For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதி கர்ணன் விவகாரத்தில் தமிழகத்தின் எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்காதது ஏன்?

By Shankar
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

ஒரு வழியாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர்நீத மன்ற நீதிபதியாகவும் பணியாற்றி வருபவருமான நீதிபதி சி.எஸ். கர்ணன் விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கர்ணனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி விட்டது. ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த தண்டனை இம் மாதம் 8ம் தேதி வழங்கப்பட்டது. ஆகவே கர்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்படவிருக்கிறார். தற்போது அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி என்ற காரணத்தால் கர்ணன் மேற்கு வங்கத்தில் உள்ள ஏதாவது ஒரு சிறையில்தான் அடைக்கப்படுவார்.

2015 ம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய காலத்திலேயே நீதிபதி கர்ணன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இந்திய நீதித் துறைக்கு வடிவம் எடுத்தது. சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளுக்கு எதிராகவும், பிற நீதிபதிகளுக்கு எதிராகவும் கடுமையான வார்த்தைகளால், அவதூறாக கர்ணன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். "2009 ல் பதவியேற்றதிலிருந்து 2015 ல் கொல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்படும் வரையில் நீதிபதி கர்ணன் சென்னை உயர்நீதி மன்றத்தின் நான்கு தலைமை நீதிபதிகளுடன் - நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், எம்.ஒய். இக்பால், எலிபி தர்மா ராவ் மற்றும் சஞ்சய் கவுல் - ஆகியோருடன் மிக கடுமையாக மோதினார்.

Why all parties keep mum in Justice Karnan issue?

இது தவிர்த்து கிட்டத்தட்ட 40 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியுடன் கூட கர்ணனுக்கு சுமுகமான உறவு இருந்தது கிடையாது. நீதிபதி கர்ணன் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று தெரிந்தால் அங்கு வந்திருக்கும் மற்ற நீதிபதிகள் தலை தெறிக்க ஓடுவதைத்தான் நான் பல முறை பார்த்திருக்கிறேன்,'' என்கிறார் வழக்கறிஞர் கே.விஜயராமன்.

தன்னை எதிர்ப்பவர்களை, தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடி மக்களை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் (எஸ்சி, எஸ்டி சட்டங்கள்) வழக்குகளை பதிவு செய்து சிறையில் தள்ளுவேன் என்று வெளிப்படையாகவே கர்ணன் பேசத் துவங்கினார். ஒரு கட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட நான்கு நீதிபதிகளுக்கு எதிராக கைது வாரண்டுகளையும் கர்ணன் பிறப்பித்து விட்டார். "இந்த நான்கு நீதிபதிகளை உடனடியாக கைது செய்து என் முன் நிறுத்த வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜூக்கு உத்திரவும் போட்டு விட்டார். அந்த அளவுக்கு நிலைமை முற்றியது,'' என்கிறார் விஜயராமன்.

இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஒரு மனுதாரராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுதந்திர இந்தியா கண்டிராத அதி அற்புதமான காட்சிதான் அது. ஒரு உயர் நீதிமன்றம் தன்னை, தன்னுடைய நீதிபதி ஒருவரிடமிருந்து காப்பாற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது. வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் உடனடியாக கர்ணனின் வாரண்டுகளுக்கு தடை விதித்தது. அதன் பின்னர் சில மாதங்களில் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதியாக கர்ணன் மாற்றப்பட்டார்.

ஆனால் கொல்கத்தா நீதிமன்றத்திலும் கர்ணனின் நடவடிக்கைகள் மாறவில்லை. "கொல்கத்தாவில் 2015 ல் நகரின் நடு பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மிகப் பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இதில் பலர் மாண்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் அந்த பாலத்தை கட்டி வந்த நிறுவனம் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். ஜாமீன் மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில் இளைய நீதிபதி கர்ணன். அந்த அமர்வின் தலைமை நீதிபதி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய தீர்ப்பு எழுதி கொண்டிருக்கும் போதே நீதிபதி கர்ணன் சம்மந்தப் பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிட்டார். இதில் அதிர்ந்து போன கொல்கத்தா உயர்நீதி மன்றம் உடனடியாக அந்த ஜாமீனுக்கு தடை விதித்து உத்திரவிட்டது,'' என்று கூறுகிறார் வழக்கிறார் எஸ்.மாதவ குமார்.

இதனிடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பற்றி தொடர்ச்சியாக அவதூறான கருத்துக்களையே கூறி வந்த கர்ணன் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி விட்டார். அதில் 20 உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏராளமான லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறியிருந்தார். இந்த மனுவை பிரதமர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.

இங்குதான் சிக்கலே துவங்கியது. விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் கர்ணனனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது. இதில் நேரில் ஆஜராக உத்திரவிட்டும் இரண்டு முறை கர்ணன் ஆஜராகவில்லை. கடைசியாக ஒரு முறை மட்டும் ஆஜரானார். ஆனால் எதுவும் பேசவில்லை.
இந்த பின்புலத்தில்தான் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் ஆறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு எழுதினார் கர்ணன். இந்த உத்தரவு தன்னுடைய கதையை முடிக்கப் போகிறது என்று நீதிபதி கர்ணனுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இதில் வெகுண்டு எழுந்த உச்ச நீதிமன்றம் மே 9 ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்தை நன்கறிந்தவர்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களிடையே இரண்டு விதமான கருத்துக்களை உருவாக்கியிருக்கிறது. "வேறு வழியில்லை. உச்ச நீதிமன்றம் செய்தது சரிதான்," என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருக்கும் பிரபாகர். ஆனால் வேறு பல வழக்கறிஞர்கள் இது தவறான தீர்ப்பு என்கின்றனர்.

"தவறு செய்யும் உயர் நீதி மன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வதுதான் நியாயம். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலம்தான் நடக்க வேண்டும். அதற்கு இம்பீச்மெண்ட் என்று பெயர். அப்படித்தான் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையாண்டிருக்க வேண்டும்,'' என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் இப்படிக் கூறுகிறார். "நீதிபதி கர்ணன் அடுத்த மாதம் 11 ம் தேதி ஓய்வு பெற்று விடுகிறார். இந்த விஷயத்தை அப்படியே உச்ச நீதிமன்றம் விட்டு விடலாம். பதவியிலிருக்கும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை சிறைக்கு அனுப்புவது என்பது பழம் பெருமை வாய்ந்த இந்திய நீதித்துறைக்கு உகந்தது இல்லை," என்று கூறுகிறார்.

வேணுகோபாலின் இந்த கருத்தை நிராகரிக்கும் நீதிபதி கேஹர் இவ்வாறு சொல்லுகிறார், "நீதிபதி கர்ணன் நீதிபதி மட்டுல்ல, ஒரு சாமானிய குடிமகனும் கூட. இது போன்ற தவறுகளை ஒரு சாமானியன் செய்தால் உச்ச நீதிமன்றம் எப்படி அணுகுமோ அப்படித்தான் நாங்கள் இதனை அணுகுகிறோம்''.

ஊழல் வழக்கில் மாட்டி சின்னா பின்னமாகும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்றாவது உயர் நீதி மன்ற நீதிபதி கர்ணன். இவருக்கு முன்னால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெருமையை தமிழகத்திற்கு ஈட்டித் தந்தவர் நீதிபதி வி. ராமசாமி. அவரை நாடாடளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் செய்யும் அளவுக்கு நிலைமை போனது. ஆனால் கடைசி நேரத்தில், அதாவது நாடாளுமன்றத்தில் பெரிய விவாதம் நடந்த பிறகு கை விடப்பட்டது. சமீபத்திய உதாரணம் நீதிபதி பி.டி. தினகரன். இவர் மீதும் ஊழல் வழக்குகள் சுமத்தப் பட்டு, பின்னர் இவர் சிக்கிம் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பாட்டார். மூன்றாவதாக சிக்கிக் கொண்டது கர்ணன்.

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் நியாயப்படி பார்த்தால் கர்ணன் விவகாரத்தை நாடாளும்ன்றத்துக்கு அனுப்பி அவரை இம்பீச்மெண்ட் செய்யும் நடவடிக்கைகளை துவக்குமாறு கூறியிருக்க வேண்டும். மாறாக நேரடியாக தன் மீது (அதாவது உச்ச நீதிமன்றத்தின் மீது) தொடுக்கப் பட்ட குற்றச் சாட்டுக்கு தானே நீதிபதியாக இருந்து ஆறு மாத சிறை தண்டனையை கர்ணனுக்கு வழங்கியிருப்பது இயற்கை நீதிக்குப் பொருந்தாத்து என்ற கருத்தும் நிலவுகிறது.

"நீதிபதிகளுக்கு எதிராக கர்ணன் கடிதம் எழுதியது பிரதமருக்கு. பிரதமர் அலுவலகம் அதனை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி இன்று கர்ணனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை கொடுத்திருப்பது தவறானது என்றுதான் நான் கருதுகிறேன். பிரதமர் அலுவலகம் நாடாளுமன்றத்தின் உதவியுடன் மட்டுமே கர்ணன் விவகாரத்தை கையாண்டிருக்க வேண்டும்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் தவ்லீன் சிங்.

"நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வந்து கர்ணனை பதவி நீக்கம் செய்வது என்பதெல்லாம் உச்ச நீதிமன்றம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. காரணம் இம்பீச்மெண்ட் நடவடிக்கையின் போது ஒரு கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியை நாடாளுமன்றத்துக்கு அழைத்து அவரது விளக்கத்தை கூறுமாறு கேட்கப்படுவார்கள். அப்போது சம்மந்தப்பட்ட அந்த நீதிபதி மற்ற நீதிபதிகள் மீதான அடுக்கடுக்கான புகார்களை எடுத்து வைப்பார். இந்தப் புகார்களில் 10 சதவிகிதம் உண்மை இருந்தால் கூட அது இந்திய நீதி துறையின் மாண்பை சிதைத்து சின்னாபின்னமாக்கி விடும். அதனால் எந்த கட்டத்திலும் கர்ணனை இம்பீச்மெண்ட் அளவுக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி விடாது," என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்.

மற்றோர் சுவாரஸ்யமான தகவல். தான் ஒரு தலித் நீதிபதி என்று அடிக்கடி நீதிபதி கர்ணன் கூறிக் கொள்வார். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்தவோர் ஒரு அரசியல் கட்சியும், தலித் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட கர்ணனுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. நீதிபதி பிடி தினகரன் விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள் அவருக்காக குரல் எழுப்பின. நீதிபதி ராமசாமி விஷயத்தில் பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் ராமசாமிக்கு ஆதரவாகவே இருந்தன. தேசிய அளவிலும் கூட கர்ணனுக்கு எதிராக நாடறிந்த தலித் தலைவர்களான மாயாயவதி, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் கூட இதுவரையில் வாய் திறக்கவில்லை.

எது எப்படியோ, நீதிபதி கர்ணன் தமிழ் நாட்டுக்கு அள்ள, அள்ள குறையாத புகழை கொண்டு வந்து விட்டார். அதுதான் பதவியில் இருக்கும் போதே ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை சிறையில் தள்ள முடியும் என்ற நிகழ்வு. இனிமேல் பதவியில் உள்ள நீதிபதிகள் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த துறையைச் சேர்ந்தவர்களும், அவர்கள் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுகளை கூறினால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கும் ஒரு அற்புதமான முன்னுதாரணத்தை உச்ச நீதிமன்றம் உணர்த்திவிட்டது!

English summary
No no politicians or parties are not opening their mouth in Justice Karnan issue? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X