For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பம் குடும்பமாக அதிமுகவை 'ஆக்கிரமித்த' மா.செ.க்கள்... அதிரவைக்கும் களையெடுப்பின் பின்னணி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவின் அசைக்க முடியாத மாவட்ட செயலாளர்கள் என நினைத்துக் கொண்டிருந்த பலரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிமுகவை அப்பா- மகன், மருகன் என ஒட்டுமொத்த குடும்பங்களுமே பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து ஆட்டம் போட்டதாலேயே ஆப்பு வைத்திருக்கிறதாம் அதிமுக மேலிடம்.

தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் 15 பேரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இவர்கள் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்ட செயலரின் பதவி பறிப்புக்கு பின்னாலும் அதிர வைக்கும் சம்பவங்கள் இருக்கிறது.

போயஸ் கார்டனில் திமுக

போயஸ் கார்டனில் திமுக

சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக உருமாறிய சென்னையை திமுக கைப்பற்றியது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 10-ல் திமுக, 6-ல் அதிமுக வென்றது. தென்சென்னை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, வடசென்னை, கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் தொகுதிகளில் அதிமுகவினர் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றவில்லை என்றே உளவுத்துறை தகவல் கொடுத்திருக்கிறது. அத்துடன் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் பூத்தில் திமுகவுக்கு அதிக அளவில் வாக்குகள் கிடைத்திருக்கிறதாம்.

சென்னை மாநகராட்சி 'டார்கெட்'

சென்னை மாநகராட்சி 'டார்கெட்'

இதனால்தான் தென்சென்னை மா.செ. சத்யா, வடசென்னை மா.செ. சீனிவாசன் இருவரது பதவியையும் பறித்து அனுபவம் வாய்ந்த விபி கலைராஜன் மற்றும் பாலகங்காவை மாவட்ட செயலர்களாக்கியுள்ளார் ஜெயலலிதா. உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அசைன்மெண்ட்டுடன் இந்த நியமனமாம்.

தேனியில் கூண்டோடு கலைப்பு

தேனியில் கூண்டோடு கலைப்பு

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு தூக்கியடிக்கப்பட்டுவிட்டனர். அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அவரது மகன் ரவீந்தரநாத்தும் அதிமுகவே தாங்கள்தான் என்கிற கோதாவில் விளையாடிய விளையாட்டுதான் இந்த அதிரடிக்குக் காரணமாம். அதுவும் முதல்வராக பன்னீர்செல்வம் இருந்த போது கட்சியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் தென்மாவட்ட அதிமுகவில் பல மாற்றங்களை செய்து தங்களது ஆதரவாளர்கள், உறவினர்களை பொறுப்புகளில் அமர்த்தி இருக்கின்றனர்.

உள்ளடி வேலைதான்...

உள்ளடி வேலைதான்...

இது தொடர்பான புகார்கள் மேலிடத்துக்குப் போய்ச்சேரவிடாமலும் பன்னீர்செல்வம் தரப்பு பார்த்துக் கொண்டதாம். தேனி மாவட்ட செயலர் சிவகுமார், பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத்குமாருக்கு தீவிர விசுவாசியாக இருந்தாராம். அத்துடன் சட்டசபை தேர்தலில் கம்பம், ஆண்டிப்பட்டி தொகுதிகளில் ஜக்கையனும் தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே மெனக்கெட்டு 'உள்ளடி' வேலை பார்த்திருக்கின்றனர்.

இதற்கான ஆதாரங்களை உளவுத்துறை கொடுக்க ஒட்டுமொத்த தேனி மாவட்ட அதிமுகவே கூண்டோடு கலைக்கப்பட்டுவிட்டது. தங்க தமிழ்செல்வனுக்கு மாவட்ட செயலர் பதவி கொடுத்து ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

நத்தம் விஸ்வநாதன், மருமகன் கண்ணன்

நத்தம் விஸ்வநாதன், மருமகன் கண்ணன்

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவே தாங்கள்தான் என ஆட்டம் போட்ட மாஜி அமைச்சரும் மாவட்ட செயலருமான நத்தம் விஸ்வநாதன், அவரது மருமகன் கண்ணன் (நத்தம் தொகுதி கழகச் செயலர்) இருவரது பதவியும் பறிபோய்விட்டது. நத்தம் விஸ்வநாதன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் வெல்லவே முடியாத ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக்கப்பட்டார். மாமா நத்தம் விஸ்வநாதன் ஆத்தூருக்குப் போனதால் நத்தம் தொகுதி கழகச் செயலரான மருமகன் கண்ணன், நத்தம் தொகுதியில் வேலை பார்க்காமல் ஆத்தூரில் முகாமிட்டு தேர்தல் பணி செய்தார்.

அத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், திண்டுக்கல், நத்தம் 3 தொகுதிகளிலும் அதிமுக வெல்லவே கூடாது என வியூகம் போட்டு வேலை பார்த்ததாம் நத்தம் கோஷ்டி. இது அப்போதே ஊடகங்களில் வெளியானது. தற்போது உளவுத்துறையும் இந்த உள்குத்தை உறுதி செய்து அறிக்கை அனுப்ப முதல் கட்டமாக இருவரது பதவியும் பறிபோயுள்ளது. அடுத்ததாக நத்தம் கோஷ்டியில் சேர்ந்து கொண்டு உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகளும் களையெடுக்கப்படுவார்கள் என்பதால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பீதியடைந்து போயுள்ளனர்.

மா.செ. பதவியில் மேயர் மருதராஜ்

மா.செ. பதவியில் மேயர் மருதராஜ்

திண்டுக்கல்லில் இனி நத்தம் விஸ்வநாதன் கோஷ்டி வளர்ந்துவிடக் கூடாது என்பதாலேயே திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சரவையில் நம்பர் 2 இடத்துக்கு கொண்டுவந்தார் ஜெயலலிதா. அதேபோல் சீனிவாசனும் அவரது மகன்கள், உறவினர்கள் நத்தம் பாணியில் செயல்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மேயர் மருதராஜை மாவட்ட செயலராக்கி செக் வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

நாங்குநேரி விவகாரம்....

நாங்குநேரி விவகாரம்....

திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த ஆர்.முருகையா பாண்டியன், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு நெல்லை மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயகுமாருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதுதான் இவர் பதவி பறிபோனதற்கு காரணமாம்.

நாங்குநேரி தொகுதியில் சுயேட்சை ஒருவர் 20,000 வாக்குகள் வாங்கியதுதான் அதிமுக தோல்விக்குக் காரணமாம். இந்த சுயேட்சை 'வழிக்கு கொண்டுவரவும் இல்லை; இது பற்றி மேலிடத்துக்கு தகவலும் சொல்லவில்லை' என்பதாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறதாம்.

நெல்லை அதிமுகவிலும் குடும்ப ஆதிக்கம்

நெல்லை அதிமுகவிலும் குடும்ப ஆதிக்கம்

நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முத்துக்கருப்பன் எம்.பி.யும் அவரது மகனும் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்த ஹரிகர சிவசங்கரும் நெல்லை மாவட்ட அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தாங்கள் வைத்ததே சட்டம் என ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் பாணியில் செயல்பட்டிருக்கின்றனர். தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் புகார்கள் பறக்க இப்போது பதவி பறிக்கப்பட்டுவிட்டது.

அத்துடன் தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி விவகாரத்தில் இருவரது பங்கு குறித்தும் உளவுத்துறை விரிவான அறிக்கை கொடுத்ததால் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்திருக்கிறதாம்.

கவிழ்க்கப்பட்ட தளவாய் சுந்தரம்

கவிழ்க்கப்பட்ட தளவாய் சுந்தரம்

சட்டசபை தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்ட செயலராக அறிவிக்கப்பட்டார் தளவாய் சுந்தரம்.... அவ்வளவுதான் கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவே அவருக்கு எதிராக வரிந்து கட்டி வேலை பார்த்தது.

சிவகாசி ஜெயலட்சுமி விவகாரம் தொடங்கி தளவாய் சுந்தரம் தொடர்பான அத்தனை 'பஞ்சாயத்து' விவகாரங்களையும் கட்டு கட்டாக மேலிடத்துக்கு அனுப்பி வைப்பதே பிரதான பணியாக அதிமுகவினர் மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக தோற்றது. விளவங்கோடு தொகுதியில் டெபாசிட்டையே பறிகொடுத்த அவலமும் நிகழ்ந்தது.

பத்மநாபன் மரணமும்...

பத்மநாபன் மரணமும்...

பத்மநாபன் என்பவர் தளவாய் சுந்தரம் வீட்டில் நிகழ்ந்த தகராறில் உயிரிழந்த சம்பவமும் அதிமுக மேலிடத்துக்கு போனது. இப்படி ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்டமே தளவாய் சுந்தரத்துக்கு எதிராக சுழன்றடித்து வேலை பார்த்ததால் தற்போது மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது.

தென்மாவட்ட தொழிலதிபர் மூலம் லாபி செய்து ராஜ்யசபா எம்பியான விஜயகுமாருக்கு மாவட்ட செயலர் பரிசும் கிடைத்துள்ளது.

English summary
Here the reasons of TN CM Jayalalithaa's revamp and reshuffle in Party Structure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X