For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதிப்பூங்காவான சென்னை பற்றி எரிந்தது எப்படி? அறவழி போராட்டத்தை வன்முறை களமாக்கியது யார்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களால்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் இரண்டு காவல் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

கலவரத்தில் கல்வீச்சு சம்பவங்களால் காவலர்கள் பலர் காயமடைந்தனர். பல போலீசாருக்கு மண்டை உடைப்பு, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் காயம் ஏற்பட்ட, 100 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

வடபழனி, மயிலாப்பூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் காவல் நிலையங்கள் அருகே, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன. அங்கிருந்த, பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை, வன்முறை கும்பல் சாலையில் துாக்கி வீசியது.

கலவரத்தின் தொடக்கம்

கலவரத்தின் தொடக்கம்

திருவல்லிக்கேணியில் பேரணியாக வந்தவர்களை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் போர்வையில் இருந்த சில சமூக விரோதிகள் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது அங்கு இருந்த ஒரு காரை போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் போலீசார் அங்கு சென்று விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தினர்.

தீவைத்த கும்பல்

தீவைத்த கும்பல்

அந்த நேரத்தில், ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 50 வாகனங்கள் தீக்கிரையாகின. போலீஸ் நிலையமும் தீ வைக்கப்பட்டது. அங்கு இருந்த போலீசாரை, ஜன்னலை உடைத்து காப்பாற்றினர். இது திடீரென பதற்றத்தை ஏற்படுத்தியது.

மயிலாப்பூரில் கலவரம்

மயிலாப்பூரில் கலவரம்

ஆர்.கே.சாலையில் மயிலாப்பூர் மின்வாரிய அலுவலகம் அருகே மக்கள் நல கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோர் நேற்று பிற்பகலில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மயிலாப்பூர் ரூதர்புரம் கிளம்பியவர்கள் அம்பேத்கார் பாலம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு வந்த போலீசார் திடீரென அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட அனைவரும் மீதும் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பெண்கள் உள்பட அனைவரும் நாலபுறமும் சிதறி ஓடினர்.

அடித்து நொறுக்கிய போலீஸ்

அடித்து நொறுக்கிய போலீஸ்

போலீசார் அவர்களை விடாமல் விரட்டி விரட்டி தாக்கினர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதனால், அப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. மேலும், ரூதர்புரம் மற்றும் சில தெருக்களில் புகுந்த போலீசார் அங்கிருந்த இளைஞர்கள் மீது கண்மூடிதனமாக தாக்குதல் நடத்தினர். இதில் சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

பதற்றமான நேரம்

பதற்றமான நேரம்

ஆர்.கே.சாலையில் இருந்து பஜார் ரோடு செல்லும் சாலை மூடப்பட்டது. இதேபோல் பஜார் ரோட்டில் இருந்து ஆர்.கே.சாலை வரும் வழியில் அம்பேத்கர் போலீஸ் பூத் அருகே போலீசார் தடுப்புகளை வைத்து தடை போட்டனர். இந்த தடியடி காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. இந்த நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் வேன்கள் எரிக்கப்பட்டன. போலீஸ் பூத் சூறையாடப்பட்டது.

கறுப்பு சட்டைகாரர்கள்

கறுப்பு சட்டைகாரர்கள்

அரும்பாக்கம் நூறடி சாலை எம்எம்டிஏ பேருந்து நிறுத்தம் அருகே 50க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் கலைந்துபோகும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் இன்ஸ்பெக்டரை தாக்கியது. மேலும் அங்கிருந்த போலீஸ் டெம்போ வேனை தீ வைத்து எரித்தது.

போர்களமான 100 அடி சாலை

போர்களமான 100 அடி சாலை

மெட்ரோ ரயில் நிலையத்தையும் கல் வீசித் தாக்கியது. அவ்வழியே வந்த தீயணைப்பு வண்டியையும் அடித்து நொறுக்கினர். இதில் சில போலீசார் காயமடைந்தனர். வடபழனி மெட்ரோ ரயில்நிலையம் அருகே வந்த மற்றொரு கும்பல், அங்கு நின்ற போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தியது. போலீசார் மீதும் சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தியது. போலீசார் அவர்களை விரட்டி, விரட்டி தாக்கினர். இதனால் 100 அடி சாலை முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி

இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி

கொடுங்கையூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையார் பாண்டியன், நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் அவரது காரை மறித்த சிலர், அவரை கீழே இழுத்துப் போட்டு தாக்கி, காருக்கு தீ வைத்தனர்.

டாஸ்மாக் கடை சூறை

டாஸ்மாக் கடை சூறை

அந்த மர்ம ஆசாமிகள் 2 டாஸ்மாக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். பின்னர் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்னையில் நேற்று மட்டும் வரலாறு காணாத அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் நகர் முழுவதும் போலீசாரின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டன. ஆனாலும் நகர் முழுவதும் பதட்டம் நிலவியது.

சமூக விரோதிகள் யார்?

சமூக விரோதிகள் யார்?

நேற்றைய கலவரத்தில் 250 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 150 வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. வடபழனி வாகனங்கள் தீ வைக்கப்பட்டதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம், கல்வீச்சு, தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல என்று கூறியுள்ளார் காவல்துறை ஆணையர். மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோத கும்பல் ஊடுருவியது எப்படி என்பதுதான் இப்போது அனைவரின் முன் நிற்கும் கேள்வியாக உள்ளது. அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக மாற்றியது யார் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அறவழிப் போராட்டத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ரவுடிக் கும்பலே இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

English summary
Who instigated violence in Chennai? This is the million dollor question among the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X