• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோஞ்சான்களின் பாஞ்சாலி சபதம்!

By Shankar
|

-சுப. வீரபாண்டியன்

திருச்சியில் ஒரு மாநாடு கூட்டி, ரஜினிகாந்த்தின் அரசியல் வரவுக்கு வரவேற்பு வளையம் வைத்தார் தமிழருவி மணியன். அன்று அவர் பேசிய பேச்சு முழுவதையும் (1 மணி 12 நிமிடங்கள்) வலைத்தளத்தில் பொறுமையாகக் கேட்ட பிறகு, அதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது. அவருக்கெலாம் ஏன் இவ்வளவு முதன்மை கொடுக்கின்றீர்கள் என்று சிலருக்குக் கேட்கத் தோன்றலாம். மணியன் என்னும் தனி மனிதரை எண்ணியோ, ரஜினிகாந்த் என்னும் புகழ் பெற்ற கலைஞரை எண்ணியோ இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. மணியன் அவர்களின் பேச்சில் நான் உணர்ந்த, மறைவான உள்நோக்கம் கொண்ட, நுண்ணரசியலை எண்ணியே எழுதுகின்றேன்.

அவர் உரையை மூன்றாகப் பகுத்துக் கொள்ளலாம். ஒன்று, ரஜினிகாந்தின் நேர்மை, அறிவுத் திறன் பற்றியது. இரண்டாவது, கடந்த 50 ஆண்டுகளாக மணியனின் நெஞ்சில் கிடக்கும் சபதம் பற்றியது. மூன்றாவது, வழக்கம்போல், தன்னைப் பற்றித் தானே, நேர்மையானவன் என்றும், அறிவாளி என்றும் பெருமையாகக் கூறிக் கொண்டது!

Weaker's oath

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர். நாம் பழகியதில்லை என்றாலும், நல்ல குணங்களும் உண்டு என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அரசியல் என்பது இவைகளை எல்லாம் தாண்டியது. அவரைப் பாராட்ட விரும்பும் மணியன், அளவு கடந்து அதனைச் செய்திருக்கிறார். ஓர் இடத்தில், திருவள்ளுவருக்கு மேலான அறிவாளி என்பதுபோல் குறிப்பிடுகின்றார். "வள்ளுவர் கூட ஒன்றே முக்கால் அடியில் கூறினார், சூப்பர் ஸ்டார் ரஜினியோ ஒரே வரியில், 'சிஸ்டம் கெட்டுவிட்டது' என்று கூறிவிட்டார். அது அவரை என் நெஞ்சுக்கு நெருக்கமாக்கி விட்டது," என்கிறார். உண்மையிலேயே சிறந்த படிப்பாளியான மணியனுக்கு, ஒருவரை அளவு கடந்தும், தகுதிக்கு மீறியும் பாராட்டுவது அநாகரிகம் என்பது புரிந்திருக்க வேண்டும். சிஸ்டம் கெட்டுவிட்டது என்று ஏற்கனவே பலர் கூறியுள்ளனர். மேலும் அந்த வரி அப்படியொன்றும் தத்துவச் செறிவு மிக்கதில்லை.

ரஜினி மூன்று நோக்கங்களோடு வருவதாக மணியன் சொல்கிறார். நதிகளை இணைப்பது, ஊழலற்ற ஆட்சி தருவது, வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்பது என்பவை அவர் நோக்கங்கள் என்கிறார். நல்லது, இவற்றை இதுவரையில் சொல்லாதவர்கள் யார்? செய்தவர்கள் யார்? ரஜினியாவது ஆள் வைத்துச் சொல்கிறார், மோடி நேரடியாகவே சொன்னாரே! இவையெல்லாம் மிக மேலோட்டமானவை என்பதும், பொத்தாம் பொதுவானவை என்பதும் அனைவருக்கும் தெரியும்!

அவர் பேச்சின் இரண்டாவது பகுதிதான் இன்றியமையாதது. ஒரு மணி நேரப் பேச்சின் ஒட்டுமொத்தச் சாரம், திமுக ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பதுதான். 'இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும்' என்கிறார். அதிமுகவைத் திமுகவுடன் சேர்த்துச் சேர்த்துச் சொல்வது, நீண்ட நாள்களாக இங்கு நடந்து வரும் ஏமாற்று வேலை. பெயருக்கு அவர்களையும் சேர்த்துக் கொள்வது. உண்மை நோக்கம், திமுகவை எதிர்ப்பதுதான். பிறகு ஏன் அதிமுகவைத் தாக்க வேண்டும்? அப்படிச் செய்தால்தானே நடுநிலை வேடம் சரியாகப் பொருந்தும்!

Weaker's oath

அவரே தன் பேச்சில் சொல்கிறார், "இனி அதிமுக வெற்றிபெற முடியாது. இப்போது தேர்தல் வைத்தால், ஸ்டாலின் வெற்றிபெற்று முதலமைச்சராகி விடுவார்."

மேலும் சொல்கிறார் - "நான் யார் யாரையோ முன்னிறுத்தி முயற்சி செய்தேன். வைகோவை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு 5 சதவீத வாக்குகள் கூட இல்லை. பிறகு பல கட்சிகளை ஒருங்கிணைத்தேன். அவர்கள் எல்லோரும் சேர்ந்து 10 சதவீதம் வாக்குகளைக் கூடப் பெறவில்லை.காலம் கடைசியாக எனக்குக் காட்டிய கருணைதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இனிமேல், ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வர முடியாது. வெறும் இலவு காத்த கிளியாகத்தான் இறுதிவரை இருக்க வேண்டும்."

ரஜினியன்று, யார் வந்தாலும், தளபதி ஸ்டாலின் முதல்வர் ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது என்பது ஒருபுறமிருக்கட்டும், மணியனுக்கு ஏன், திமுக மீதும், தளபதி மீதும் இவ்வளவு கோபம்? சும்மா இருந்தவரை அழைத்துத் திட்டக்குழு உறுப்பினர் ஆக்கினாரே தலைவர் கலைஞர், அதற்காகவா? ஓய்வு ஒழிவின்றித் தளபதி நாளும் உழைக்கின்றாரே, அதற்காகவா?

திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல். ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், வருண-சாதி ஏற்றத்தாழ்விற்கும் எதிராகப் பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். ஆதலால், அவர்கள், திமுகவிற்கு எதிராக இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்போது, திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பல்வேறு முகமூடிகளோடு வருகின்றனர். அவற்றுள் ஒன்றுதான், மணியனின் புதிய ரஜினி முகமூடி!

அவர் தன் உரையில், திமுக, அதிமுக இரண்டையும் சமப்படுத்த அரும்பாடு படுகின்றார். இன்றைய அமைச்சர்களின் ஊழல், சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, 2ஜி ஊழல் என்று சொல்லி முடிக்கிறார். 1.76 ஆயிரம் கோடி என்று, குற்றப்பத்திரிகையிலோ, வேறு எங்குமோ இல்லாத அந்தத் தொகையைக் குறிப்பிட்டு, திமுகவின் மீது ஒரு வெறுப்பைக் கிளப்புகின்றார். "திராவிடக் கட்சிகளை அகற்றுவது (அதாவது திமுகவை அகற்றுவது) தன் நெஞ்சில் 50 ஆண்டுகளாகக் கிடக்கும் குறிக்கோள், பாஞ்சாலி சபதம் போன்றது இது என்றார். பாவம் பாஞ்சாலி!

Weaker's oath

இறுதியாக, ரஜினியிடம் ஒரு கேள்வியையும், மணியனிடம் மூன்று கேள்விகளையும் முன் வைக்க வேண்டியுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன்பு கூட ரஜினியைப் பார்த்துவிட்டு வந்துதான் நான் பேசுகிறேன். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை இந்த மேடையில் பிரகடனம் செய்கிறேன் என்றார் மணியன். அவ்வளவு தூரம் உறுதியாகிவிட்ட ஒரு செய்தியை, ரஜினி அவர்களே, நீங்களே வெளியிடுவதுதானே முறை? அல்லது மணியன் கூறுவது உண்மைக்கு மாறானது என்றால், அதனை மறுப்பதுதானே முறை? இரண்டும் இல்லாமல் நீங்கள் காக்கும் மௌனத்திற்கு என்ன பெயர்? அது நல்ல மௌனமா, கள்ள மௌனமா? சொல்லுங்கள் ரஜினி!

மணியனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், சுருக்கமாகச் சில கேள்விகளை மட்டும் முன்வைக்கின்றேன்.

1. வாடகை வீட்டில், புத்தகங்களுக்கு நடுவில் குடியிருப்பதாக, உங்கள் பேச்சில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். நல்லது, உங்கள் எளிமையை, அறிவைப் பாராட்டுகின்றோம். ஆனால் அவ்வளவு எளிய மனிதரான உங்களால், இவ்வளவு பெரிய மாநாட்டைத் திருச்சியில் எப்படிக் கூட்ட முடிந்தது? பெரிய கட்சிகளுக்கு இணையாக அவ்வளவு பெரிய மேடை, ஆடம்பரமான அலங்காரங்கள் எல்லாவற்றிற்கும் பணம் எங்கிருந்து வந்தது? காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்கள் ஒவ்வொரு செப்புக் காசாகச் சேர்த்துத் தந்தார்கள் என்று சொல்லிவிடாதீர்கள். நம்பும்படியாக இருக்காது. வேறு ஏதேனும் நம்பும்படியாகச் சொல்லுங்கள்.

2. திமுக, அதிமுக பற்றி அவ்வளவு நேரம் பேசினீர்களே, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி பற்றிச் சில வரிகள் பேசுவதற்கு கூட உங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே ஏன்?

3. சிஸ்டம் கெட்டுப்போனதற்கு லஞ்சம், ஊழல் மட்டும்தான் காரணமா, கறுப்புப் பணம் போன்றவைகளும் காரணமா என்பதை ரஜினி அவர்களிடம் கேட்க நேரம் இருந்ததா?

திமுகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்று காமராஜர், ராஜாஜி போன்ற பெருந்தலைவர்களே முயன்று பார்த்தும் வெற்றி கிட்டவில்லை. நோஞ்சான்களின் பாஞ்சாலி சபதத்திற்கெல்லாம், திமுக தொண்டன் அஞ்சுவான் என்றா நினைக்கின்றீர்கள்?

 
 
 
English summary
Professor Subavee's analysis on Tamizharuvi Manian and Rajinikanth's political activities.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X