• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூட்டணி... ஜோசியம் பார்த்துவிட்டு அமித் ஷாவைப் பார்க்க போகும் விஜயகாந்த்

By Mayura Akilan
|

சென்னை: சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் யாருடன் கூட்டணி சேருவார் என்பதுதான் இன்றைக்கு டீக்கடை பெஞ்சுகளில் இருந்து டிவி விவாத நிகழ்ச்சிகள் வரை ஹாட் டாப்பிக். 2011ல் அதிமுக கூட சேர்ந்து எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த் இந்த முறை யாருடன் சேருவார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. விஜயகாந்த் எடுக்கும் முடிவை பொறுத்தே அரசியல் வானிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறது தமிழகம். சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல், தி.மு.க.வும் விஜயகாந்த்தை இழுக்க முயற்சித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்களும் விஜயகாந்த் எங்களது கூட்டணியில்தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

மக்கள் நலக்கூட்டணியா? திமுகவா? பாஜகாவா? யாருடன்தான் போவார் விஜயகாந்த் என்று நாளுக்கு நாள் விஜயகாந்த் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. திமுக கூட பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்று ஒரு செய்தி வர, இல்லை இல்லை பாஜக உடன்தான் விஜயகாந்த் சேருவார் அடுத்த வாரம் டெல்லி போகிறார் என்று அடுத்த நாளே மற்றொரு செய்தி வருகிறது. துணை முதல்வர் பதவி கேட்கிறார்... 50 சதவிகித சீட் கேட்கிறார் என்று விஜயகாந்த் பற்றி வராத செய்திகளே இல்லை ஆனாலும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாகவே காய் நகர்த்தி வருகிறார் விஜயகாந்த்.

ஜோதிடர்கள் அறிவுரை

ஜோதிடர்கள் அறிவுரை

எந்த முடிவும் எடுக்கும் முன்பாக ஆஸ்தான ஜோதிடர்களை சந்திப்பது விஜயகாந்த் வழக்கம். சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு ஜோதிடர்களை அழைத்து தீவிர ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் விஜயகாந்த். தன்னுடைய ஜாதகம் மட்டுமல்லாது தன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என அனைவரின் ஜாதகங்களையும் கொடுத்து ஆராயச்சொன்னாராம்.

அதிகாரத்தில் பங்கு

அதிகாரத்தில் பங்கு

விஜயகாந்த் ராசிக்கு இந்த ஆண்டு பிறந்த உடனே நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டதாம். ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் வாய்ப்பு கூட கிடைக்கலாம் என்று கூறியுள்ள ஜோதிடர்கள் கூட் டணி விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்களாம். பொருத்தமான கட்சியோடு கூட்டணி சேர வேண்டும் என்றும் கூறியுள்ளார்களாம்.

திமுகவின் முயற்சி

திமுகவின் முயற்சி

அ.தி.மு.கவை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் முனைப்பில் தி.மு.க உள்ளது. பலமான கூட்டணி வேண்டும் என்றால் தே.மு.தி.கவை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் தி.மு.க தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ரகசிய பேச்சு இரு கட்சிகள் இடையே பல நாட்களாக தொடர்கிறது.

தேமுதிகவினர் விருப்பம்

தேமுதிகவினர் விருப்பம்

தனது திருமணநாளில் சென்னையில் தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களை சந்தித்த விஜயகாந்த் கூட்டணி குறித்து கருத்து கேட்டபோது பலரும் 'தி.மு.கவுடன் சேர்ந்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் உண்டு' என கூறினார்களாம். ஆனால் விஜயகாந்த் அதை ஏற்க மறுத்து விட்டாராம். மறுநாளே விஜயகாந்த் மனைவி பிரேமலதா முக்கிய எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களை அழைத்து பேசியுள்ளார். அப்போதும் தி.மு.க. கூட்டணி குறித்து வலியுறுத்தினார்களாம்.

அழிக்க நினைத்த திமுக

அழிக்க நினைத்த திமுக

தி.மு.க., தான் கல்யாண மண்டபத்தை இடித்தது; வடிவேலுவை வைத்து எனக்கு எதிராக பிரசாரம் செய்தது: தே.மு.தி.க., வளரக் கூடாது என்பதில் அ.தி.மு.க.,வைக் காட்டிலும் அதிக ஆர்வம் காட்டியது தி.மு.க தான். அதனால், அவர்களோடு கூட்டணி சேர விருப்பம் இல்லை என்கிற ரீதியில் கட்சியினரிடம் பேசினாராம் விஜயகாந்த்.

திருப்புமுனை மாநாடு

திருப்புமுனை மாநாடு

காஞ்சிபுரம் வேடலில் திருப்பு முனை அறிவித்துள்ள விஜயகாந்த், துணிந்திடு தவறுகளை களைத்திடு புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் ஒன்றிணைவோம் வென்றிடுவோம் என்று லோகோவில் சேர்த்துள்ள வரிகள் வில்லங்கமாகவே இருக்கிறதாம். இது திமுக, அதிமுக உடன் கூட்டணியில் இணைய விரும்பவில்லை என்பதையே இப்படி சூசகமாக கூறியுள்ளாராம் விஜயகாந்த்.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

திமுக உடன் கூட்டணிக்கு உடன்பாடில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே தேமுதிகவின் செயல்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது அதே போலவே கடந்த வாரம் டெல்லி சென்ற சுதீஷ் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி விட்டு வந்திருக்கிறாராம். இது ஒருபுறம் இருக்க விஜயகாந்த் வரும் 5ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி

டெல்லி

செல்லும் அவர் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை வரும் மோடியால் தமிழக அரசியலில் சூறாவளி வரும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். அமித்ஷாவை சந்தித்த பிறகாவது கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசுவாரா விஜயகாந்த் ?

 
 
 
English summary
DMDK leader vijayakanth is all set to meet bjp president amithshah in delhi on feb 5. will he tell the alliance after the meet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X