For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசி முயற்சி... இந்த 2 காரணத்திற்காக அழகிரியை திமுக மீண்டும் பரிசீலிக்கலாமே! #dmk

அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பது குறித்து திமுக தலைமை பரிசீலிக்க வேண்டும்.

Google Oneindia Tamil News

சென்னை: இன்று திமுகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தும் விட்டது.

இந்த கூட்டத்தில், எத்தகைய விவகாரங்கள் குறித்து பேசினாலும், ஆலோசனை செய்தாலும், விவாதித்தாலும் கண்டிப்பாக ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டார்கள் என்பது திட்டவட்டமாக தெரிந்த கதைதான். அதுதான் அழகிரியை கட்சிக்குள் மீண்டும் இணைக்கும் முடிவு!!

இதற்கு திமுக தரப்பில் வைக்கப்படும் காரணங்களும், அவர்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் சந்தேகங்களும் நியாயம்தான்!! அழகிரியை கருணாநிதியை ஒதுக்கி வைத்தது உண்மைதான், அழகிரி தான் மத்திய அமைச்சராக இருந்தபோது அந்த பதவியை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதும் உண்மைதான். எந்த நல்ல திட்டத்தையும் 5 ஆண்டு காலத்தில் செய்யவில்லை என்பதும் உண்மைதான். அதிரடி இருக்கிறதே தவிர அனல்தெறிக்கும் மேடை பேச்சு அழகிரியிடம் இல்லை என்பதும் உண்மைதான். அடிக்கடி கட்சி தலைமையை அது கருணாநிதி ஆகட்டும், ஸ்டாலின் ஆகட்டும் அவர்களை மிரட்டி, உருட்டி பார்ப்பதும் உண்மைதான்.

 மனம் உடைந்த ஸ்டாலின்

மனம் உடைந்த ஸ்டாலின்

தேவையில்லாத சலசலப்புகளை, பரபரப்புகளை, பகீர் பகீர் தகவல்களை கிளப்பிவிட்டு கட்சிக்கு அவப்பெயரை அன்றிலிருந்து ஏற்படுத்தி வருவதும் உண்மைதான். மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் அஸ்திவாரமே ஆட்டம் காணப்படுமா என திமுக மூத்த நிர்வாகிகள் நினைப்பதும் உண்மைதான். கருணாநிதியே வேண்டாம் என்று கட்சியை விட்டு ஒதுக்கியவரை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதை திமுக தரப்பில் யாருமே விரும்பவில்லை என்பதும் உண்மைதான். கருணாநிதி இருக்கும்போதாகட்டும், மறைந்த பிறகாகட்டும் அழகிரி செயல்பாடு, பேச்சினால் ஸ்டாலின் மனம் உடைந்ததும் உண்மைதான்.

 அழகிரியின் பாசம்

அழகிரியின் பாசம்

ஆனால் இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அழகிரி குறித்து 2 விஷயங்களை திமுக தரப்பு யோசித்து பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று அழகிரியின் நிர்வாகத் திறன். தென் தமிழகத்தில் திமுகவை வார்த்தெடுக்க வேண்டும் என்று கருணாநிதியால் அன்று பணிக்கப்பட்டவர்தான் அழகிரி. அதன்படி தென்தமிழகத்தில் திமுகவை நிலைநிறுத்தினார். இதற்கு பெரிதும் உதவியாக இருந்தது அழகிரி அனைவரையும் மதிக்கும் அன்பான அணுகுமுறை, பேச்சு தான். ஒவ்வொரு தொண்டனின் வீட்டு நல்லது, கெட்டதுகளுக்கு உரிமையாக சென்று வரும் குணமுடையவர் அழகிரி. அனைத்து தொண்டர்களின் மீதும் பாசத்தை பொழிந்தார்.

 கலைஞரின் பிம்பம்

கலைஞரின் பிம்பம்

இந்த குணத்தை கண்ட தென்மண்டல மக்கள், இன்னொரு கருணாநிதி மதுரையில் இருப்பதுபோலவே, அதாவது "கலைஞரின் பிம்பம்" என்றே அழகிரியை பார்க்க தொடங்கி விட்டனர். ஒருவேளை கருணாநிதி, அழகிரியை தென்மண்டலம் என்று மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் திமுக வளர்ச்சி பணிகள் குறித்த பணியினை கொடுத்திருந்தால், அழகிரியின் செயல்பாடு மாநிலம் முழுவதும் வேறு மாதிரியாக கூட போயிருந்திருக்கலாம். எனவே தென் தமிழக திமுகவை அழகிரியிடம் மீண்டும் கொடுத்தால், நிச்சயம் அது ஸ்டாலினுக்கு லாபமாக முடியும்.

 புதுக்கட்சி தொடங்குவாரா?

புதுக்கட்சி தொடங்குவாரா?

இரண்டாவது காரணம், திமுகவின் பலம். தன்னை கட்சிக்குள் சேர்க்காத காரணத்தினால் அழகிரி புதுக்கட்சி தொடங்குவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. ஒருவேளை தனிக்கட்சி தொடங்கினாலோ, அல்லது பாஜக கட்சியுடன் அழகிரி சேர்ந்துவிட்டாலோ அது அழகிரிக்குதான் தோல்வி என்பது வேறு கதை. ஆனால் கட்சியை உடைத்துக் கொண்டு, செல்வாக்கான ஒரு நபர், அதுவும் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று கட்சியை தொடங்கினாலோ, வேறு கட்சியுடன் இணைந்து கொண்டாலோ 50 ஆண்டு கால திமுகவுக்கு இழுக்கு ஏற்பட்டுவிடாதா?

கட்சி உடையலாமா?

கட்சி உடையலாமா?

ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனிக்கட்சி தொடங்குவது என்பது அதிமுகவில் குறிப்பாக டிடிவி தினகரன் குடும்பத்தில் சாதாரணமாக நடக்கலாம். ஆனால் உலகின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒன்றாக கருதப்படும் கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கலாமா? இப்படித்தான் ஜெயலலிதா மறைந்து, அதிமுகவும் இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் மீண்டும் ஆர்.கே.நகரின் தேர்தலின்போது ஒன்றாக இணைந்ததால்தானே அதிமுகவுக்குள் சலசலப்பு குறைந்து மரியாதை கிடைத்தது. எனவே அழகிரி கட்சியை உடைத்து கொண்டு போகாமல் தடுப்பது குறித்து திமுக பரிசீலிக்கலாமே? அழகிரியை அழைத்து ஒருமுறை பேச முயற்சிக்கலாமே? அழகிரிக்கு இது கடைசி கட்டம் என்றாலும், அவரது எந்தவிதமான முடிவினாலும் திமுக பாதிப்படைந்துவிடக்கூடாது என்பதுதான் உண்மையான திமுகவினரின் எண்ணமாக உள்ளது.

 உள்ளக்குமுறல்

உள்ளக்குமுறல்

திமுகவை ஆட்சிபீடத்தில் ஏற்றவும், கருணாநிதியை முதல்வராக நாற்காலியில் அமர வைக்கவும், லட்சக்கணக்கான திமுகவினர், தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளார்கள். 60 ஆண்டு காலத்திற்கு மேலாக திமுகவை பாதுகாக்கவும், அதனை ஆட்சி பீடத்தில் அமர்த்தவும் கருணாநிதி அர்ப்பணித்த உழைப்பும் தியாகமும் அளப்பரியது. இந்த தியாகப் பணியில் அழகிரியின் பங்கும் உள்ளது என்பதையும் மறந்து விடக் கூடாது என்பதே அடிமட்ட திமுக தொண்டனின் உள்ளக் குமுறலாகவும் உள்ளது.

English summary
Why not bring again Azhagiri into the party again?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X