For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஏஎஸ் கோச்சிங்னா அது டெல்லிதான்... இதை மாற்றி சென்னைக்கு புகழ் சேர்த்தவர் சங்கர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்?- வீடியோ

    சென்னை: ஐஏஎஸ் படிப்பு என்றால் அது டெல்லிக்குதான் போகனும் என்ற விதியை மாற்றி சென்னைக்கு பெயரும் புகழும் சேர்த்தவர் சங்கர்.

    சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரும்பாலான சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர், நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டியை காண்போம்.

     Why Shankar started IAS Academy in Chennai?

    பிறந்தது, வளர்ந்தது, படித்தது?

    திருச்செங்கோடு மலசமுத்திரத்தில் தந்தை (தேவராஜ்), தாயுடன் (தெய்வானை) இருந்த காலங்களை விட நல்லாக்கவுண்டன் பாளையத்தில் தாத்தாவுடன் இருந்த காலங்களே அதிகமானது. நான் பிறந்தவுடன் என் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு குடிபெயர்ந்தார்கள். அரசுப்பள்ளியில் தான் படித்தேன். எட்டாம் வகுப்பு வரை நான் படிப்பில் சுமாருக்கும் குறைவு தான். 'நீ படிக்கவே லாயக்கு இல்லாதவன்' என்று தந்தையால் தாத்தா (நஞ்சைய கவுண்டர்), பாட்டி (சங்கரம்மாள்) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். ஒரு வருட காலம் தறியில், லாரியில் வேலை பார்த்தேன். பின்பு நல்ல சமுத்திரம் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அங்கு என் ஆங்கிலப் பாட ஆசிரியர் ஏதாவது ஒரு செயலை முன் வைத்து பாராட்டிக் கொண்டே இருப்பார். அவரின் பாராட்டுதலும் ஊக்கமுமே 10ம் வகுப்பில் பள்ளியின் 'முதல் மாணவனாக' என்னைத் தேர்ச்சி பெறவைத்தது.

    பனிரெண்டாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் இரண்டாவது இடம் பிடித்தேன். கட் ஆஃப் மார்க் குறைவாக இருந்ததால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இம்ப்ரூவ்மெண்ட் எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எண்ணம் எல்லாம் 'சினிமாவில்' இருந்ததால் ஏற்கனவே எடுத்த மதிப்பெண்ணைவிட குறைவாக இம்ப்ரூவ்மெண்ட் தேர்வில் எடுத்தேன். பின்பு பி.எஸ்.ஸி. அக்ரியில் சேர்ந்தேன். அங்கு விளையாட்டு தனமாக செய்த குறும்பால் அந்த ஆண்டு படிக்க முடியாமல் போனது. அந்தச் சமயத்தில் தான் தாத்தாவை இழந்தேன். என் தாத்தாவின் இழப்பு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிறவேகத்துடன் அதே கல்லூரியில் மீண்டும் சேர்ந்தேன்.

    சிவில் சர்வீஸ் தேர்வின் மீது ஆர்வம் எப்போது எழுந்தது?

    கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வின் மீது ஆர்வம் அதிகரித்தது. என்றாலும் இடையிடையே சினிமா ஆசை என்னை விடுவேனா என்றது. அதற்கான முயற்சியில் இறங்கிய போது கிடைத்த அனுபவம் மீண்டும் என்னைப் படிக்கத் தூண்டியது. ஹரியானாவில் அரசு உதவித் தொகையுடன் எம்.எஸ்.ஸி., அக்ரி முடித்தேன். முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்விற்காக டெல்லி சென்றேன். வருடம் ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சம் வரை பணம் அவசியம் தேவையாக இருந்தது. பெற்றோர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியாத வறுமையான காலம் அது. என் அன்புக்கு பாத்திரமாகியிருந்த என் மனைவி வைஷ்ணவி எனக்காக டெல்லிக்கு வருகை புரிந்து வேலைபார்த்து என்னைப் படிக்க வைத்தார். 2001, 2002 இரண்டு வருடங்களும் நான் ஐ.ஏ.எஸ். தேர்வின் இறுதிவரை சென்றும் வெற்றி கிடைக்கவில்லை. அடுத்தடுத்து முயற்சித்தேன். வெற்றி என் வசம் வரவே இல்லை. அந்தக் காலகட்டத்தில் தந்தையையும் இழந்தேன். எல்லாமுமே எனக்கு இழப்பாகவே இருந்தது. சென்னை வந்தேன். எதனால் நான் தோற்கிறேன். என்னை நானே கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். திறமையை வெளிப்படுத்துவதில் பயம், தயக்கம் இவைகளே தடையாக இருக்கிறது என்பதை காலம் கடந்து உணர்ந்தேன்.

    சங்கர் IAS அகாடமியை எப்போது துவக்கினீர்கள்?

    IAS தேர்வில் வெற்றி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. அந்த காலகட்டத்தில் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.. கிடைத்த வேலைக்குச் சம்பளமோ ஐயாயிரம் ரூபாய் மட்டுமே. 33 வயதை கடந்தாயிற்று. ஐயாயிரம் சம்பளத்தில் அமர்ந்து 'குடும்பத்தை' மகிழ்ச்சிகரமாக நடத்துவது சாத்தியமாகுமா? யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் நாமே ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன். நண்பர்கள் கை கொடுத்தார்கள். என் தாய் தான் சேமித்து வைத்திருந்த 720 ரூபாயைத் தந்து உதவினார்கள். மாதம் 4000 ரூபாய் வாடகையில் அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கினேன். முதலாண்டு 36 பேர் சேர்ந்து படித்தார்கள்.

    சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சிக்கு 'டெல்லி' பெயர் பெற்றிருந்த காலகட்டத்தில் 'சென்னையில்' நீங்கள் துவக்கியபோது மாணவர்களை எப்படி ஈர்த்தீர்கள்?

    நோட்டீஸ் ஒன்றைஅச்சடித்துக் கொண்டு IAS படிப்பவர் வீடு வீடாகச் சென்று விநியோகித்தேன். அவர்களுக்கு 'டெமோ' கொடுத்தேன். ஒரு முறை, இரு முறைஎனப் பலமுறைமுயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நம்ம ஊரிலேயே படித்து சாதிக்க முடியும் என்கிற'நம்பிக்கையை' வரவழைத்தேன். தன்னம்பிக்கையுடன் வருகை புரிந்தார்கள். முதல் வருடம் பயிற்சி எடுத்த 36 பேரில் 11 பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்றவர்களே விளம்பரதாரர்கள் ஆனார்கள். நான் அகாடமிக்காக கடந்தாண்டுவரை விளம்பரம் செய்ததே இல்லை. இன்று 600க்கும் மேற்பட்டோர் பயிற்சி எடுத்து வருகிறார்கள். 2010 இறுதித் தேர்வில் 120 பேர் கலந்து கொண்டார்கள். 46 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். திரு. அபிராம் சங்கர் இந்திய அளவில் 4வது இடம் பிடித்து சாதித்திருக்கிறார்.

    தன்னால் முடியாத ஒன்றை பிறரை முடிக்க வைத்திருக்கிறீர்கள். இந்த அசாத்திய திறமையை எப்படி வரவழைத்துக் கொண்டீர்கள்?

    டெல்லியில் உள்ள ஏதாவது ஒரு அகாடமியில் சேர்ந்து பயில அன்று வசதி இல்லாத காரணத்தால் ஒவ்வொரு அகாடமியில் பயிலும் நண்பர்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு தெரிந்து சிவில் சர்வீஸ் தேர்வைச் சந்தித்தவன் நான். அதனால் ஒவ்வொரு அகாடமியின் செயல்பாடு குறித்த அனுபவம் கிடைத்தது. நண்பர்களின் மூலமாக பெற்றதுடன், நான் கற்றதையும் சேர்த்து எனக்கென்று ஒருவழியை உருவாக்கி பயிற்சி பெறுபவர்கள் விரும்பும் வகையில் பாடம் எடுத்து செயல்பட ஆரம்பித்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து தமிழக மக்களின் தற்போதைய மனநிலை?

    இத்தேர்வு குறித்த விழிப்புணர்வு நல்ல முறையில் வளர்ந்து இருக்கிறது. நிறையப் பெற்றோர்கள் தங்கள் மகன் / மகளை படிக்க வைக்க வேண்டும் என்று பெரிதும் விருப்பப்படுகிறார்கள். பெண்கள் அதிக அளவில் பயிற்சிக்கு வருகிறார்கள். அகாடமி ஆரம்பித்த போது 30 பேர் 40 பேராவது வருவார்களா? எங்கிருந்து வரப்போகிறார்கள்? என்கிற கேள்வி இருந்தது. ஆனால் தற்பொழுது இடம் கொடுக்க முடியாத நிலையில் பயிற்சி நிறுவனங்கள் இருக்கிறது. எங்கள் அகாடமியைப் பொறுத்த வரையில் இடையில் யாரையும் சேர்த்துக் கொள்வது இல்லை. மே, அக்டோபர் என இரண்டு மாதங்களில் வருபவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் சங்கர்.

    [ கிராம மக்களுக்கு இது பேரிழப்பு.. சங்கர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்! ]

    English summary
    Why Shankar started IAS Academy in Chennai and changed the name of Delhi is the best place for IAS coaching.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X