• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலுமினியத் தட்டில் சாப்பிட்டு விட்டு கிழிந்த பாயில் படுத்திருந்த அப்துல் கலாம்...!

|

சென்னை: பூக்களைக் காட்டி அதன் வாழ்க்கைத் தத்துவத்தை தன்னுடன் இருந்தவர்களிடம் சுட்டிக் காட்டிய அப்துல் கலாம், அந்தப் பூக்களைப் போலவே தனது வாழ்நாள் முழுவதும் பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு பயன் உள்ளவராக இருந்து எளிமையான வாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் என்று அவரது நெருங்கிய உதவியாளரான பொன்ராஜ் நினைவு கூர்ந்துள்ளார்.

நக்கீரன் இதழில் நீங்களும் ஆகலாம் அப்துல் கலாம் என்ற தலைப்பில் தொடர் எழுதி வரும் பொன்ராஜ், அப்துல் கலாமின் எளிமை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

அதிலிருந்து சில...

கள்ளம் கபடம் இல்லாத பிள்ளை மனது

கள்ளம் கபடம் இல்லாத பிள்ளை மனது

அலுவலகத்துக்கு நான் காரில் நுழையும்போது, கலாம் சார் ராஜாஜி மார்க் வீட்டு புல் தரையில் நடந்து கொண்டிருப்பார். என்னைப் பார்த்தவுடன், கார் நிற்கும் போர்டிகோவுக்கு விறுவிறுவென்று வந்து விடுவார். எனக்கோ, காரிலிருந்து குதித்து விடலாம் போல் இருக்கும். அப்படிப்பட்ட எளிமை, கள்ளம் கபடம் இல்லாத குழந்தை மனம் அவருடையது. அங்கிருந்து என்னை அழைத்துச் சென்று, அன்றைய தினம் என்னிடம் சொல்ல வேண்டிய பல்வேறு விஷயங்களை நடந்தபடியே பகிர்ந்து கொள்வார்.

பூக்களில் தத்துவம்

பூக்களில் தத்துவம்

அங்கு மலர்ந்திருக்கும் பூக்களை காட்டி, அதன் வாசனையை முகர்ந்து பார்த்து, "இந்தப் பூக்கள் எப்படி தினமும் காலையில் மலர்கிறது, நாள் முழுவதும் மணம் பரப்புகிறது, தன் வேலை முடிந்தவுடன் மாலையில் உதிர்ந்து விடுகிறது...'என்று சொல்வார். வெறுமனே சொல்வது மட்டுமல்ல, இதையெல்லாம் தன் வாழ்நாளில் கடைப்பிடித்து வாழ்க்கையின் தத்துவத்தை போதித்தார். ஒரே நாள் வாழும் தன் சிறிய வாழ்க்கையிலும் கூட, ‘என் வாழ்க்கையை ஒரே நாளில் முடித்து விட்டாயே இறைவா?' என்று வசை பாடாமல், ‘பூக்கள் எப்படி எளிமையாக வாழ்ந்து, இந்த உலகிற்கு நறுமணம் பரப்பி, சத்த மில்லாமல் தன் வாழ்வை முடித்துக்கொள்கின்றன‘ என்ற தத்துவத்தையும் அவர் எங்களுக்கு உணர்த்த தவறவில்லை.

பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்

பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்

இப்படிப்பட்ட எளிமை அவருக்கு எப்படி வந்தது? எப்போது வந்தது? குடியரசுத் தலைவராக ஆன பிறகா? இல்லை மக்களைக் கவர வேண்டும் என்ற நடிப்பினாலா? என்றெல்லாம் கேள்வி எழலாம். ‘பதவி வரும் போது, பணிவும் வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா! பாதை தவறாமல், பண்பு குறையாமல், பழகி வரவேண்டும் தோழா!' என்ற பாடலுக்கு இலக்கணமாகத் திகழ வேண்டுமென்றால் - அது பதவி வந்த பிறகு முயற்சித்தால், இந்த குணங்கள் யாருக்கும் வந்து விடும் என்று நினைத்தால் - அது அறியாமை ஆகும். எத்தனை உயரிய பதவி வகித்தாலும், அவருக்கு இந்த பணிவும், துணிவும், பண்பும் வர வேண்டுமென்றால், அது குழந்தைப்பருவத்தில் இருந்தே வர வேண்டும். அது தனது பெற்றோரை பார்த்து, அவர்களது ஆன்மிக குணத்தை உணர்ந்து வர வேண்டும். தனது ஆரம்ப பள்ளி ஆசிரியரைப் பார்த்து வர வேண்டும் என்று கலாம் நம்பினார். எனவே தான் டாக்டர் கலாம் அவர்கள், மாணவர்களையும், இளைஞர்களையும் அதிக அளவில் சந்தித்து, இந்த பண்புகளை அவர்கள் மத்தியில் விதைத்தார், அவர்களை உறுதிமொழி எடுக்கச்செய்தார்.

எப்போது என்ன செய்வார்

எப்போது என்ன செய்வார்

கலாம் சார் எப்போது என்ன செய்வார் என்று யாராலும் யூகித்து விட முடியாது. அப்போது அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவராகவும் பிரதமரின் ஆலோசக ராகவும் இருந்தார். இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள அணு விஞ்ஞானி என்பதால் அவர் எங்கு சென்றாலும் கமாண்டோ படையினர் உடன் செல்வார்கள். இப்படித்தான் சகல பாதுகாப்புடன் முதல் நாள் ராமேஸ்வரம் வந்தார்.

அரவிந்த் வரை போய்ட்டு வந்துர்றேன்

அரவிந்த் வரை போய்ட்டு வந்துர்றேன்

மறு நாள், மதுரை அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு போயி கண்ணை காட்டிட்டு வர்றேன்.. அங்கும் எனக்கான இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்தால், நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படும். அதனால் தனியாகவே போயிட்டு வந்துடறேன் என்று உறவினர் ஒருவரிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் நோயாளிகள் பலரும் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக காத்திருந்தனர். தொள தொளா பைஜாமா, ஜிப்பா அணிந்தபடி, தோளில் ஜோல்னா பையோடு நின்ற அப்துல் கலாமை கவுன்டரில் இருந்தவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.

ரூ. 1500 இருந்தா ஆபரேஷன்

ரூ. 1500 இருந்தா ஆபரேஷன்

ஆபரேஷன் பண்ணணும்னா எவ்வளவு ஆகும்என்று கலாம் கேட்க, 1500 ரூபாய் செலவாகும் என்றிருக்கிறார்கள். கலாமிடம் இருந்ததோ ரூ.300தான். அதனால் அவர், என்கிட்ட அவ்வளவு பணம் இல்லியே. செக் தரட்டுமா? என்று கேட்டிருக்கிறார். அவர்களோ, அதெல்லாம் செக் வாங்க மாட்டோம். வேணும்னா இலவச பிரிவுல அட்மிட்டாகி, இன்னைக்கு தங்கிக்கங்க... நாளைக்குத்தான் ஆபரேஷன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தேடித் திரிந்த பாதுகாப்பு அதிகாரிகள்

தேடித் திரிந்த பாதுகாப்பு அதிகாரிகள்

மறுநாள் காலையில், மதுரை பயணியர் விடுதியில் கலாமை தேடினார்கள் அவரது பாதுகாப்பு அதிகாரிகள். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் பதற்றம் அடைந்தார்கள். உடனே, இந்த தகவல் டெல்லி வரை சென்று விட்டது. பிறகுதான், விஷயமறிந்து, மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். இசட் பிரிவு படை அப்துல் கலாமை தங்களது மருத் துவமனையில் தேடுவதை அறிந்த டாக்டர் வெங்கடசாமி அப்துல் கலாம்கிற பேர்ல பேஷண்ட் யாரும் வந்தாங்களா? என்று விசாரித்தார்.

கிழிந்த பாயில் படுத்த்திருந்த அப்துல் கலாம்

கிழிந்த பாயில் படுத்த்திருந்த அப்துல் கலாம்

கேஸ் சீட்டை அலசிய ஊழியர்கள், ஆமாம் சார். அவர் இலவச பிரிவுல அட்மிட் ஆயிருக்காரு என்றனர். டாக்டர் வெங்கடசாமியும் கமாண்டோ படையினரும் இலவச பிரிவுக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓட, அங்கே அலுமினிய தட்டோடு கியூவில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு, கிழிந்த பாயில் படுத்திருந்தார் கலாம். என்ன சார், இப்படி பண்ணிட்டீங்க என்று டாக்டர் வெங்கட சாமி பரிவுடன் கேட்க, ஏழை நோயாளிகளுக்கு முகம் சுளிக்காமல் சிகிச்சை அளிப்பதை இங்கு நான் பார்த்தேன். வயசானவங்களை நர்ஸுங்க டாய்லெட்டுக்கு கூட்டிட்டு போயி உதவி பண்ணுறதயும் பார்த்தேன். சாமானியனா நான் வரலைன்னா இப்படி ஓர் உன்னதமான இடம் இந்த உலகத்துல இருக்கிறதே எனக்கு தெரியாம போயிருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு, அந்த மருத்துவமனைக்கு நன்கொடையாக ஒரு பெரிய தொகைக்கு செக் எழுதி தந்தார் என்று கூறியுள்ளார் பொன்ராஜ்.

 
 
 
English summary
Former president Abdul Kalam was a man of simplicity. His former aide Ponraj has explained an event of Kalam in a weekly.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X