For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலிக்குமா மு.க. ஸ்டாலினின் புதிய யுக்தி?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், அநேகமாக திமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இம்மாதம் 20 ம் தேதி ‘நமக்கு நாமே' என்ற கோஷத்துடன், விடியல் மீட்பு பயணம் என்ற ஒரு பாதயாத்திரையைத் துவக்கி விட்டார்.

கன்னியாகுமரியில் துவங்கிய இந்தப் பயணத்தின் முதற் கட்டம் அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தியன்று முடிகிறது. அதன் பிறகு அடுத்த கட்ட பயணத்தை துவக்குகிறார் ஸ்டாலின்.

Will MK Stalin's walk make any effect among voters?

தமிழகத்தில் மொத்துமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்தே போய் மக்கள் சென்றடைவது என்பதுதான் அவரது நோக்கம். நடைப் பயணம் போகும்போதே அவ்வப்போது ஆட்டோக்களிலும், ஸ்கூட்டர்களிலும், ஏன் சைக்கிளிலும் கூட ஸ்டாலின் பயணிக்கிறார். ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லுவது ஒருபுறமென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப் படும் என்பதை மக்களிடம் விளக்குவதும், மக்களின் உண்மையான பிரச்சனைகளை நேரடி அனுபவத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுவதும் பயண நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக மக்கள் தன் முன் வைக்கும் பிரதான பிரச்சனைகளை செவிமடுக்கும் ஸ்டாலின் அவற்றின் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்வார் என்றும், தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கத்தில் ஸ்டாலினின் நேரடி அனுபவங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான திமுக முன்னணியினர்.

Will MK Stalin's walk make any effect among voters?

1957 லிருந்து இதுவரையில் எத்தனையோ தேர்தல்களை திமுக பார்த்து விட்டது. ஆனால் இந்த முறை சற்றே வித்தியாசமான தேர்தலை திமுக சந்தித்துக் கொண்டிருக்கிறது. காரணம், அதன் பட்டத்து இளவரசர், அநேகமாக முதலமைச்சர் வேட்பாளராகக் கூடியவர், திமுக அடையாளங்கள் ஏதுமின்றி, அல்லது மிக, மிக குறைந்த திமுக அடையாளங்களுடன் இன்று மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கலர், கலரான ஷர்ட்டுகள், டீ ஷர்ட்டுகள், பேண்ட்டுகள் மற்றும் ஷூ அணிந்து இன்று பலதரப்பட்ட மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். வழக்கமான ஸ்டாலின் திமுக வின் பிரதான ஆடையான கருப்பு, சிவப்பு கரை போட்ட வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிந்திருப்பார். ஆனால் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் அவர் கரை வேட்டி கட்டவில்லை. மாறாக நவ நாகரீக ஆடைகளிலேயே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இது ஏதோ தற்செயலான நிகழ்வல்ல. நன்கு திட்டமிடப்பட்ட, செயற்திட்டத்துடனான, ஆங்கிலத்தில் சொல்லுவதானால், 'இமேஜ் மேக் ஓவர்' நடவடிக்கையாக பார்க்கப் படுகிறது. ‘இது முக்கியமான நிகழ்வுதான். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஸ்டாலின் விரும்புகிறார். மக்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து கொள்ள விரும்புகிறார். அதன் தொடர்ச்சிதான் இந்த நடவடிக்கை' என்கிறார் ஸ்டாலினுக்கு நெருக்கமான திமுக தலைவர் ஒருவர்.

இதுவரையில் இந்த பயணத்தில் அநேகமாக திமுக கொடிகள் அரிதினும் அரிதாகத் தான் காணப்படுகின்றன. கழக கண்மணிகள் பார்ப்பவர்களின் கண்களில் படுவதும் குறைவாகவே காணப் படுகிறது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பட்டும் படாமல் ஒரு ஓரமாக நடந்து வருகின்றனர். நடந்து வரும்போதே திடீரென்று ஒரு டீ கடையில் போய் உட்கார்ந்து கொள்ளும் ஸ்டாலின் அங்கிருப்பவர்களுடன் அளவளாவுகிறார். பிறகு மீண்டும் நடக்கிறார். சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு திடீர் விசிட் அடிக்கும் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தாலம் சீனப் பட்டாசுகள் நிச்சயம் தடை செய்யப்படும் என்று உறுதி அளிக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா உற்பத்தியாளர்களுடன் அமர்ந்து அவர்களது பிரச்சனைகளை செவி மடுக்கும் ஸ்டாலின் திமுக ஆட்சி வந்தால் அவர்களது குறைகள் கண்டிப்பாக களையப்படும் என்கிறார். பெண்கள் அதிகம் பணி புரியும் தொழிற்சாலைகளில் அவர்களுடம் அமர்ந்து குறை கேட்கிறார். மதுவிலக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து என்று உறுதியளிக்கிறார். மாணவர்களுடன் ஹை டெக் பாணியில், பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் ஆலோசனகளை நடத்துகிறார். விவசாயிகளுடன் வயல் வெளிகளில் நடந்தே போய் அவர்களது குறைகளை கேட்கிறார்.

Will MK Stalin's walk make any effect among voters?

இவை எல்லாமே ஸ்டாலின் தனது இமேஜை உயர்த்திக் கொள்ளுவதற்காகவும், மாற்றிக் கொள்ளுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் கடுமையான முயற்சிகள்தான் என்பது வெள்ளிடை மலை. திமுக மீது இன்னமும் அகலாமல் படர்ந்திருக்கும் 2ஜி ஊழல் உள்ளிட்ட கறைகளையும், திமுக மீது கிட்டத்தட்ட நிரந்தரமாகவே படிந்து விட்ட குடும்ப கட்சி என்ற பெயரையும் மாற்றவே ஸ்டாலின் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார் என்பது தெளிவாகவே புரிகிறது. 1957 ல் முதன் முறையாக அண்ணா காலத்திலிருந்து திமுக சந்தித்த எந்தத் தேர்தலிலும் அதனது தலைவர்கள் எவரும் திமுக கொடிகள் இல்லாமலும், கரை வேட்டிக் கட்டிக் கொள்ளாமலும் பிரச்சாரங்களுக்கு போனதில்லை. ஆனால் முதன் முறையாக அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

2014 மக்களவைத் தேர்தலில் திமுக பெற்றது 23 சதவிகித வாக்குகள். வரும் சட்டமன்றத் தேர்தலில் இதில் இன்னும் சில சதவீதம் கூட வாய்ப்பிருக்கிறது என்பது தேர்தல் பார்வையாளர்களின் கருத்து. ஆனால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அது மட்டுமே போதாது. பாரம்பரியமாக திமுக வுக்கு விழும் வாக்குகளைத் தாண்டி குறைந்தது 5 லிருந்து 7 சதவிகித வாக்குகள் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது, ஆட்சிக் கட்டிலின் அருகில் வர. இது மட்டும் போதாது, கண்டிப்பாக கூட்டணிகளும் தேவை. அஇஅதிமுக வோ, திமுக வோ யார் ஆட்சிக்கு வரவும் கூட்டணிகள்தான் அடிப்படையாக உள்ளன.

Will MK Stalin's walk make any effect among voters?

இன்றுள்ள சூழலில் திமுக வுடன் யார் கூட்டணி வைப்பார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தச் சூழலில்தான் திமுக வின் பாரம்பரிய வாக்கு வங்கிக்கு வெளியில் செல்வாக்கை விஸ்தரிக்க ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தை மேற்கொள்ளுகிறார்.

இது எந்தளவுக்கு திமுக வுக்கோ, ஸ்டாலினுக்கோ பலன் கொடுக்கப் போகிறதென்று இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. இது கிட்டத்தட்ட நரேந்திர மோடி பயன்படுத்திய வித்தை. ஆனால் மோடி பத்தாண்டு காலம் தான் குஜராத்தில் நிகழ்த்திய அல்லது நிகழ்த்தியதாக பறைசாற்றிக் கொண்ட சாதனைகளின் அடிப்படையில் வாக்குகளைக் கேட்டார். ஆனால் இன்று ஸ்டாலின் நல்லாட்சி என்ற வாக்குறுதி அஸ்திரத்தைக் காட்டி களத்தில் நிற்கிறார்.

மற்றோர் முக்கியமான விஷயம், 2016 தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதாவது 18 முதல் 29 வயது வரையிலான வாக்காளர்கள் கிட்டத்தட்ட 2 கோடி பேர் என்கிறது புள்ளி விவரம். இதில் முதன் முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள் 60 லட்சம் பேர். இவர்களைக் குறி வைத்துதான் ஸ்டாலின் நடந்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இந்தப் பிரிவினரிடம் திமுக எனும் அடையாளம் செல்லுபடியாவது கடினமானது என்பதனால்தான் தன்னையே ஒரு பிராண்டாக ஸ்டாலின் தற்போது ப்ரமோட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

வழக்கமாக திமுக தலைவர் தெருவில் பிரச்சாரத்துக்கு வருகிறாரென்றால் நூற்றுக் கணக்கில் காணப்படும் திமுக பதாகைகளும், ஆளுயர கொடிகளும் தற்போது ஸ்டாலினின் நடைப் பயணத்தில் கிட்டத் தட்ட முற்றிலுமாக காணாமல் போயிருக்கின்றன. அடுத்த தலைமுறையின் தேவைகளுடன் உறவாட திமுக இரண்டாண்டுகளாகவே முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினின் முக நூல் பக்கங்கள் இதற்குச் சாட்சி. ஆனால் வட இந்திய தலைவர்கள் போல ட்விட்டரில் சுறு சுறு ப்பாக ஸ்டாலின் இல்லை. ஸ்டாலினின் முக நூல் பக்கத்தில் போடப்படும் செய்திகள் அவரது கருத்துக்கள்தானா என்று ஜெயலலிதா சமீபத்தில் கேட்டார். இதற்கு தனது முக நூலை தொடர்ந்து பார்த்து வருவதற்காக ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Will MK Stalin's walk make any effect among voters?

ஒரு பாரம்பரிய மிக்க பிராந்திய கட்சி மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதன் இளவரசர் தன்னை நவீனமானவராக அடுத்த தலைமுறையினருடன், அவர்களது பாஷையில் பேசுபவராக காட்டிக் கொள்ளுகிறார். ஆனால் இதெல்லாம் போதுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

மற்றோர் முக்கியமான விஷயம், இந்தப் பயணத்தில் ஒரு இடத்திலும் தன்னை ஜெயலலிதாவுக்கு இணையானவராக, தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் முன்னிறுத்திக் கொள்ளவில்லை. திமுக வெற்றிப் பெற்று கருணாநிதி தலைமையில்தான் ஆட்சியமைக்கும் என்றுதான் பேசுகிறார். தன்னை ஜெயலலிதாவுடனான நேரடி போட்டியாளராக ஸ்டாலின் இதுவரையில் சித்தரித்துக் கொள்ளாதததும் திட்டமிட்ட வியூகம்தான்.

‘ஜெயலலிதாவுடன் நேரடியாக தன்னை போட்டியாளாராக காட்டிக் கொண்டால் வரும் விளைவுகளை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் கலைஞரை அவர் அவ்வப்போது ஜெயலலிதாவுக்கு மாற்றாக முன்னிறுத்துகிறார். தனது உயரம் தெரிந்தேதான் இதுவரையில் அவர் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்' என்கிறார் ஸ்டாலினுக்கு நெருக்கமான தலைவர் ஒருவர்.

இதுவரையில் ஸ்டாலினின் கூட்டங்களில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. மதுரை நகராட்சி ஸ்டாலினை மதுரைக்குள் வரவிடக் கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றியது. இருந்த போதும் அப்படி ஏதும் நடக்கவில்லை. மதுரையிலும் பிரச்சாரப் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். மதுரை மாநகராட்சி தீர்மானம் தனது பயணத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறார் ஸ்டாலின்.

ஆனால் தேர்தல் காலம் நெருங்க, நெருங்க நிலைமைகள் மாறலாம். ஆளும் கட்சி இப்போது போல எப்போதும், எல்லா இடத்திலும் கை கட்டி ஸ்டாலினின் கூட்டங்களை வேடிக்கைப் பார்க்குமா என்று போகப் போகத்தான் தெரிய வரும்.

சற்றே மாறான வியூகத்தை ஸ்டாலின் கையாளத் துவங்கியிருக்கிறார். முயற்சி வெல்லுமா?!

English summary
DMK treasurer MK Stalin has recently started a walk around Tamil Nadu (Padayathirai) in the name of Namakku Naame. Will this walk make any effect among the voters? Here is an analysis by our columnist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X