• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

உண்மையிலேயே நம்ம நாடு சுதந்திரமாகத்தான் உள்ளதா..?

|

சென்னை: இன்று 72-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்.

அன்று 564 சமஸ்தானங்களாக உடைந்து கிடந்தது நம் இந்தியா. இனி இந்த இந்தியா எங்கேயிருந்து ஒன்றாக இருக்க போகிறது... சீக்கிரமாகவே எல்லாரும் சண்டையை போட்டுக் கொண்டு பிச்சிக்கிட்டு ஓடப்போகிறார்கள் என்று சுதந்திரத்துக்கு முன்பு துரதிர்ஷ்டமாய் சொல்லி வாய் வைத்த அதிபுத்திசாலிகளே அதிகம்.

அதையெல்லாம் பொய்யாக்கிவிட்டோம்... சந்தோஷம்தான்! இந்தியா உடைந்து சிதறி தனித்தனியாக உருண்டு போய்விடவில்லை... மகிழ்ச்சிதான்! காரணம் காந்தியின் அறவழிகளும், நேருவின் தொலைநோக்கு போர்வையும், நேதாஜியின் அதிரடி தீரம் மிக்க செயலுமே இன்றுவரை நம்மை கட்டிப்போட்டு இழுத்து வந்துள்ளது என்பதுஉண்மைதான். ஏற்றுக்கொள்ளக்கூடியதே! தலைவர்கள் அனைவருமே சொன்னதை செய்து காட்டினார்கள். வாக்குரிமை, கல்விஉரிமை, அனைத்தையும் பெற்று தந்துவிட்டுதான் போனார்கள். அவைகளை மறுப்பதற்கில்லைதான்!

உலக அரங்கில் இந்தியா முகம்

உலக அரங்கில் இந்தியா முகம்

ஆனால் நாம் ஒவ்வொருவரும் மனசாட்சியில் கைவைத்து சொல்ல வேண்டும், "உண்மையிலேயே நம் நாடு சுதந்திரமாகத்தான் உள்ளதா? முன்னேறிதான் உள்ளதா". நம் மக்கள் தொகையை கணக்கிடும்போது மற்ற நாடுகளே வியக்கின்றன. நம் நாட்டின் இயற்கை செல்வங்களை மதிப்பிடும்போதும் மற்ற நாடுகளே பொறாமை கண்களால் துளைத்தெடுத்து நம்மை தின்றே விடுகின்றன. நம் மக்களின் அறிவாற்றலையும், சிந்தனை திறனையும் மற்ற நாடுகள் பார்க்கும்போது வயிற்றெரிச்சல்கள் டன் கணக்கில் குவிந்து போகிறது. ஆகவே பிற நாடுகளோடு நம்மை ஒப்பிடும்போது நாம் இந்நேரம் எங்கோ முதலிடத்தில் அல்லவா போய் நின்றிருக்க வேண்டும்? உலக அரங்கில் நம் இந்தியாவின் முகம் தனித்தன்மையுடன்தானே தெரிந்திருக்கவேண்டும்?

மீண்டும் வெள்ளைக்காரன்

மீண்டும் வெள்ளைக்காரன்

ஜனநாயகம் சிறப்பாக செயல்பட்டால்தானே எல்லாமுமே சீராகி இருந்திருக்கும்? ஆனால் இன்னும் வறுமை ஏன் தாண்டவமாடி கொண்டிருக்கிறது? ஏன் பட்டினி சாவுகள் தொடர்கின்றன? இலவசங்கள் பின்னால் நம் மக்கள் ஏன் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? இட ஒதுக்கீடு என்னும் முறை நமக்கு தேவையே இல்லை என்று பகிரங்கமாகவும் ஆணித்தரமாகவும் நம்மால் சொல்ல முடியவில்லையே ஏன்? இருப்பவர் மேலும் இருப்பவராகவும், இல்லாதவர் மேலும் இல்லாதவராகவும் இருப்பது பெயரா ஜனநாயகம்? அன்று ஓட ஓட விரட்டப்பட்ட வெள்ளையன், இன்று மீண்டும் பள பள தொழில்களின் ரூபத்தில் நம் நாட்டுக்குள் ஊடுருவி நம்மையே மிதிக்கும் சூழலுக்கு தள்ளிவிடும் அவலம் வந்துள்ளதற்கு யார் காரணம்?

கனவு என்று நிறைவேறும்?

கனவு என்று நிறைவேறும்?

இப்படி வருஷத்துக்கு ஒருமுறை கொடியேற்றி, ஆடல் பாடலுடன் மகிழ்ந்து, வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு மெடல் குத்தி விட்டு அனுப்பிவிட்டால் போதுமா? வேற்றுமையில் ஒற்றுமை எனற் நாடு என்று பெருமையும் தம்பட்டியும் இன்று ஒருநாள் அடித்துவிட்டால் போதுமா? நிஜமாகவே நம் நாடு தன்னிறைவு பெற வேண்டும். சத்தியமாகவே பாரதி கண்ட நாடு ஒளிர வேண்டும். உண்மையாகவே, அப்துல்கலாமின் கனவு நிறைவேறிட வேண்டும்.

பெண் பாதுகாப்பு உண்டா?

பெண் பாதுகாப்பு உண்டா?

ஒரு பெண் நள்ளிரவில் தனியாக ரோட்டில் நடந்தால் அதுதான் உண்மையான சுதந்திரம் என்று சொல்லிவிட்டு சென்றாரே ஒரு பெரியவர், அவர் பேச்சு எந்த காலத்தில் நிறைவேற போகுது? பட்டப்பகலிலேயே பெண் பிள்ளைகள் தங்கள் தெருவிலேயே நடந்து செல்லாத சூழ்நிலையில் இன்று வாழ்ந்துகொண்டு, 72-வது சுதந்திரம் என்று பெருமை பேச எப்படி மனம் வருகிறது? சமூக ரீதியான, சட்டரீதியான, வன்முறைகள் இன்று பல மடங்காக பெருகி கிடப்பதை தடுத்து நிறுத்த ஒருத்தரும் முன்வராமல் சுதந்திர நாடு என்று மார்தட்டி பேசுவது, அதுவும் இன்று ஒருநாள் மட்டும் பேசி பயன் ஏதாவது உண்டா?

சிறுபான்மையினர் கதி என்ன?

சிறுபான்மையினர் கதி என்ன?

சிறுபான்மையினர் மீதான குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும், அவர்களை பற்றின அவதூறுகளும் நாள் ஆக ஆக பெருகி வருவதன் காரணம் என்ன? அதன் விபரீதங்கள் இஸ்லாமியர்களை எங்கு கொண்டு நிறுத்தப் போகின்றன? இதனை தடுத்து நிறுத்த வழி என்ன? இனியாவது வன்முறை, இன,மத ரீதியான தாக்குதல்களை நடத்தும் காட்டுமிராட்டித்தனம் யுகம் ஒழிக்கப்படுமா? அனைவரும் சக மனிதர்களே என்ற மனித பண்புகள் தலைதூக்குமா? இந்திய விவசாயிகளுக்கு உரிமையான நிலங்கள்கூட பறிக்கப்பட்டு சொந்த ஊரில் அகதிகளாக வாழும் நிலை சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட குக்கிராமங்களில் தொடரும் நிலை மாறப்படுமா?

சர்ச்சில் வார்த்தைகள்

சர்ச்சில் வார்த்தைகள்

பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், இந்தியாவுக்கு விடுதலை வழங்கலாமா? என்று பரிசீலித்தபோது அவர் சில பகிரங்கமாக வெளியிட்ட வார்த்தைகளை வெளியிட்டது இப்போது நினைவுக்கு வருகிறது, "இந்தியாவுக்கு தற்போது சுதந்திரம் தேவையில்லை, ஏனெனில் அதற்குரிய காலம் இன்னும் கனியவில்லை. நாம் சுதந்திரம் வழங்கினாலும் அதை பாதுகாத்து கொள்ளும் முதிர்ச்சியோ பக்குவமோ இன்றைய இந்தியர்களிடம் இல்லை. ஒன்றுபட்டுள்ள இந்தியா ஒற்றுமையின்மையால் சிதறிபோகும்." என்றார். சர்ச்சில் இப்படி சொன்னதில் ஏதாவது பொய் இருக்கிறதா?!!! ஏதாவது முரண்பட்ட கருத்து இருக்கிறதா?!!! சர்ச்சில் சொன்னது தவறாக இருக்கிறதா?!!!

எது நிஜமான சுந்திரம்?

எது நிஜமான சுந்திரம்?

துப்பாக்கி முனைகளின் புடைசூழ இப்படி 72-வது வருடம் கொண்டாடப்படுவதுதான் சுதந்திரமா? நாட்டை காப்பாற்றுபவர்கள்... வருடாவருடம் குண்டு துளைக்காத கவசத்தில் நின்றுகொண்டு உரையாற்றுவதுதான் சுதந்திர தின பேச்சா? பாதுகாப்பு படை வீரர்களின் துப்பாக்கிகளை எறிந்துவிட்டு நாட்டு மக்கள் முன் வீர தேச தலைவர்கள் உரையாற்ற நாள் வரவேண்டும்... கண்ணாடி கூண்டு எனும் பாதுகாப்பு கவசத்தை உடைத்தெறிந்துவிட்டு மக்களோடு மக்களாக கலந்து நின்று சபத வார்த்தைகளை உரையாற்ற நாள் வரவேண்டும்... அன்றுதான் நிஜ சுதந்திரம்!

English summary
When is real independence day?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X