For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர்த்தக துறைமுகத்தை ஆதரிப்போர் பெட்டக துறைமுகத்தை எதிர்ப்பது ஏன்? நுகர்வோர் சங்கம் கேள்வி

வர்த்தக துறைமுகத்தை ஆதரிப்போர் பெட்டக துறைமுகத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்று நுகர்வோர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: இனயத்தில் வர்த்தக துறைமுகத்தை ஆதரிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பெட்டக துறைமுகத்தை எதிர்ப்பது ஏன் என நுகர்வோர் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர் ஸ்ரீராம் தமது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதி 68 கி.மீ. நீளமுடையது. 45 கடற்கரை கிராமங்கள் அதில் உள்ளன. ஆண்டுக்கு இம்மாவட்டத்தில் 72,000 டன் மீன்
உற்பத்தியாகின்றது. மாவட்டத்தில் சின்னமுட்டம் மற்றும் குளச்சலில் அரசு மீன்பிடித் துறைமுகமும், முட்டத்தில் தனியார் மீன்பிடித் துறைமுகமும் அமைக்கப்பட்டுள்ளன. தேங்காப்பட்டணம், ராஜாக்கமங்கலம் போன்ற இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாவட்ட
மீனவர்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியை வழங்க ஏதுவாகிறது.

Why should MLAs opposite Inayam port?

இயற்கை துறைமுகம்

குளச்சலில் பல நூறு ஆண்டுகளாகவே துறைமுகம் உள்ளது என்பதை அனைவருக்கும் தெரிந்த விசயமே. இயற்கை துறைமுகமான குளச்சல் மற்றும் இனய பகுதிகளில், கடல் சுமார் 20 மீட்டர் ஆழம் உள்ளது. ஒரு சிறந்த துறைமுகத்தை மேம்படுத்த பல்வேறு அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனத்தினரும் குமரி மகாசபாவினரும் குறிப்பாக மீனவ மக்களும், கழிந்த பல வருட காலமாக போராடி வந்துள்ளனர். இது சம்பந்தமாக குளச்சல் நகர்மன்றத்திலும் பல வருடங்களுக்கு முன்பே வர்த்தக துறைமுகம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தனிச்சிறப்பு

இந்தத் துறைமுகம் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் 45 மீட்டர் பாதை அருகே அமைய உள்ளது என்பது இதன் தனிச் சிறப்பாகும். கொச்சியிலுள்ள வல்லார்பாட துறைமுகத்தில் 14.5 மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது. அதனால் அங்கு பெரிய, பெரிய கப்பல்கள் வரவே முடியாது ஏன் சென்னையிலும், மும்பையிலும் கூட
மிகப் பெரிய கப்பல்கள் வர முடியாது. நாட்டில் எங்கும் இது போன்ற கடல் அமைப்பு இல்லை. இது இயற்கை நமது மாவட்டத்திற்கு கொடுத்த நன்கொடையாகும்.

லைட் ஹவுஸ்

இந்த சர்வ தேச கடற்பாதையின் மிக அருகே தான் முட்டம் லைட் ஹவுஸ் உள்ளது. இந்த லைட் ஹவுஸ் மின் விளக்கு வெளிச்சத்தை வைத்தே இலங்கை செல்லும் அனைத்து கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு திரும்பிச் செல்கின்றது.

இடைநிலை துறைமுகம்

பூகோள ரீதியாக இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு மத்தியில் மேற்கு பகுதி கடற்கரையில் இடைநிலை துறைமுகமாகவும் இது அமைகிறது. மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில்
கண்டிப்பாக இடைநிலை துறைமுகம் தேவை என்பதை இந்த திட்டம் பூர்த்தி செய்கிறது.

அந்நிய செலவாணி

தற்பொழுது இந்தியாவிலிருந்து செல்லும் அனைத்து கப்பல்களும், கண்டெய்னர்களில் செல்லும் பொருட்களை தமிழக, கேரள, கர்நாடக துறைமுகங்களிலிருந்து ஏற்றி சீனா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய
துறைமுகமான இலங்கையிலுள்ள ஹம்பன்தோட்டா பன்னாட்டு பெட்டக துறைமுகத்திற்கு கொண்டு சென்று இறக்கி, அங்கிருந்து மீண்டும் அடுத்த சிறிய கப்பல்களில் கண்டெய்னர்களை ஏற்றி பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நமது நாட்டு அந்நிய செலவாணி மட்டும் வருடத்திற்கு ரூ 1500 கோடி வரை
இலங்கைக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. நமது நாட்டிற்கு இதனால் வருமான இழப்பு ஏற்படுகிறது.

குளச்சலில் 3500 கோடியில் தான் வர்த்தக துறைமுகம் அமைக்க திட்டமிட்டிருந்தது. குளச்சல், கோடிமுனை, கொட்டில்பாடு போன்ற கடலோரங்களில் மக்கள் தொகை மிகவும் அதிகம். கோவில், சர்ச், மசூதிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை. மேலும் மண்டைக்காடு, பெரியவிளை, புதூர், குளச்சல் கடலோரங்களில்
தோரியம், இல்மனைட், கார்னைட், சிலிமினெட் போன்ற அரியவகை மணல்கள் மிகுதியான அளவு கிடைக்கின்றது. தற்பொழுது கிழக்கு கடற்கரை துறைமுகங்களான சென்னை, தூத்துக்குடியிலிருந்து சுமார் 270 நாட்டிங்கல் மைல் சுற்றுவதோடு கப்பல்களுக்கு 75,000 லிட்டர் ஆயில் கூடுதலாக 56 இலட்சம் டாலர் பணமும் வீணாகிறது. இலங்கை, கொழும்பு துறைமுகத்தில் வருடத்திற்கு 49 இலட்சம் கண்டெய்னர்கள் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதில் 12 இலட்சம் கண்டெய்னர் இந்தியாவின் மூலம் அனுப்பப்படுகின்றன. இதனால்
வருடத்திற்கு 1500 கோடி அந்நிய செலவாணி வீணாகிறது.

ஆய்வு

கழிந்த 1995, 1998, 2001, 2006, 2008 ஆண்டுகளிலேயே மலேசியா, ஸ்பெயின் போன்ற நாட்டை சார்ந்த கடல்சார் வல்லுநர்கள் குமரி மாவட்டத்திலுள்ள சின்னமுட்டம், முட்டம், மணவாளக்குறிச்சி, குளச்சல், இனயம் போன்ற கடற்கரைகளை ஆய்வு செய்து துறைமுகம் அமைவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளனர். அதன்படி அவர்கள் தேர்வு செய்த இடம் தான் இனயம் கடற்கரைப் பகுதி.

அரிய வகை மணல்

எல்லா இடங்களையும் விட மணவாளக்குறிச்சி கடற்கரை பகுதியிலிருந்து மண்டைக்காடு வரை இந்திய அணுசக்தி துறைக்கு சொந்தமான அரிய வகை மணல்களை எடுக்கும் மிகப் பெரிய இடமாக உள்ளமையால் குளச்சலில் துறைமுகம் அமைக்க மத்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் அனுமதி வழங்க இயலாது என்றும், அங்கு கிடைக்கும் அரிய மணல் வேறு எங்கும் கிடைப்பதில்லை. மேலும் குளச்சலில் 85 கோடி ரூபாய் செலவில் தற்பொழுது மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டிருப்பதாலும், இனயம் கடற்கரை பகுதி இடத்தை அவர்கள் ஆய்வு செய்து இனயத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக கடல்சார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு புறம்போக்கு இடம்

கடற்கரையோரம் ஒரு சில தனி நபர்கள் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் இடம் சொந்தமாக வைத்துள்ளனர். அவர்களும் நாட்டின் நலன் கருதி தங்கள் இடத்தை அரசிற்கு கொடுக்க தயாராக உள்ளனர். அரசு புறம்போக்கு இடமும் அந்த கடற்கரையில் மிகுதியாக உள்ளது. மிடாலம், குறும்பனை, மேல்மிடாலம், இனயம் போன்ற
கடற்கரைகளில் மிகக் குறைந்த அளவே மக்கள் வசிக்கின்றனர். மீன்பிடித் தொழில் நேரடியாக செய்பவர்களும் மிக மிக குறைவு கடற்கரை பகுதியில் 5 கி.மீ. தூரம் காலியாகவே உள்ளது. துறைமுகம் அமைக்கவும் இனயம் தகுதியான இடமாக கடல்சார் வல்லுநர்கள் தேர்வு செய்துள்ளனர்.

போட் ஜெட்டி

மீனவர்களின் போட்டுகளையும், கட்டுமரங்களையும் நிறுத்த இனயம் கடற்கரைப் பகுதியியே இடவசதி செய்து கொடுத்து அவர்களது வாழ்வாதாரம் மட்டுமின்றி, மீன்பிடி வலைகள், உபகரணங்கள் எதுவும் பாதிக்காமலும் மக்கள் பாதிக்காமல் மீன்பிடிக்கவும் துறைமுகம் அமைக்க ஏற்பாடுகள் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக
துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் வெளியேற்றம்

இந்த இனயம் துறைமுகத்தால் 6 கி.மீ. தூரமுள்ள கடற்கரையோர மக்களை வெளியேற்றுவார்கள் என்ற வதந்தியை ஒரு சிலர் பரப்புகின்றனர் அது தவறு வருடத்திற்கு 44000 டன் மீன் கிடைப்பது தடுக்கப்படும் என்பதும் தவறு. அவ்வாறு எந்த திட்டமும் அரசிடம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடிநீர்

மேலும் பல இலட்சம் காலன் குடிநீர் துறைமுகத்திற்கு தேவைப்படும். தற்பொழுது அந்த பகுதியில் குடிநீர் தட்டுபாடு உள்ளது என்று கூறுவது தவறு. கூடங்குளத்தில் கடலிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து அந்த பகுதி
மக்களுக்கு வழங்குவது போன்று இங்கும் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், பல்வேறு மாற்று வழிகளையும் அவர்கள் தேர்வு செய்துள்ளதாகவும் அறிகின்றோம்.

கடல் மாசு

மேலும் இங்கு வரும் கப்பல்களால் கழிவுநீர் வெளியேறும் அதனால் கடல் மாசுபடும் என்பதும் தவறு. அவ்வாறு கழிவுநீர் வெளியேற்றும் எந்த கப்பல்களையும் இந்த துறைமுகத்தில் எங்கும் அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏ.வி.எம். சானல்

இந்த துறைமுக திட்டத்தோடு ஏ.வி.எம். (அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மா கால்வாய்) கால்வாயும் மத்திய அரசு நிதி உதவியுடன் சுத்தப்படுத்தப்பட்டு, கடலில் கலக்கும் நல்ல நீர் போதிய அளவு இந்த கால்வாயில் கொண்டு வரும்பொழுது அந்த பகுதியிலுள்ள அனைத்து கிராமங்களிலும் நல்ல குடிநீர் கிணறுகள் மூலம்
கிடைக்கும் குடிநீர் தட்டுப்பாடு என்பது அந்த பகுதியில் இருக்கவே இருக்காது.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு என்பது மாவட்ட மக்களுக்கு தற்பொழுது மிகவும் அரிதாக உள்ளது. இந்நிலையில் இந்த துறைமுகத் திட்டம் மூலம் பெரிய வேலை வாய்ப்பு சந்தையை உருவாக்க முடியும். திட்டத்திற்காக 27,500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் இங்கு சுமார் 7000 தொழில் நுட்ப
வல்லுனர்களுக்கும், மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்ட மக்களுக்கும் மறைமுகமாக 15 இலட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு அளிப்பதுடன் ரூபாய் 3, கோடிக்கு மேல் வெளிநாட்டு மூலதனம் பல்வேறு வழிகளில் நமக்கு கிடைக்க வாயப்புள்ளது. அதன் மூலம் துறைமுக பாதை மற்றும்
தொழில்துறைகளில் முதலீடு கிடைக்கும். இதனால் நமது குமரி மாவட்டம் மிகப் பெரிய வளர்ச்சியையும், அந்த பகுதி பெண்கள் அனைவருக்கும் சிறிய, பெரிய வேலைகளும் மிக எளிதில் கிடைக்க நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும். நமது மாவட்ட இளைஞர்கள், வெளிநாடு, வெளிமாநில, மாவட்டங்களில் வேலை பார்த்தது
தவிர்க்கப்பட்டு, நாம் இந்த துறைமுகம் அமைவதன் மூலம் பிறருக்கு வேலை கொடுக்கும் நிலை இங்கு ஏற்படும்.

வீடுகள் பாதிக்கப்படும்

மீனவ மக்களின் வீடுகள் பாதிக்கப்படும் என்பது தவறு. முட்டம் மீன்பிடித்
துறைமுகத்திற்கு சென்று பார்த்தால் எவ்வளவு வீடுகள் மாற்றப்பட்டுள்ளன
என்பது தெரியவரும். அங்கு யாரும் பாதிக்கப்படவில்லை. வீடுகளும்
அகற்றப்படவில்லை இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்பவர்கள் முட்டத்தை நேரில்
சென்று பார்த்தாலே கடலில் எவ்வாறு மிகப் பெரிய துறைமுகம் அமைத்துள்ளார்கள்
என்பதை காணலாம். அதனால் முட்டம் மீனவ கிராம மக்களும் எந்த அளவிற்கு வாழ்வு
சிறப்பாக அமைந்துள்ளது என்பதை நேரில் காணலாம்.

கடலில் 500 ஏக்கர்

கடலில் 500 முதல் 1000 ஏக்கரில் நிலப்பகுதி ஏற்படுத்துவதாலும், கடல் அலை
தடுப்பான் அமைக்கப்படுவதாலும் அடுத்துள்ள கடற்கரை கிராமங்கள்
பாதிக்கப்படும் என்பது தவறு. வெளிநாடுகளில், குறிப்பாக மலேசியா,
சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் பிரேக் வாட்டர் என்ற கடல் அலை
தடுப்பான் நவீன முறையில் அமைத்திருப்பதால் அந்த பகுதி மக்களுக்கு
எந்தவிதமான பாதிப்புகள் இல்லாததை நேரில் சென்றவர்களிடம் மக்கள் கேட்டாலே
உண்மை நிலை தெரியவரும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும்
போக்குவரத்திற்குமாக பல்வேறு இடங்களில், புதிது, புதிதாக விமான நிலையம்,
ரயில்வே தண்டவாளம் மற்றும 4, 6 வழிப் பாதை ரோடுகள் அமைக்கப்பட்டு
வருகின்றன. இந்த வளர்ச்சிக்காக சில இடங்களில் இயற்கையாக உள்ள வயல்கள்,
குளங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகின்றது வேறு வழியில்லாமல் இந்த
திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சில
தியாகங்களை செய்து அந்த பகுதி மக்கள் அரசு கொடுக்கும் நஷ்ட ஈட்டையும்
பெற்றுக் கொண்டு நாட்டில் அந்த திட்டங்கள் நிறைவேற ஆதரிக்கின்றனர். அதனை
மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். நாட்டில் ரயில்வே தண்டவாளம், ரோடுகள்
அமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று நமது குமரி மாவட்டத்தில் இனயம்
துறைமுகத்திற்காக 27.500 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியது மிகப்
பெரிய பாராட்டுக்குரியது.

100 ஆண்டுகளில்...

இது போன்று எந்த ஒரு பெரிய திட்டமும் கழிந்த 100 ஆண்டுகளில் நமது குமரி
மாவட்டத்திற்கு கிடைத்ததில்லை. கிடைக்கப் போவதுமில்லை. இதனை
மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவிக்கும் பொழுது
தங்களுடைய ஒரு சில வீடுகள், இடங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதற்காக
எதிர்ப்பது என்பது தவறு இது மாவட்டத்தின் வளர்ச்சியையே தடுக்கும்
செயலாகும். இதனை குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்களே
ஏன் செய்கின்றனர் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இவர்களது கட்சி
தலைமையும், கட்சியும் துறைமுகம் அமைக்க ஆதரிக்கின்றனர். இவர்கள் இந்த
திட்டத்தை பற்றி சரி வரத் தெரியாமல், ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது இந்த
திட்டத்தை ஆதரிப்பதும், பின்னர் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது எதிர்ப்பது
என்பது வேடிக்கைக்குரிய செயலாக உள்ளது.

மேக்இன் இந்தியா

நமது இந்திய பிரதமரின் "இந்தியாவில் தயாரிப்போம் " திட்டத்தின் கீழ், நமது
தென் மாவட்ட வளர்ச்சிக்காக அமையவுள்ள, இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு
மாவட்ட மக்கள் அனைவரும் துணை நின்று இந்த திட்டம் நிறைவேற ஒத்துழைப்போம்.
மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால நீண்ட நாள் கனவு நிறைவேற அனைவரும்
ஒத்துழைப்போம். தற்பொழுது அந்த பகுதியில் 4 கி.மீ. தூரம் மட்டுமே அரசு முழு
அளவில் ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. அந்த இடங்களையும் ஆய்வு செய்த பின்பு
தான் முழு அளவிலான திட்ட அறிக்கையை அரசு தயாரிக்க முடியும்.

வீடுகள்

திட்ட அறிக்கைக்கு பின்பு தான் எந்த, எந்த இடங்கள், வீடுகள், குளங்கள்,
மரங்கள் பாதிக்கப்படும் என்ற நிலையை அமைச்சரும், அதிகாரிகளும் மக்களிடம்
தெரிவிக்க முடியும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானால் கூட
எப்பொழுதும் மாற்றி கொள்ள முடியும். ஆனால் அந்த பகுதி மக்கள் அனைவரிடமும்
உங்கள் இடம் பாதிக்கும் உங்களது குடியிருப்புகளை காலி செய்து விடுவார்கள்
என பொய் பிரச்சாரம் சிலர் செய்கின்றனர் அது தவறு. ஆதலால் முழு அளவில்
இடங்களை சர்வே செய்ய அனைவரும் ஒத்துழைப்போம். அதன் மூலம் நாட்டினுடைய
வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அந்த பகுதி மக்கள் மட்டுமன்றி அனைத்து
மக்களுக்கும் கிடைக்க அனைவரும் துணை நிற்போம்.

பெட்டக துறைமுகம்

குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டும் என்று அனைத்து கட்சியினரும்
பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அனைவரும் பல வருட காலமாக கூறி
வந்துள்ளனர். அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் வந்து இடம் பார்வையிட்டு,
துறைமுகம் அமைய மத்திய அரசை பல வருட காலமாக வேண்டியுள்ளார்கள் பல மத்திய,
மாநில அமைச்சர்களும் இடம் பார்வையிட்டுள்ளனர். என்பது அனைவருக்கும்
தெரியும். ஆனால் வர்த்தக துறைமுகத்தை ஆதரிப்போம். பன்னாட்டு பெட்டகத்
துறைமுகத்தை எதிர்ப்போம் என்பது தவறு. வர்த்தக துறைமுகம் என்றால் மிகச்
சிறிய அளவில் உள்ள ஒரு துறைமுகம் அந்த துறைமுகத்தில் கப்பல்கள் மூலம்
பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறும். வர்த்தகம் மட்டுமே நடைபெறும்.
ஆனால் பெட்டக துறைமுகம் என்பது அந்த துறைமுகத்திற்கு உலகத்திலுள்ள அனைத்து
சரக்கு கப்பல்களும் மற்றும் பெரிய, பெரிய சுற்றுலா கப்பல்களும் வந்து
செல்லும் துறைமுகம் அதன் மூலம் மேற்படி இனயம் கடற்கரை பகுதியும் அதன் சுற்றுபுற இடங்களும் ஊர்களும் மிகப் பெரிய நகரமாக மாறும் நிலை ஏற்படும். சுற்றுசூழலும் காக்கப்படும் அதன் மூலம் நாடே வளர்ச்சி பெறும். உலகத்தில் தற்பொழுது எங்குமே வர்த்தக துறைமுகம் அமைப்பதில்லை.

இதனால் உலகத்திலுள்ள மிகப் பெரிய பன்னாட்டு சரக்கு பெட்டக முனையமாக மாற்ற இந்திய அரசு திட்டமிட்டு மலேசியா, சிங்கப்பூர், துபாய், கொழும்பு துறைமுகங்களை விட மிகப்பெரிய துறைமுகமாக இதனை மாற்ற அரசு
திட்டமிட்டுள்ளது. இந்த துறைமுகம் வருவதற்காக நமது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் நமது மாவட்ட மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அனைவரும் உறுதுணையாக இருந்து நமது நாட்டை முன்னேற்றுவோம், நாமும் வாழ்வோம் வெற்றியடைவோம் என்று எஸ். ஆர் ஸ்ரீராம் கூறியுள்ளார்.

English summary
Consumer forum member and activist condemned for opposing Inayam port project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X