For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமஜெயம் கொலையில் சிக்குவது யார்? முடிவுக்கு வருமா மூன்றாண்டு கால வழக்கு?!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக வளையத்திற்கு சிக்கியவர்களை வரிசையாக உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீசார். இதன் மூலம் மூன்றாண்டுகளுக்கும் மேலாக இந்த கொலை வழக்கில் கண்ணாமூச்சி ஆடி வரும் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெருங்கிய உறவுகளிடம் மட்டுமல்லாது, ரவுடிகளும் தற்போது போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் வந்துள்ளதால் வழக்கின் விசாரணை மேலும் நீண்டு கொண்டே போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். கல்லணை சாலையில் உள்ள புதர் ஒன்றில் கட்டுக்கம்பிகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இக்கொலை தொடர்பாக மூன்றாண்டுகளுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளி யார்?

கொலையாளி யார்?

ஆயிரம் பேருக்கு மேல் விசாரணை நடத்தியும் குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய ஒரு துப்பும் கிடைக்கவில்லை. கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்றம் அவகாசம்

நீதிமன்றம் அவகாசம்

ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து, குற்றவாளிகளைக் கைது செய்ய, கடந்த ஜூலை 24ம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் கெடு அளித்திருந்தது. இந்த நிலையில், சிலரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த வேண்டியதுள்ளது என சி.பி.சி.ஐ.டி போலீஸார் உயர்நீதிமன்றத்தில் அளித்த தகவலைத் தொடர்ந்து, மேலும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

உண்மை கண்டறியும் சோதனை

உண்மை கண்டறியும் சோதனை

முதற்கட்டமாக சந்தேக வளையத்தில் இந்த மூன்று பேர்களான கேபிள் மோகன், நந்தகுமார், முல்லைக்குடி சண்முகம் ஆகியோரிடம் சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் கடந்த வாரம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இருவருக்கு சோதனை

இருவருக்கு சோதனை

ராமஜெயத்துக்கு மிக நெருக்கமாக இருந்த இந்த மூவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என சி.பி.சி.ஐ.டி போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, இவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மதமில்லை என்று நீதிமன்றத்தில் சண்முகம் தெரிவித்துவிட்டார். ஆகவே, இவருக்கு அந்தச் சோதனை நடத்தப்படவில்லை. கேபிள் மோகனுக்கும் நந்துவுக்கும் கடந்த 24, 25 தேதிகளில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

பல மணிநேர விசாரணை

பல மணிநேர விசாரணை

உடம்பு பூராவும் முக்கிய இடங்களில் கிளிப் மாட்டி இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையில் 89 கேள்விகள் வரை கேட்டுள்ளனர். கூப்பிடும்போது மறுபடியும் வரவேண்டும் என்று கூறி அனுப்பிவிட்டார்களாம். அதேபோல நந்துவிடமும் ராமஜெயம் கொலை தொடர்பாக பல கேள்விகள் கேட்டுள்ளனர். . சம்பவம் நடந்து மூன்று வருடங்கள்ஆகிறது. இப்போது அனைத்தையும் ஞாபகப்படுத்திச் சொல்வதற்கு முடியவில்லை என்கிறார் நந்து.

சந்தேகம் உறுதி

சந்தேகம் உறுதி

அதேநேரத்தில் நந்து, முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார். நந்து முதன்முதலில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டது பற்றி சங்கீத் என்பவனுக்குச் சொல்லி இருக்கிறார் ஆனால் ராமஜெயம் காணாமல் போனது தனக்கு காலையில் 7.30 மணிக்கு மேல்தான் தெரியும் என்கிறார். இதுவே சந்தேகம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

முல்லைக்குடி சண்முகம்

முல்லைக்குடி சண்முகம்

சண்முகம் குற்றப் பின்னணி உள்ள நபர். இவைதான் எங்கள் சந்தேகத்துக்கான காரணம். ராமஜெயம், கூலிப்படையினரால்தான் கடத்தப்பட்டிருக்க வேண்டும். நல்ல அறிமுகமான நபர்கள் அதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை விசாரணையில் உறுதிப்படுத்தி உள்ளோம் என்கிறது போலீஸ் தரப்பு சண்முகம், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அன்று விழுப்புரத்துக்குச் சென்றதாகவும், வழியில் ராமஜெயத்தின் அண்ணன் நேருவை சந்தித்ததாகவும் சொல்கிறார். ஆனால் அதை நேரு மறுக்கிறார்.

சண்முகம்

சண்முகம்

ராமஜெயம் இறந்துபோன நாளன்று போக்குவரத்து மேலாளர் ஒருவரிடம் டிரான்ஸ்ஃபர் சம்பந்தமாக பணம் வாங்க விழுப்புரம் சென்றிருந்தேன். எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், 60 தடவைக்கு மேல சி.பி.சி.ஐ.டி போலீஸார் என்னை விசாரித்து டார்ச்சர் செய்துவிட்டார்கள் என்கிறார் சண்முகம்.

சகலை கோபால்ராஜ்

சகலை கோபால்ராஜ்

இதேபோல கேபிள் மோகன், நந்துவை தொடர்ந்து உண்மை அறியும் சோதனைக்கு ஆளாகவுள்ள மற்றொரு நபர் கோபால்ராஜ். ராம ஜெயத்தின் தனிச் செயலாளரான வினோத்தின் அப்பாதான் இந்த கோபால்ராஜ். இவர் ராமஜெயத்தின் மனைவி லதாவின் சகோதரி கணவராம். ராம ஜெயத்துக்கு சகலை முறை வேறு வருகிறது.

அதிகாலை நடந்தது என்ன?

அதிகாலை நடந்தது என்ன?

இவர் ராமஜெயம் கடத்தப்பட்ட அன்று அதிகாலை நேரத்தில் அவர் கடத்தப்பட்ட பகுதியில் நடமாடி உள்ளார். அந்த நேரத்தில் அங்கு ஏன் வந்தீர்கள் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்டதற்கு... ராமஜெயத்தின் மகன் எனது ஸ்ரீரங்கம் வீட்டில்தான் அன்று தங்கியிருந்தான். அவனை ராமஜெயத்தின் வீட்டில் விட்டுவிட்டு ராமஜெயத்தை சந்திக்க பேட்மிட்டன் திடலுக்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

தெளிவான பதில் இல்லை

தெளிவான பதில் இல்லை

அந்த பேட்மிட்டன் திடலும் ராமஜெயம் கடத்தப்பட்ட முள்புதரும் அருகருகே இருக்கின்றன. நீங்கள் ராமஜெயத்தை கடத்தியதை பார்க்க வில்லையா? எந்த சாலை வழியாக பேட்மிட்டன் திடலுக்கு வந்தீர்கள்?'' என சி.பி.சி.ஐ.டி. கேட்டதற்கு, கோபால்ராஜிடம் தெளிவான பதில் இல்லை. எனவேதான் கோபால்ராஜை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

ரவுடிகள் தொடர்பு

ரவுடிகள் தொடர்பு

ராமஜெயத்தின் உறவு, நட்பு வட்டத்துக்குள் விசாரணை நடத்தும் அதே நேரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கூலிப்படை தலைவன் சாமி ரவி பற்றியும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு திருச்சியில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட முட்டை ரவிக்கு மூளையாக செயல்பட்ட குணா, சாமி ரவி ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்பதும் போலீசாரின் சந்தேகம்.

சிக்கும் போலீஸ் அதிகாரி

சிக்கும் போலீஸ் அதிகாரி

சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் முன்பாக இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஜெயச்சந்திரன்தான் இத்தனை குழப்பத்திற்கும் காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர்தான் ராமஜெயம் நள்ளிரவில் கடத்தப்பட்டார் என்று கூறியவர். அதோடு சாமி ரவி தப்பிக்கவும் காரணமாக இருந்தாராம்.

நெருங்கிய தொடர்பு

நெருங்கிய தொடர்பு

ஜெயச்சந்திரனும், சாமி ரவியும் ஒரே ஜாதி என்பதோடு ஜெயச்சந்திரனின் ரியல் எஸ்டேட் வியாபார பார்ட்னர் சாமி ரவி என்கின்றனர். சசிகலாவின் தம்பி திவாகர்தான் ஜெயச்சந்திரனின் சம்பந்தியாம் எனவேதான் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை நெருங்கக் கூட முடியவில்லை என்கின்றனர்.

சிக்குவானா சாமி ரவி

சிக்குவானா சாமி ரவி

கடந்த சில ஆண்டுகளாகவே சாமி ரவி தமிழ்நாட்டில் இல்லை. இப்போது திருப்பதி பகுதியில் தங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அவனைப் பிடித்துவிட்டால், ராமஜெயம் கொலை தொடர்பான முக்கியத் தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

திசை மாற்றியது யார்?

திசை மாற்றியது யார்?

அதே நேரத்தில் கொலை வழக்கில் விசாரணையை ஆரம்பத்திலேயே திசை மாற்றியது யார் என கண்டுபிடித்தாலே கொலையாளி யார் என தெரிந்துவிடும் என்கிறார் ராமஜெயத்தின் அண்ணன் கே.என்.நேரு. உயர்நீதிமன்றம் அளித்த கெடு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசில் கொலையாளி சிக்குவானா? அல்லது சி.பி.ஐ போலீஸ் வசம் ராமஜெயம் கொலை வழக்கு மாற்றப்படுமா என்பது திருச்சி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
Ramajayam murder incident has passed 3 years, but there is no end to the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X