For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சண்முகநாதன் வெளியே.... மாஃபா பாண்டியராஜன் உள்ளே... நடந்தது என்ன?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா புஷ்பா விவகாரத்தில் சண்முகநாதனின் அமைச்சர் பதவியை பறித்த ஜெயலலிதா, தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக மாஃபா பாண்டியராஜனை நியமித்துள்ளார். 2016 மே மாதம் நடைபெற்ற பதவியேற்புக்குப் பின்னர் 2வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் திமுகவினர் கேள்விகேட்கும்போது அவர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ மாஃபா கே.பாண்டியராஜன் புள்ளிவிபரமாக பதிலளிப்பார். எல்லாவற்றுக்கும் நீங்கள் பதில் சொல்கிறீர்களே... நீங்கள் என்ன அமைச்சரா? என எதிர்க்கேள்வி கேட்பார்கள் திமுக எம்.எல்.ஏக்கள். அவர்களின் கேள்விக்கு தற்போது பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியளித்து பதில் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

Why Shanmuganathan lost his post?

2011ம் ஆண்டு தேமுதிகவில் இருந்த போது விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக சட்டசபையில் நுழைந்தார் மாஃபா பாண்டியராஜன். அப்போது ரமணாவாக மாறி புள்ளிவிவரத்தோடு பேசினார். பொதுவாக, உறுப்பினர் பேசும்போது முதல்வர் குறுக்கிடவே மாட்டார். பாண்டியராஜன் பேசும்போது, இரண்டு முறை முதல்வர் குறுக்கிட்டு விளக்கம் கொடுத்தார்.

இது, மறுநாள் செய்திகளில் பெரிய அளவில் வெளிவந்தது. இதில் இருந்துதான் பிரச்னையும் ஆரம்பமானது. அப்போது தான் விஜயகாந்த், நீங்கள் புள்ளிவிவரப் புலியாக இருக்கலாம். அதை சட்டசபையில் காட்டாதீர்கள் என்று கோபப்பட்டாராம்.

தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து ஆவடி எம்.எல்.ஏவாக ஆன பின்னரும் புள்ளி விபரங்களை சட்டசபையில் அடுக்குவார் பாண்டியராஜன். டிவி விவாத நிகழ்ச்சிகளில் எதிராளி எவ்வளவுதான் கத்தி பேசினாலும், அமைதியாக பதிலளிப்பார்.

அந்த அமைதியும், புள்ளி விபரப் பேச்சும்தான் இப்போது அவரை அமைச்சராக்கியுள்ளது. அதுவும் முக்கிய துறைகளான பள்ளி கல்வித்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக மாறியுள்ளார் மாஃபா பாண்டியராஜன்.

எதிர்பார்த்த அமைச்சரவை மாற்றம்

தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பால்வளத்துறை அமைச்சராக இருந்த சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சசிகலா புஷ்பா விவகாரத்தில் சண்முகநாதனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட போதே, அமைச்சர் பதவி விரைவில் பறிபோகும் என்ற பேச்சு எழுந்தது. எதிர்பார்த்தது போலவே பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஏன்?

சசிகலா புஷ்பாவின் செல்போனில் இருந்த மெசேஜ்கள், வாட்ஸ் அப்பில் இருந்த மெசேஜ்கள் என ஒன்றுவிடாமல் கார்டன் வட்டாரம் கையில் எடுத்துள்ளது. அப்படி எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் தற்போது அதிரடியும் தொடங்கியிருக்கிறது. சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, அவரோடு அதிகளவில் தொடர்பில் இருந்தவர்கள் பால்வளத்துறை அமைச்சரான சண்முகநாதன் மற்றும் திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் நாராயண பெருமாள் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்பில் அமைச்சர்

டெல்லியில் இருக்கும் புஷ்பாவுடன் வேறு நம்பர்களில் இருந்து இருவரும் தொடர்ந்து போனில் பேசியதையும் கண்டுபிடித்திருக்கிறது உளவுத்துறை. நேற்று சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் ஆஜரானது, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற பேட்டி போன்றவை முதல்வரை கோபத்தில் ஆழ்த்தியது.

பதவி மாற்றம்

இதன் பின்னரே சண்முகநாதன் கவனித்து வந்த பால்வளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி வசம் இருந்த, ஊரக தொழில்துறை, அமைச்சர் பெஞ்சமினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத பதவி

பள்ளிக்கல்வித் துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக புதிதாக அமைச்சரவையில் அடி எடுத்து வைத்துள்ளார் மாஃபா கே.பாண்டியராஜன். இவருக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தனை சீக்கிரம் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

புள்ளி விபர புலி

சட்டசபைக் கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் பேச்சையும் கவனித்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. தி.மு.க உறுப்பினர் பிடிஆர் தியாகராஜன் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசியபோது அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்களும் யோசிக்க, தியாகராஜன் கேள்விகளுக்கு புள்ளிவிவரங்களோடு பதில் சொன்னார் மாஃபா பாண்டியராஜன். இதை அதிகம் ரசித்தார் ஜெயலலிதா.

தெளிவான பேச்சு

கடந்தவாரம் ஜி.எஸ்.டி மசோதாவை எதற்காக தமிழக அரசு எதிர்க்கிறது என்பது பற்றி 10 நிமிடம் விரிவாக உரையாற்றினார். அதில் இந்த மசோதா கொண்டு வருவதன் மூலம் காங்கிரஸ்-பாஜக கட்சிகள் எப்படி ஆதாயம் அடையும் என்பதையும், இதனால் மாநில அரசுகளுக்கு எவ்வுளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் விரிவாக விளக்கினார் பாண்டியராஜன். இதுவும் மாஃபா மீதான இமேஜை ஜெயலலிதாவிடம் உயர்த்தியதோடு குட்புக்கில் இடம் பெற வைத்தது.

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த பெஞ்சமினின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் அந்த துறைக்கு புதிதாக செய்யப்பட்டு இருக்கிறார் மாஃபா பாண்டியராஜன். பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக
நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.

நாடார் சமூகம்

பாண்டியராஜன் விளையாட்டு மீது ஈடுபாடானவர். இளைய சமூகத்திடம் நல்ல நெருக்கம் உண்டு. குறிப்பாக, ஐ.டி. தொழில் சார்ந்த இளைஞர்களிடம் அவர்கள் துறை சார்ந்த விஷயங்களை நன்கு அறிந்தவர் போன்ற காரணங்களால் இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறினாலும், இவரும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

English summary
Pro Sasikala Pushpa minister Shanmuganathan has been sacked from the post and MAFOI Pandiarajan has got entered into the cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X