For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளையராஜா செய்ததை பாராட்ட வேண்டும்!

By Shankar
Google Oneindia Tamil News

தன்னை போலீஸ் அதிகாரி எனச் சொல்லி ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறார். அவரிடம் உங்களால், "ஐடி கார்டு காண்பிக்க முடியுமா சார்?" என கேட்க முடியுமா? முடியாது! ஒருவேளை முடிந்தால் உடனே அறை விழும். அல்லது, "எவ்ளோ திமிருடா உனக்கு?" என ஏகவசனத்தில் பேசுவார்களேயொழிய ஐடி கார்டை காட்ட மாட்டார்கள். அதை மிகப்பெரிய மரியாதைக் குறைச்சலாக எடுத்துக் கொள்வார்கள். இளையராஜா எஸ்பிபி விஷயத்துக்கும் இந்தியாவில் நிலவும் இந்த பொது மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படுவதைப் போல சேவைகளுக்கு சட்டப்படி ஒப்பந்தம் போட்டுக்கொள்வது, முறைப்படி கையெழுத்து வாங்குவது, சந்தேகத்தைப் போக்க ஐடி கார்டு கேட்பது போன்ற சராசரியான விஷயங்கள் இந்தியாவில் அவமரியாதையாகப் பார்க்கப்படுகின்றன. மிஞ்சிப்போனால், "என்ன சார் எங்க மேல நம்பிக்கை இல்லையா சார்?" என அறிவே இல்லாமல் கேட்பார்கள். குறிப்பாக, வாய்ப்பு கொடுப்பதை வாழ்க்கை கொடுப்பதாக நினைக்கும் சினிமாத் துறையில் நடிப்பு, இசை, எழுத்து ஆகியவற்றுக்கு சட்டப்படி ஒப்பந்தம் போட்டுக் கொள்வதெல்லாம் கனவிலும் நினைக்க முடியாத விஷயங்கள். நல்ல அனுபவமுள்ள ஆட்களே கூட மேனேஜர்களை வைத்துதான் இதைச் செய்கிறார்கள். ஏனெனில் நேரடியாக இது போன்ற விஷயங்களைப் பேசுவது எதிரில் இருப்பவரின் மீதான நம்பிக்கையின்மையாகப் பார்க்கப்படுகிறது. அப்படி கேட்டு ஒருவேளை ஒப்பந்தம் போட்டாலும் அதை தனிப்பட்ட முறையில் தங்கள் நம்பகத்தன்மைக்கு நேர்ந்த அவமானமாக எடுத்துக் கொள்கிறார்கள். இச்சூழலை மனதில் வைத்துதான் இளையராஜா தரப்பில் இருந்து எஸ்பிபிக்கு சட்டப்படி அனுப்பப்பட்டிருக்கும் வக்கீல் நோட்டீசை பார்க்க வேண்டும்.

We should appreciate Ilaiyaraaja

இளையராஜா தான் ஏற்கனவே சம்பளம் வாங்கிக் கொண்டு போட்ட பாடல்களுக்கு ராயல்டி கேட்டிருக்கிறார். ஆனால் சினிமாவில் பாட்டுக்கும், எழுத்துக்கும் சம்பளமே கொடுக்காமல்தான் பெரும்பாலான வேலைகள் வாங்கப்படுகிறது. இதில் எங்கே போய் ராயல்டி கேட்பது? அதிலும் வளர்ந்துவரும் பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரை எழுத்தாளர் என்றால் ஒப்பந்தம் போடுவதெல்லாம் கனவிலும் நடக்காத விஷயம்தான். இளையராஜாவே எத்தனையோ படங்களுக்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்ததாக சொல்லப்படுவதுண்சு.

ஆனால் ஏஆர் ரஹ்மான் தனக்கு கொஞ்சம் புகழ் கிடைத்ததும் சீக்கிரமே சுதாரித்துக் கொண்டார். அவர் வழியில் தாமதமாக என்றாலும் இளையராஜாவும் இப்போது சுதாரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தாமதம் என்பதால், "இதுவரைக்கும் சும்மாதானே இருந்தார். இப்போது என்ன?" என்ற கேள்வி இளையராஜாவை நோக்கி எழுப்பப்படுகிறது. அவர் சும்மா இருக்கவில்லை, இதெல்லாம் தெரியாமல் இருந்தார். இப்போது புரியத் துவங்கியிருக்கிறது அவ்வளவுதான்.

இளையராஜா பணம் வாங்கி இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளர். அப்படித்தான் இந்த விஷயத்தில் அணுக வேண்டுமே தவிர, அவரை இசைக் கடவுள் என்றும், வானம் மழையைத் தருவதைப் போல அவர் சும்மாவே இசையைத் தரவேண்டும் என்பதெல்லாம் அவர் ரசிகர்கள் அவர்மீது வளர்த்துக் கொண்ட அதீத கற்பனைகள். அப்படிப் பார்த்தாலும் அவர் ஒன்றும் பாத்ரூமில் தன் பாடலை ரசித்துப் பாடும் ரசிகனிடமோ கச்சேரிகளில் பாடி பிழைப்பு நடத்துபவர்களிடமோ, அட பணம் வாங்கிக் கொண்டு பாடல்களை பதிவு செய்து கொடுக்கிறார்களே... அவர்களிடமோ வந்து பணம் கேட்கவில்லை. அவரது இசை வணிகரீதியாக உபயோகிக்கப்படும்போது அதில் பண உரிமை கோர அவருக்கு முழு உரிமை உள்ளது. இதே எஸ்.பி.பி, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்காமல் ஓசியிலா பாடிக்கொண்டிருப்பார்?

சட்டப்படி இளையராஜா எடுத்திருக்கும் நடவடிக்கையை எஸ்.பி.பிக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவோ, இளையராஜாவின் சின்னப்புத்தியாகவோ பார்ப்பதெல்லாம் நம் பக்குவமின்மையைதான் காட்டுகிறதே தவிர அது எந்த வகையிலும் இளையராஜாவை சிறுமைப்படுத்துவதாக இல்லை. அவரிடம் இதை எஸ்பிபி பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாம். காரணம் அவருக்குத்தான் தேவை. இளையராஜா போய் பேச முடியாது. யாருக்குத் தேவையோ அவர்தானே போய்ப் பேச வேண்டும்!

இந்த விஷயத்தை இளையராஜா என்ற தனிமனிதனின் பிரச்சினையாக பார்க்காமல் பரந்துபட்டு பார்க்க வேண்டிய அத்தியாவசிய தேவை உண்டு. அறிவுசார் சொத்துரிமை, காப்பிரைட்ஸ் விஷயத்தில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் போகவேண்டிய தூரம் பல லட்சம் மைல்கள் உண்டு. ஏதோ சொன்ன வார்த்தையை அப்படியே காப்பாற்றும் பெரிய நியாயவான்கள் போல, "அக்ரீமெண்ட் எல்லாம் எதற்கு?" "நம்ம மேல நம்பிக்கை இல்லையா சார்?" என்றெல்லாம் பேசி பின்னர் மிளகாய் அரைக்கும் சமூகத்தில், குறிப்பாக தமிழ் சினிமாவில் இதுபோன்ற கறாரான நடவடிக்கைகள் கண்டிப்பாக தேவை. ஆயிரம் மேடைகளில் ஒன்றாக ஆரத்தழுவி பாடிய எஸ்.பி.பியிடமே இப்படி இளையராஜா கறாராக நடந்துகொண்டிருப்பது நல்லதொரு உதாரணம்தான். ராயல்டி விஷயம் மட்டுமல்லாமல், சம்பளம் போன்ற பிற விஷயங்களிலும் இந்த முறை எந்த கூச்சநாச்சமும், இடக்கரடக்கல்களும் இல்லாமல் பின்பற்றப்பட வேண்டும்.

அதற்காக புது இசையமைப்பாளர்களும், திரை எழுத்தாளர்களும், பாடலாசிரியர்களும் இதைச் செய்ய முடியாதுதான். ஆனால் இளையராஜா எனும் இமயமலையிடமிருந்து ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் மெல்ல நாளை எல்லா மடுக்களையும் எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருட்டிலேயே பெரிய திருட்டு தோளில் கைபோட்டு திருடுவது. அது சர்வசாதாரணமாக நடக்கும் இந்திய / தமிழ் சினிமா சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளை சிறிய நடைமுறைச் சிக்கல்களை மீறி வரவேற்கத்தான் வேண்டுமே தவிர விமர்சிப்பது முறையல்ல.

-டான் அசோக்

English summary
Don Ashok's article on Ilaiyaraaja - SPB copyright issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X