
கட் செய்யப்பட்ட ஆடியோ.. வீடியோ மட்டும்தானாம்! ஊட்டி ஸ்கூலில் ஆய்வு செய்த ஆளுநர் ரவி.. "புது" சர்ச்சை
ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி ஊட்டியில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீண்டும் ஊட்டிக்கு சென்றுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் ஆளுநர் ரவி ஊட்டி சென்றார்.
அப்போது ஊட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆளுநர் - வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார்.
காலை பிடித்துவிட்ட ஆளுநர்.. மேடையில் திடீரென ஸ்லிப் ஆன பெண்ணுக்கு பதறி ஓடி முதலுதவி செய்த தமிழிசை!

ஆளுநர் ரவி
ஆனால் திமுக அரசு, இந்த மாநாட்டை விமர்சித்து இருந்தது. அதோடு ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணை வேந்தர்களை முதல்வரே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது ஆளுநருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆளுநர் இதை இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை. இந்த நிலையில் மீண்டும் 4 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்று இருக்கிறார்.

தமிழ்நாடு அரசு மசோதா
அங்கு இருக்கும் பழங்குடியினருக்கான ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் ஆளுநர் ரவி ஆய்வு செய்தார். அவருடன் சில அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். பள்ளியின் நிலையை ஆய்வு செய்தார். மாணவர்களின் தோரணம் எப்படி உள்ளது, கல்வி முறை எப்படி உள்ளது, ஹாஸ்டல் வசதி எப்படி உள்ளது என்று ஆய்வு செய்தார். உணவு எப்படி உள்ளது என்றும் ஆய்வு செய்தார் என்றும் கூறப்படுகிறது.

கல்வி தேவை
மாணவர்களின் கல்வி மற்றும் தேவைகள் குறித்து ஆலோசனை செய்தார். இது தொடர்பாக அவர் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின் அவர் அங்கு இருந்த மாணவர்களுடன் கேள்வி எழுப்பி சில நிமிடங்கள் கலந்துரையாடல் செய்தார். ஆனால் இந்த ஆய்வு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள் உள்ளே சென்று செய்தி சேகரிக்க முயன்ற போது அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

ஆடியோ
மேலும் கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து காணொளி செய்தி ஒளிபரப்பு துறை மூலம் எடுக்கப்பட்டது. இந்த காணொளி செய்தி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் காணொளியில் இருக்கும் ஆடியோ நீக்கப்பட்டு, வெறும் வீடியோவை மட்டும் கொடுக்க வேண்டும் என்று செய்தி மக்கள் துறைக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுநர் தரப்பின் இந்த செயல் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

புதிய கல்விக்கொள்கை
சமீப நாட்களாக புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசி வருகிறார். புதிய தேசிய கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். புதிய கல்விக்கொள்கையை எல்லோரும் படிக்க வேண்டும். எல்லோரும் இதை படித்து, முக்கியமாக ஆட்சியாளர்கள் இதை படித்து உணர வேண்டும். அதன்பின் அதன் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும். விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும். கல்வி கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது . நம்மளுடைய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவை பல்வேறு அரசாங்கங்களால் ஏற்கனவே மறைக்கப்பட்டது. என்று ஆளுநர் ரவி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.