For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப தடையாக இருப்பது எது?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர் மணி

ஜெயலலிதா ஆட்சியின் மற்றுமோர் சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்றுடன் முடிந்து விட்டது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது பதினான்காவது சட்டமன்றத்தின் பத்தாவது கூட்டத்தொடர். ஜெயலலிதாவின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் என்றே இதனை கூறலாம்.

ஏனெனில் 2016 ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. ஜனவரியில் ஆளுநர் உரையும், அதன் பின்னர் இடைக் கால பட்ஜெட்டும் தான் இருக்கும். தேர்தல் ஆண்டு என்பதால் முழு பட்ஜெட்டை போட முடியாது. ஆகவே நடந்து முடிந்த கூட்டத் தொடர்தான் ஜெயலலிதா ஆட்சியின் இறுதி கூட்டத்தொடர் என்றே நாம் சொல்லலாம்.

Which prevents the govt to telecast assembly session live?

இந்தக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110 ன் கீழ் 181 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். 110 விதியின் கீழ் வரும் அறிவிப்புகளில் உறுப்பினர்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது, விவாதங்களும் நடக்காது. அரிதினும் அரிதாக பயன்படுத்தும் நோக்கத்துடனும், அவசரகாலத் தேவைகளுக்கான அறிவிப்புகளுக்காவும் உருவாக்கப்பட்ட 110 விதி இன்று சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. தன்னுடைய அத்தனை அறிவிப்புகளையும் முதலமைச்சர் 110 விதியின் கீழேயே செய்திருக்கிறார். இதன் மூலம் எந்தவிதமான விவாதங்களும் அவையில் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு சட்ட மன்ற விதி இடம் கொடுக்கிறது என்பது உண்மைதான், இது சபாநாயகரின் தனி உரிமை என்பதும் உண்மைதான். ஆனால் சபை விதிகளின் படி சரியென்றாலும், தார்மீக ரீதியிலும், மக்களாட்சியின் உயர் விழுமியங்களின்படியும் சரிதானா?

இந்தக் கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வாக நாம் பார்க்க வேண்டியது, கடைசி நாளான நேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்திய கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை (சிஏஜி). இதில் சொல்லப் பட்டிருக்கும் பல விஷயங்கள் தமிழ் நாட்டின் சமூக, பொருளாதார நிலைமையை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழக அரசின் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தமிழ் நாடு மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 2013 - 2014 ம் ஆண்டில் அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மோசமான நிதி மேலாண்மையே காரணம் என்று சிஏஜி குற்றம் சாட்டுகிறது. சென்னை மாநகராட்சியின் செயற்பாடுகளை குறிப்பாக அதனது தகவல் தொழில்நுட்ப சேவையை சாடும் சிஏஜி, வரும் புகார்களில் 39 சதவிகிதம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முடித்து வைக்கப் பட்டதாகக் கூறுகிறது.

மற்றுமோர் அதிர்ச்சித் தகவல் தமிழகத்தில் உள்ள 50 சதவிகித கிராமங்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்கிறது. 1995 ல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உபயோகத்திற்காக வாங்கப்பட்ட செஸ்னா விமானத்தை துரிதமாக விற்காததால், அதனது பராமரிப்புக்காக தேவையில்லாமல் 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப் பட்டிருப்பதாகவும் சிஏஜி குற்றஞ் சாட்டியிருக்கிறது.

குறுகியகால மின்சார சப்ளையின்படி காண்டிராக்டர்களிடமிருந்து மின் பகிர்மான கழகம் (டாங்கேடோ) வாங்கிய மின்சாரத்தில் போதிய மின்சாரம் வரவில்லை. ஆனால் இந்தக் குறையையும் மீறி 280.37 கோடி ரூபாய் தனியாருக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் சிஏஜி குறை கூறுகிறது.

இவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க அவையில் எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில் கூட்டத் தொடரின் கடைசி நாளில்தான் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. இது வழக்கமாக ஒவ்வோர் அரசும், அது யார் ஆண்டாலும் செய்யக் கூடியதுதான். தங்களது தவறுகளை சட்டமன்றத்தில் விவாதிப்பதிலிருந்து ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்ளவே கூட்டத் தொடரின் கடைசி நாளன்று தாக்கல் செய்யப் படும் சிஏஜி அறிக்கைகள் உதவிக் கொண்டிருக்கின்றன. அம்மா ஆட்சியாகட்டும், ஐயா ஆட்சியாகட்டும் யார் ஆட்சியானாலும் இதுதான் யதார்த்தம்.

இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்டின் பிரதான பிரச்சனைகள் இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டனவா என்றால் பதில் 'இல்லை'. ஆகஸ்ட் 24 ம் தேதி சட்டமன்றம் கூடியது. மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் ஆன பிறகு ஐந்து மாத இடைவெளியில் கூடிய கூட்டத் தொடர். இவ்வளவு நீண்ட இடைவெளி பட்ஜெட்டுக்குப் பிறகு விடப் பட்டதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பற்றியெரிந்த மதுவிலக்குப் பற்றி ஒரு விவாதம் கூட சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்பதை வைத்தே எந்த மாதிரி அஜெண்டாவுடன் சட்டமன்றம் செயற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தொடர்ச்சியாக திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கொடுத்த மது விலக்குக் கோரும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. கூட்டத் தொடரின் இறுதிக் கட்டத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை பற்றிய விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கு தமிழகத்தில் கண்டிப்பாக கொண்டு வரப்படாதென்று உறுதியாக அறிவித்து விட்டார். தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்சனையான மதுவிலக்குப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சரி. இது ஆளும் கட்சியின் நிலைப்பாடு என்றால் எதிர்கட்சிகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்தும், புத்திசாலித்தனமாகவும், மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்காக வியூகம் வகுத்தார்களா என்றால் அதுதான் இல்லை. பிரதான எதிர்கட்சியான தேமுதிக அவைக்கே வரவில்லை. திமுக அவைக்குள் போவதும், வருவதுமாக மட்டுமே இருந்தது. பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மதுவிலக்கு பிரச்சனையில் துள்ளி குதித்த எதிர்கட்சிகள் சட்டமன்றத்தில் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனதன் ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது.

இதனிடையே ஜெயலலிதா நாளும் பொழுதும் 110 விதியின் கீழ் அறிக்கைகளை படித்துக் கொண்டிருந்தார். இதற்கு முன்பு ஜெ படித்த 110 அறிக்கைகளின் கதி என்னவாயிற்று என்றும் எதிர்கட்சிகளால் சட்ட மன்றத்துக்கு உள்ளே கேள்வி எழுப்ப முடியவில்லை. வெளியே இதுகுறித்து மென்மையான குரலில் பேசி அடங்கிப் போயினர் எதிர்க்கட்சிகள். மக்களைப் பாதிக்கும் அடிப்படை பிரச்சனைகளில் கூட எதிர்கட்சிகளிடம் எந்த ஒற்றுமையும் இல்லாதது ஆளும் கட்சிக்கு சாதகமானதாகவே மாறிப் போனது.

1991 - 1996ல் ஒரு உறுப்பினர் மட்டுமே, பரிதி இளம்வழுதி, திமுக வில் இருந்தார். அவர் செய்ததைக் கூட இன்று 23 உறுப்பினர்களைக் கொண்ட திமுக வால் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

1991 ல் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தை 2016 ல் பூர்த்தி செய்யவிருக்கிறார். இந்த கால் நூற்றாண்டு காலத்தில் 15 ஆண்டு காலம் ஜெயலலிதாதான் முதலமைச்சராக இருந்திருக்கிறார். 15 பட்ஜெட்டுகளை அவரது அரசு தாக்கல் செய்திருக்கிறது. 1991 முதல் 1996 வரையில் ஜெயலலிதா வின் முதல் ஆட்சிக் காலத்தின் ஐந்து சட்டமன்றக் கூட்டத் தொடர்களிலும், 2001 - 2006 ஆட்சிக் காலத்தில் இரண்டு கூட்டத் தொடர்களில் செய்தி சேகரித்தவன் என்கின்ற முறையில் நான் உணருவது, சட்ட மன்றம் நடக்கும் முறையில் இம்மியளவும் மாற்றமில்லை என்பதுதான். எதிர்கட்சிகளுக்கு அறவே பேச வாய்ப்புகள் இல்லை, எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒரு வரி பேசினால், பத்து வரிகள் குறுக்கீடுகள் என்பதற்கு சட்ட மன்ற பதிவேடுகள் சாட்சி. இவற்றை யார் வேண்டுமானாலும் சட்ட மன்ற நூலகத்தில் அமர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

1991 - 1996, 2001, 2006 ஆட்சிக் காலங்களை விட 2011 - 2016 ஆட்சிக் காலம் மோசமான காலம் என்றே சொல்லலாம். ஆனால் கடந்த இரண்டு ஆட்சிக் காலங்களை விட இந்த முறை திசையறியாத, இலக்கறியாத, தங்களுக்குள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத எதிர்கட்சிகள் ஆளும் கட்சியின் பணியை மிகவும் சுலபமாக்கி கொண்டிருக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதியும், பிரதான எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தும் சட்டமன்றத்துக்கு வருவதே இல்லை. ஸ்டாலின் சபைக்கு வந்தாலும் அவரால் பெரியதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. மற்ற கட்சிகள் உதிரிக் கட்சிகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன.

சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக தொலைக் காட்சியில் ஒளி பரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வந்து கொண்டிருக்கிறது. தேமுதிக இதற்கான முழு செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்ளுவதாகவும் கூறியிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதற்கு செவி மடுக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் நடவடிக்களுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப் படும் போது ஒரு மாநில சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப எது தடையென்பது அந்த ஆளும் கட்சிக்கே வெளிச்சம்.

வரும் காலங்களில் இந்த கோரிக்கை வலுப்பெற்று, 2016 ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்தால் அது தமிழக அரசியலுக்கு நிச்சயம் நன்மை பயக்கும். எங்களை பேசவே சபாநாயகர் அனுமதிப்பதில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிலும், எதிர்கட்சிகள் எதிரிக்கட்சிகளாகவே இருந்து சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றன என்ற ஆளுங் கட்சியின் குற்றச்சாட்டிலும் எது உண்மை என்பதை மக்களே தெரிந்து கொள்ளப் போகிறார்கள்!

English summary
Which factor prevents the govt to telecast assembly session live in TV channels? Here is an analysis of our columnist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X