For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா கொடநாட்டில் மேலும் தங்காமல் திடீரென சென்னை திரும்பியது ஏன்? கருணாநிதி பதில்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டவாறு கொடநாட்டில் மேலும் தங்காமல் திடீரென சென்னை திரும்பியது ஏன்? என திமுக தலைவர்
கருணாநிதி சாடியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டவாறு கொடநாட்டில் மேலும் தங்காமல் திடீரென சென்னை திரும்பியது ஏன்?

மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது பற்றி முடிவெடுப்பதற்காகவும், வேறு சில வேலைகளுக்காகவும் வந்ததாக பலரும் கருதிய போதிலும், "அதிகப்படியான மழை பெய்யும் காலத்தில் கொடநாட்டில் இருக்க வேண்டாம்" என்று நினைத்துத்தான் அவர் முன் கூட்டியே அங்கிருந்து கிளம்பி விட்டார் என்று வார இதழ் ஒன்று எழுதியிருக்கிறது.

why-jayalalitha-return-from-kodanadu-karunanidhi

மேலும் அந்த வார இதழில், இந்த மழையைக் காரணமாக வைத்துக் கொண்டு, பண மழையைப் பாய்ச்ச ஆளுங்கட்சியினர் திட்டமிட்டிருப்பதாகவும், அரசின் கஜானாவைத் திறந்து வைத்து, வெள்ள நிவாரணம் என்ற பெயரில் நகர்ப்புறப் பகுதிகளில் ரேஷன் கார்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதமும், கிராமப்புறப் பகுதிகளில் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதமும் கொடுக்க யோசித்துக் கொண்டிருப்பதாகவும், அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டச் சொல்லியிருப்பதாகவும் எழுதியிருக்கிறார்கள். எப்படியோ, மக்களுக்கு நிவாரணத் தொகை உரிய நேரத்தில் கிடைத்தால் நல்லது.

நிவாரணத்தையும், பொதுத் தேர்தலையும் இணைத்து ஆளுங்கட்சி நடந்து கொண்டால், மக்கள் ஏமாறத் தயாராக இல்லை, ஆளுங்கட்சிக்குத் தக்க பாடம் கிடைக்கும்.

பெருமழையால் மனத் துயருக்கு ஆளாகியுள்ள மக்கள் தங்களுடைய கோபத்தை அரசுக்கு உணர்த்திடச் சாலை மறியலில் ஈடுபடாமல் என்னதான் செய்வார்கள்?

கேள்வி: சென்னை மாநகரில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதிக்குள் சென்ற சென்னை மாநகராட்சி மேயர் அங்கிருந்து பொதுமக்களால் விரட்டப்பட்டிருக்கிறாரே?

பதில்: பிறகு என்ன? இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான முதல் அமைச்சரும் அங்கே வந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லவில்லை; சென்னை மாநகராட்சி மன்ற மேயரும் இதுவரை வரவில்லை என்கிற போது, அங்கே பெருமழையால் மனத் துயருக்கு ஆளாகியுள்ள மக்கள் தங்களுடைய கோபத்தை அரசுக்கு உணர்த்திடச் சாலை மறியலில் ஈடுபடாமல் என்னதான் செய்வார்கள்?

வாக்குக் கேட்க வந்தபோது ஜெயலலிதா எப்படி யெல்லாம் இனிக்க இனிக்கப் பேசினார்? இன்று இந்தப் பெருமழையில் அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டாமா?

ஆனால் இங்கே நடைபெற்றது, அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களிலேயே ஒரு பிரிவினர் சென்னை மாநகர மேயரைத் தாக்கியிருக்கிறார்கள் என்பதுதான்! சென்னை மாநகரில் மட்டுமல்ல; வேறு சில மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகளில் ஏற்பட்டுள்ள மந்த கதியைக் கண்டு, கொதித்துப் போயிருக்கும் மக்கள், சாலை மறியல், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினரை முற்றுகையிடுதல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு அளிப்பதாகக் கூறப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம் வெற்றியா? தோல்வியா?

பதில்: சாதாரண பாமர மக்களிடம் கேட்டாலே இதற்குப் பதில் கூறுவார்களே? கடந்த வார ஜூ.வி. இதழில், "மிக்சியில் பிளேடு இல்லை, மின் விசிறியில்றெக்கை இல்லை, கிரைண்டரில் கல்லே இல்லை" "காயலாங்கடைக்குப் போகும் விலையில்லாப் பொருள்கள்" என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றைப் பொதுமக்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக திருச்சி கிராப்பட்டி பகுதியில் சில பெண்கள் கூறும்போது, "இந்தப் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் மிக்சி, கிரைண்டர் கொடுத்தாங்க. மின் விசிறியில் றெக்கையே இல்லை, கிரைண்டரில் கல் உடைஞ்சு போயிருந்துச்சு, மிக்சியில் பிளேடே இல்லை; அதை வேண்டாம்னு சொன்னோம். அதுக்கு, "இதுதான் கவர்ன்மெண்ட்ல இருந்து வந்தது. இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது, வாங்குனா வாங்குங்க, இல்லைனா போங்க"ன்னு சொல்லிட்டாங்க. நல்ல பொருளாக வாங்குனவங்களுக்கும், ரெண்டு மூணு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்கல. எல்லாம் வீணாப் போச்சு. தேவையில்லாமல் வீட்டை அடைச்சுக்கிட்டு இருக்குன்னு பல பேர் அதைக் காயலாங்கடையில் 200 ரூபாய்க்குப் போட்டுட்டாங்க.

இப்படி சரியில்லாத இலவச மிக்சி, கிரைண்டர் சேர்ந்துட்டதால, இப்போ அவர்களும் வாங்குறது இல்லை" என்று சொல்லி விட்டு, வீட்டில் இருந்த தமிழக அரசின் விலை யில்லாப் பொருள்களைக் கொண்டு வந்து வீதியிலே போட்டார்களாம்! இது போல ஒருவரிடம் அல்ல, பல பேரிடம் நேரில் கேட்டறிந்து, தங்கள் இதழில் விரிவாக வெளியிட்டுள்ளார்கள். அந்த இதழிலே, கிரைண்டர் உற்பத்தியாளர்களிடம் அவர்கள் பேட்டி கண்ட போது, ஒரு கிரைண்டர் 2,142 ரூபாய் என்றால், அதில் 1500 ரூபாய் ஒரு கும்பலுக்குத் தனியாகப் போய் விடுவதாகவும், மீதித் தொகையில் தரமான கிரைண்டர் தயாரிப்பது இயலாத காரியம் என்றும் கூறியிருக்கிறார்கள். எனவே இப்படி இலவசப் பொருள்களைத் தருவதன் மூலம் ஒரு சிலர் கோடிக் கணக்கிலே கொள்ளை அடிக்கத்தான் பயன்படுகிறது.விரிவாக இந்தத் திட்டம் பற்றிக் கூற வேண்டு மேயானால், இந்த ஆட்சியில் இலவசமாகத் தரப்படும் கிரைண்டர் 2500 ரூபாய், மிக்சி 1500 ரூபாய், மின் விசிறி 500 ரூபாய். மொத்தம் 4500/- ரூபாய்.

ஆனால் மக்கள் மீது இந்த ஆட்சியில் சுமத்திய சுமை எவ்வளவு என்று பார்த்தால், பால் கட்டணம் உயர்வு = லிட்டருக்கு 10/- ரூபாய். (சராசரியாக ஒரு குடும்பத்தில் ஒரு லிட்டர் பால் உபயோகப்படுத்துவதாக வைத்துக் கொண்டால் 5 வருடத்திற்கு அந்தக் குடும்பம் பால் கட்டண உயர்வினால் தந்த விலை) ஐந்தாண்டுகளுக்கு பால் உயர்வு காரணமாக ஒரு குடும்பம் கூடுதலாகத் தர வேண்டியது 18 ஆயிரம் ரூபாய். அடுத்து மின் கட்டண உயர்வு - யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 1/- ரூபாய். மாதம் சராசரியாக 250 யூனிட் மின் கட்டணம் செலுத்துவதாக வைத்துக் கொண்டால் 5 வருடத்திற்கு ஒரு குடும்பம் அதிகமாக மின் கட்டண உயர்வினால் தந்த விலை சுமார் 15,000 ரூபாய். அடுத்து பேருந்துக் கட்டண உயர்வு. மாதம் சராசரியாக ஒரு குடும்பம் 200/- ரூபாய் பேருந்துக் கட்டண உயர்விற்குத் தருகிற விலையாக வைத்துக் கொண்டால் 5 வருடத்திற்கு ஒரு குடும்பம் பஸ் கட்டண உயர்வினால் தந்த விலை 12,000 ரூபாய்.

ஆக தமிழகத்தில் ஒரு குடும்பம் அ.தி.மு.க. அரசிடமிருந்து பெற்ற இலவசப் பொருள்களின் மதிப்பு 4,500 ரூபாய் என்றால், அவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு விலை உயர்வு காரணமாகத் தருகின்ற தொகை 45 ஆயிரம் ரூபாயாகும். இதிலிருந்து அ.தி.மு.க. அரசினால் மக்களிடம் மொத்தம் சுரண்டப்பட்ட தொகை எவ்வளவு என்று கணக்கிட்டால், 45,000 ஒ 2 கோடி குடும்பங்கள் = 90,000/- கோடிகள். அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வரும் பொழுது தமிழகத்தின் மொத்தக் கடன் தொகை = 1,00,000 கோடிகள்.அ.தி.மு.க. அரசின் இந்த 4 வருட ஆட்சியில் தமிழகத்தின் மொத்தக் கடன் = 2,10,000/- கோடிகள். சுமார் 1,10,000 கோடி கடன் அதிகமாகி இருக்கிறது .

மக்களிடம் சுரண்டிய தொகையான 90,000 கோடியும், கடன் 1,10,000 கோடியும் சேர்த்து சுமார் 2,00,000 கோடி பணம் செலவழித்ததாக அறியப்படு கிறது. இந்த 2,00,000 கோடித் தொகையை எந்தத் திட்டத்திற்குச் செலவு செய்தார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காரணம் இவர்கள் ஆட்சிக்கு வந்து வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை

கேள்வி: பணியிலே இருக்கும்போது இறந்து விடும் அரசு அலுவலர் குடும்பத்தின் உடனடித் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த முன்பணம் 5000 ரூபாய் என்பதை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: இந்தத் தொகை அரசு அலுவலர் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து வழங்கப்படுவதாகும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்திலேயே சட்டப்பேரவையில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப் பட்ட போதிலும், அதற்கான அரசாணைதான் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் எதற்கு முனைப்பும் வேகமும் காட்டுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறட்டுமா?

பதினைந்து கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு குத்தகைக்கு அமெரிக்க "பெப்சி" நிறுவனம் செலுத்தும் குத்தகைத் தொகை என்பது வெறும் ரூ.3,600/= (மூவாயிரத்து அறுநூறு ரூபாய்) மட்டுமே ஆகும்.

நெல்லை மாவட்டத்தில், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிளாட் எண் 65 முதல் 76 வரையிலும் கங்கைகொண்டான் கிராமத்தில்), 36.00 ஏக்கர் பரப்பளவில், தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் நீரையெடுத்து அமெரிக்காவின் "பெப்சி" நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் தயாரிக்க 20-01-2014 இல் "பெப்சி" குளிர்பான நிறுவனம் அனுமதி கேட்டது. இதற்கு பதினைந்தே நாளில், தமிழக அரசு 05-02-2014 அன்று அமெரிக்காவின் "பெப்சி" நிறுவனத்திற்கு வரலாறு காணாத வேகத்தில் அனுமதி அளித்து, 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போது பெப்சி நிறுவனம் அங்கு கட்டிட வேலைகளை வேகமாகச் செய்து வருகிறது. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் "பெப்சி" நிறுவனத்தைத் துவக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

தமிழகத்திற்குள் வந்த இவர்கள் ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு மக்களின் எதிர்ப்புக் காரணமாக அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டு வேலைகளை வேகமாகச் செய்து வருகின்றனர். அரசு மதிப்பீட்டின்படி சிப்காட் வளாகத்தில் உள்ள 36 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.5,40,00,000/- (ஐந்து கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்). ஆனால் சந்தை மதிப்பின்படி இந்த 36 ஏக்கர் நிலத்தின் மதிப்பு பதினைந்து கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்திற்கு அமெரிக்க "பெப்சி" குளிர்பான நிறுவனம், குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், 36 ஏக்கருக்கும், ஆண்டு ஒன்றுக்கு வெறும் முப்பத்தி ஆறு ரூபாய் மட்டுமே என 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், 98 ஆண்டு களுக்குப் பிறகும்; 99ஆம் ஆண்டில், குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ரூபாய் குத்தகை; 36 ஏக்கருக்கு செலுத்த வேண்டும் என பெப்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ‘மாபெரும்' ஒப்பந்தம் போட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு பல்வேறு நீரேற்றும் பம்புகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், நெல்லை கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் அமையும் "பெப்சி" குளிர்பான ஆலைக்கு வழங்கப்படும். தினமும் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வழங்க அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது படிப்படியாக ஒரு கோடி லிட்டர் வரை கூட அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் வாரம் ஒரு நாள் மட்டுமே குடிதண்ணீர் பெற்று வரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளுக்கும், தாமிரபரணி ஆற்றின் மூலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக் கும் கிடைத்து வரும் குடிநீரும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளன.

பெப்சி குளிர்பான நிறுவனம் ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை ரூ.20/= ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். ஒரு லிட்டர் குளிர் பானத்தை ரூ.60/= ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். வரையறை அற்ற இந்த நீர்வளக் கொள்ளையால் தாமிரபரணி மூலம் நெல்லை -தூத்துக்குடியில் விவசாயம் நடந்து வரும் 86,000 ஏக்கர் விவசாய நிலமும் கடுமையாகப் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் நீர்ப்பிடிப் புப் பகுதிகள் குறைந்து போய் வருகிறது.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து போன நிலையில், பெப்சி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆற்று நீரை தினமும் பல லட்சம் லிட்டர் அளவுக்கு உறிஞ்சினால், தாமிரபரணியை நம்பி வாழும் விவசாயிகளின் எதிர்காலம் அழிந்தே போய் விடும். இதற்கான ஒப்பந்தத்தைத்தான் அ.தி.மு.க. அரசு பதினைந்தே நாட்களில் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் பேரவையில் செய்த அறிவிப்புகள் எல்லாம் நாட் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் தூங்குகின்றன. விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் காவு கொடுத்து, "பெப்சி"யைக் கைதூக்கி விடும் ஆட்சி அல்லவா தமிழகத்திலே நடைபெறுகிறது!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief M Karunanidhi raised question on return of jayalalitha from kodanadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X