• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா?: மக்கள் அனுமதியோடு அடுத்த முடிவு: உதயகுமார் சிறப்பு பேட்டி

|

- இசக்கி ராஜன்

இடிந்தகரை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து மக்கள் அனுமதியோடு முடிவு எடுக்கப்படும் என்று கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

879 வது நாளை தாண்டி 3வது ஆண்டை நோக்கி கூடங்குளம் அணு உலையின் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இடிந்தகரை ஊர்மக்களின் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடர் போராட்டம் கடலோர மக்களுக்கு விடிந்த கதையாக மாறுமா என்பது புரியாத புதிராக உள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடர்ந்து வீரியத்துடன் நடந்து வரும் பரபரப்புப் போராட்டமாகும். திமுக ஆட்சி காலத்தின் இறுதிகட்டத்தில் தொடங்கிய முற்றுகை போராட்டம்.. பாதை தூண்டிப்பு, போக்குவரத்து நிறுத்தம், துப்பாக்கிசூடு, உயிர் பலி, இப்படி பல்வேறு கட்டத்தை தாண்டி ஆட்சி மாற்றம் வந்தபின் ஒரு மாற்றம் நிகழும் என்று நம்பினர். ஆனால் இதுவரை தீர்வு என்பது இல்லாத நிலை.

உதயக்குமாரைச் சந்தித்தோம்

உதயக்குமாரைச் சந்தித்தோம்

இடிந்தகரையில் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை காணச் சென்றோம். போன சமயத்திலும் கூட ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இடிந்தகரையை ஓட்டியுள்ள சர்ச் மைதானத்தில் தொடர் உண்ணாவிரத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர்கள் சிலரும் இருந்தனர்.

ஊர்க் கமிட்டியோடு ஆலோசனையில் உதயக்குமார்

ஊர்க் கமிட்டியோடு ஆலோசனையில் உதயக்குமார்

நாம் உதயகுமாரை சந்திக்க சென்றபோது கூடங்குளம் அணு உலை போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேடுத்து செல்வது குறித்து ஊர் கமிட்டியோடு ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் ஈடுபட்டிருந்தார். மாலை 4 மணி அளவில் கூட்டம் முடிந்து வந்த மைதானத்தில் உண்ணாவிரத்தை முடித்து வைத்துவிட்டு 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்துக்காக உதயக்குமார் பிரத்யேக பேட்டி கொடுத்தார்.

இது அகிம்சைப் போராட்டம், மக்கள் போராட்டம்

இது அகிம்சைப் போராட்டம், மக்கள் போராட்டம்

கேள்வி: ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்துகிறீர்கள்.. மக்கள் எழுச்சியைக் காட்டுகிறீர்கள்.. ஆனாலும் கூடங்குளம் அணு உலை இயங்க ஆரம்பித்ததை உங்களால் தடுக்க முடியவில்லைதானே..?

உதயகுமார்: கூடங்குளம் அணு மின் நிலையத்தினை இயங்க விடாமல் செய்வதற்கான போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். மாறாக அதனை வன்முறை போராட்டமாக, பூட்டை போட்டு பூட்டி, சாவியை எடுக்கும் முயற்சி என்பது வல்லாதிக்க சக்தியான அரசை எதிர்த்து சாதாரண மக்கள் எப்படி செயல்பட முடியும். அதற்காகதான் அகிம்சை வழியில் போராடுகிறோம். அழிவு திட்டங்களுக்கு எதிரான அகிம்சை போராட்டம் இது.

கெஜ்ரிவால் போல உருவெடுப்பீர்களா?

கெஜ்ரிவால் போல உருவெடுப்பீர்களா?

கேள்வி: டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது முதலே தமிழகத்தின் அரவிந்த் கெஜ்ரிவாலாக ஆதரவாளர்களால் உருவகப்படுத்தப்படுகிறீர்கள். பிரசாந்த் பூஷணும் கூட நேரில் வந்து உங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.. ஆம் ஆத்மி, கெஜ்ரிவால் போல நீங்களும் தேர்தலில் விஸ்வரூபமெடுப்பீர்களா?.

உதயகுமார்: ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் 2012 செப்டம்பரில் இங்கு வந்தபோது கேட்டார், கட்சியில் சேருஙகள் என்றார். எங்களை நாட்டில் ஏராளமானோர் ஆதரிக்கிறார்கள். ஆதலால் தற்போது அதற்கான சூழல் இல்லை என்றேன். அதன் பின் கட்சி தொடங்கிய உடன் மீண்டும் பேசினார். அப்போது அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எங்களது ஆதரவைத் தெரிவித்தோம். எதுவாக இருந்தாலும் மக்கள் அனுமதியோடுதான்

இப்போது பிரசாத் பூஷன் வந்து நேரில் சந்தித்து மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். அவரிடம் அரசியலில் ஈடுபடவும், வரும் தேர்தலில் குதிப்பதற்காகவும் இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை என்று விளக்கினேன். எங்கள் மக்களின் உணர்வுகளை அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு மக்கள் அனுமதியோடு அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க போகிறோம்.

திமுக - அதிமுக- காங் -கம்யூ:

திமுக - அதிமுக- காங் -கம்யூ:

கேள்வி: ஆம் ஆத்மி கட்சியில் சேருவீர்களா?. அல்லது தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு தருவீர்களா?

உதயகுமார்: தி்முக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூடங்குளம் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு எந்த ஆதரவும் தரவில்லை. அதிமுக மட்டும் முதலில் ஆதரவு தந்தனர். அதன்பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றி விட்டனர். இந்த கட்சிகள் எங்களது மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போட்ட மொத்த தமிழக மக்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காத கட்சிகள் என்று அடையாளப்படுத்தி, 100 கட்சிகள், மக்கள் இயக்கங்கள் என்று அடையாளப்படுத்தினோம்.

அதில் சில கட்சிகள் தங்களது நோக்கங்களுக்காக வேறு வேறு கூட்டணி பிடித்து ஏறுவது போல தெரிகிறது. இதனால் யார், யார் எங்களுக்கு உண்மையிலேயே ஆதரவு தருகிறார்களோ அவர்களோடு கை கோர்த்து செல்வோம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.

2 லட்சம் வழக்குகள்:

2 லட்சம் வழக்குகள்:

கேள்வி: உங்கள் மீதும் கூடங்குளம் பகுதி மக்கள் மீதும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

உதயகுமார்: என் மீது 360 வழக்குகள். 20,000 மக்கள் மீது 2 லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளன. தேசத்துரோக வழக்கு 2, தேசத்தின் மீது போர் தொடுத்த வழக்கு 28ம், மிகக் கொடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ளன. பெயர் குறிப்பிட்ட10,000 மக்கள் மீதும் பெயர் குறிப்பிடப்படாத மக்கள் என 2.20 லட்சம் மக்கள் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இது தமிழனின் தலையெழுத்து:

இது தமிழனின் தலையெழுத்து:

கேள்வி: தமிழக மீனவர்கள் 276 பேர் இலங்கை சிறையில் தவிக்கிறார்கள். இவர்களை மீட்பதற்கு என்ன வழி..

உதயகுமார்: மாறி, மாறி வரும் முதல்வர்கள், திமுக, அதிமுக ஆகியவை, மீனவர்கள் பிரச்சனையில் தொடர்ந்து கடிதம் எழுதுகின்றனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பதவி வேண்டும் என்றால் டெல்லிக்கு போகிறார்கள். ஆனால் இதுதான் தமிழனின் தலை எழுத்து. கேரளாவில் மீனவர் இறந்தால் கோடிக்கணக்கில் நஷ்டஈடும், இத்தாலி போன்ற சக்தி மிக்க நாட்டின் தூதரக உறவையே முறித்து கொள்ளும் மத்திய அரசு, தமிழர்களுக்காக ஏன் என்று கேட்கவில்லை. இதற்கு தமிழர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

நாங்கள் தீவிரவாதிகள் இல்லை:

நாங்கள் தீவிரவாதிகள் இல்லை:

கேள்வி: உங்கள் போராட்டத்தை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களும் ஆதரிக்கின்றனரே...?

உதயகுமார்: மாவோயிஸ்ட் நேரில் வந்து ஆதரவு தந்ததுமில்லை. நாங்கள் தீவிரவாதியுமில்லை. தீவிரவாத குழுக்களோடு எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. தீவிரவாத்தில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. மாவோயிஸ்டுக்கள் தீவிரவாதத்தை கைவிட்டு மக்கள் மத்தியில் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. அவர்களை எந்த வடிவத்திலும், நிலையிலும் ஆதரிப்பவன் இல்லை.

அணு மின் நிலையம் இயங்கினால் நிரூபிக்கட்டுமே...:

அணு மின் நிலையம் இயங்கினால் நிரூபிக்கட்டுமே...:

கேள்வி: கூடங்குளம் இயங்கவில்லை என்கிறீர்கள்... ஆனால் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்துவிட்டதாக அரசு கூறுகிறதே?

உதயகுமார்: அணு மின் நிலையம் திறம்பட இயங்குவது என்றால் அதனை நாட்டுக்கு பிரதமர் அர்பணிக்க வேண்டுமே..... திருச்சிக்கு திட்டத்தை தொடங்கி வைக்க வந்த பிரதமர் அரை மணி நேரம் கூடுதலாக விமானத்தில் பறந்து வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கலாமே....ஏன்... இன்றைக்கு வரை பத்திரிக்கையாளர்களை உள்ளே அழைத்துச் செல்ல மறுக்கிறார்கள்....?

சார்பற்ற விஞ்ஞானிகள் குழு அமைத்து மின்சாரம் உற்பத்தி ஆவதை உறுதியாக தெரியப்படுத்தலாமே....

அணு உலைக்கு 2013ம் ஆண்டு 26 கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கினார்களே... ஏன்?. நவம்பர் மாதம் மட்டும் 4.5 கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கியுள்ளார்கள். எதற்காக.....?.

கூடங்குளம் குடிநீர்திட்டம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

கூடங்குளம் குடிநீர்திட்டம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

உதயகுமார்: கூடங்குளம் அணு உலைக்கு பேச்சிபாறையில் இருந்துதான் தண்ணீர் எடுக்க முதலில் திட்டம் போட்டனர். அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக கைவிட்டு விட்டு தாமிரபரணி தண்ணீரை கொண்டு வர உள்ளனர். இவ்வளவு காலமும் மீனவ மக்கள் குடிநீர் என்று தெரியாதா... இபபோது என்ன திடீர் கரிசனம்... தாமிரபரணி தண்ணீர் கூடங்குளம் அணு உலைக்காகவே கொண்டு வரப்படுகிறது.

மக்கள் முடிவுக்கு காத்திருக்க வேண்டும்

மக்கள் முடிவுக்கு காத்திருக்க வேண்டும்

கேள்வி: வரும் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மூன்றாவது அணி.. யார் வெல்வர்..?

உதயகுமார்: நி்ச்சயம், காங்கிரஸ், பாஜகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் அருதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது தெளிவாக தெரிகிறது. 3வது அணி என்று தேர்தலுக்கு முன் உருவாகுமா என்பது தெரியவில்லை. அப்படி இருந்தால் தேர்தலுக்கு பின் சில கட்சிகள் சேர்ந்து 3வது அணி என்று ஒரு அணி அமையலாம். தேர்தலுக்கு தமிழக மக்கள், இந்திய மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அமையும்.

இடிந்தகரைக்கு வெளியிலும் ஆதரவு திரட்ட...

இடிந்தகரைக்கு வெளியிலும் ஆதரவு திரட்ட...

கேள்வி: இடிந்தகரைக்கு வெளியே, 'அதான் மின்சாரம் வருதே, ஏன் எதிர்க்கணும்?' என்கிற நினைப்பில் இருக்கும் சாதாரண மக்களை உங்களுக்கு ஆதரவாகத் திரட்ட முயலாதது ஏன்?

உதயகுமார்: முயற்சி செய்து வருகிறோம். வரும் தேர்தலில் எங்கள் மக்கள் எடுக்கும் முடிவு, தமிழக மக்கள் எடுக்கும் முடிவு, இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வரும். அதன் மூலம் கெயில், மீத்தேன் திட்டம், காவிரி நீர்த்திட்டம் ஆகியவற்றுக்கும் முடிவு வரும்.

வெளிநாட்டுப் பணம் வரவில்லை:

வெளிநாட்டுப் பணம் வரவில்லை:

கேள்வி: தொண்டு நிறுவனங்கள் பொதுவாகவே ஏதோ ஒரு வகையில் வெளிநாட்டு நிதி உதவியைத்தான் பெறுகின்றன. உங்களுக்கும் அப்படித்தான் நிதி கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து? இந்தப் போராட்டத்துக்கான நிதிக் கணக்கு குறித்து வெளிப்படையாகச் சொல்லி, விமர்சனங்களைத் தவிர்க்கலாமே?

உதயகுமார்: எங்களுக்கு வெளிநாட்டு பணம் வரவில்லை. 2 தினங்களுக்கு முன் மதுரை பிஷப் பணம் வந்ததை எங்களுக்கு கொடுத்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறோம். எங்கள் மக்கள் தங்களது உழைப்பில் தரும் ஒரு பங்கு பணம்தான் போராட்டத்திற்கு பயன்பட்டு வருகிறது.

இதை முடித்து விட்டுத்தான் பிற பிரச்சினைகள்

இதை முடித்து விட்டுத்தான் பிற பிரச்சினைகள்

கேள்வி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான திட்டமிட்ட உறுதியான போராட்டத்தை நடத்துகிறீர்கள் நீங்கள்.. ஆனால் தாது மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அப்படி ஒரு எழுச்சிமிக்க போராட்டத்தை நடத்தாதது ஏன்?

உதயகுமார்: தாது மணல் பிரச்சனைக்கு எதிராக நாங்கள் பேசியுள்ளோம். இந்தப் போராட்ட சமயத்தில் இருக்கும்போது பிற போராட்டத்தில் தலையிட்டால் கவனம் சிதறும். இந்தப் போராட்ட வெற்றிக்கு பின் அடுத்த கட்டத்திற்கு போவோம்.

பூஷனை சந்தித்ததில் என்ன தவறு?:

பூஷனை சந்தித்ததில் என்ன தவறு?:

கேள்வி: பிரசாத் பூஷன் தங்களை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இல. கணேசன் கூறியுள்ளாரே...

உதயகுமார்: அவரும் இந்திய குடிமகன். நானும் இந்திய குடிமகன். இருவரும் சந்தித்து கொள்வதில் தவறு இல்லையே...

முதல்வரைக் கண்டு பயப்பட அவசியமில்லை:

முதல்வரைக் கண்டு பயப்பட அவசியமில்லை:

கேள்வி: பிரதமரை, அவருக்கு ஆதரவு தந்த திமுக தலைமையை அத்தனை கடுமையாக விமர்சித்த உங்களால், இதே நிலைப்பாட்டை எடுத்த, சொல்லப்போனால் உங்களை தீவிரவாதி என்றே முத்திரை குத்திய இந்த ஆட்சி மற்றும் அதன் தலைமையை விமர்சிக்க முடியாமல் போனது ஏன்?

உதயகுமார்: எல்லா கட்சிகளையும் விமர்சிக்கிறோம். திமுக, அதிமுக உள்ளிட்ட 6 கட்சிகளையும் விமர்சிக்கிறோம். முதல்வரை கண்டித்து போராட்டம் செய்துள்ளோம். முதல்வரை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம் நாங்கள் தவறு செய்யவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்திய வரலாற்றை புரட்டி போடும் மாற்றமாக அமையும். அமையும் அரசு சாதாரண மக்களின் அரசாக இருக்கும்...

இடிந்தகரை மக்களின் ஆலமரம்...

இடிந்தகரை மக்களின் ஆலமரம்...

நமது பேட்டி நடந்து கொண்டிருக்கும் போது இடிந்தகரையில் வசிக்கும் பல்வேறு சமுதாய மக்கள், அரசியல் சார்பற்ற அனைத்து கட்சி பிரமுகர்கள் சமுதாய கூடம் குறித்து கலந்து ஆலோசனை நடத்த அவரை சந்திக்க திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
PMANE chief SP Udayakumar is leading the people's agitation against the KKNPP with same vigor and valour. He gave a special interview to the Oneindia Tamil. Here is his answers for our questions.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more