For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடல் எடையைக் குறைக்க ஆபரேஷன்.. 10 மாதம் கோமாவில் வீழ்ந்து உயிரிழந்த சென்னை பெண்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அழகுக்காக உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று, அதன் காரணமாக கடந்த 10 மாதங்களாக கோமாவில் இருந்த சென்னை பெண் உயிரிழந்தார். அவரது சாவுக்கு தவறான சிகிச்சையே காரணம் என்று உறவினர்கள் புகார் கூறி போராட்டம் நடத்தினர்.

சென்னை வள்ளுவர்கோட்டம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை கக்கன் காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர் மனைவி மனைவி அமுதா (35). தம்பதிகளுக்கு, விக்னேஷ், விஜய் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அமுதா சற்று குண்டாக இருந்ததால், தாழ்வுமனப்பான்மையால் அவதிப்பட்டார். எனவே தனது உடல் எடையை குறைக்க விரும்பினார். இதையடுத்து சென்னையிலுள்ள, பாரதிராஜா என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆலோசனையை கேட்டார்.

எளிய அறுவை சிகிச்சை மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெறலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை தந்தனர். இதில் திருப்தி அடைந்த அமுதா அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 11ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமுதாவுக்கு திடீரென்று வயிற்றில் அதிக வலி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார்.

இம்முறை ஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சையால் வயிற்றில் உட்பகுதியில் சில இடங்களில் கிழிவு ஏற்பட்டிருப்பதாகவும், மீண்டும் அறுவை ஒரு சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அமுதாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிகிறது.

இதன் பின்னரும் அமுதாவுக்கு வயிற்று வலி நீங்கியபாடில்லை. தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அமுதா மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வயிற்று வலி அதிகரிக்கத்தான் செய்துள்ளது.

இதனால் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அமுதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அமுதாவின் நுரையீரல் மற்றும் குடல் பகுதி பாதிக்கப்பட்டு இருந்தது சிகிச்சையின்போது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அமுதா வீடு திரும்பினார்.

தொடர் அறுவை சிகிச்சையால் உடல் பாதிக்கப்பட்டு அமுதா கோமா நிலைக்கு சென்றார். இதனால் தனது வீட்டில் படுத்த படுக்கையாக அவர் கிடந்தார். உடல்மெலிந்து உருக்குலைந்த நிலையில், அமுதா கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அமுதாவின் இந்த நிலைமைக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்று அவரது கணவர் கவுரிசங்கர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குறிப்பாக டாக்டர். மாறன் மீது அவர் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 13ம் தேதி அமுதாவின் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அமுதா உயிரிழந்தார்.

அமுதாவின் உடல் நேற்று பிற்பகலில் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பிணவறை முன் அமுதாவின் கணவர் கவுரிசங்கர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பிணவறை முன் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் (தென்சென்னை) ஆதரவு அளித்தனர்.

போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மறியலில் ஈடுபட விடாமல் தடுத்து நிறுத்தனர். இதனால் தொடர்ந்து பிணவறை முன் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து அமுதாவின் கணவர் கவுரிசங்கர் நிருபர்களிடம் கூறுகையில் "அமுதாவின் சாவுக்கு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணமாகும். அவரது வயிற்றில் பஞ்சை வைத்து தைத்து, இன்பெக்ஷன் ஏற்பட மருத்துவர்கள் காரணமாக இருந்துள்ளனர். அதற்கான சாட்சியங்கள் என்னிடம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டும் போலீசார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது முதல்வர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்போகிறேன் என்று தெரிவவித்தார்.

English summary
:A 35-year-old woman who was at the centre of a medical negligence controversy that rocked bariatric surgeons in the city, passed away at a private nursing home in Kodambakkam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X