண்டு" என்று புறநானூறு சொல்கிறது. ஆனா நாம இன்னைக்கு கண்டதையும் ஃபிரிட்ஜில் வைச்சு, அப்புறம் அதையே மறுபடியும் சூடுபண்ணி, அவசர அவசரமா ஒழுங்கா மெல்லாம அப்படியே விழுங்கின்னு.. எப்படி சாப்பிடனும்னு கூட தெரியாம சாப்பிட்டுகிட்டு இருக்கோம்.

வாழ்க்கை ரொம்ப சின்னது... அதனால இருக்கிற காலத்துல நல்லா ரசிச்சு சாப்பிட்டு சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிங்க பாஸ்.

- கௌதம்

English summary
Most of us are food addicts. But many failed to how to eat properly, live happily and healthy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X