For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை சில்க்ஸ்... இழப்பு என்பதும் தேடலுக்கான ஒரு ஆரம்பம்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து குறித்து பிரபல எழுத்தாளர் லதா சரவணன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த இழப்பிலிருந்து சென்னை சில்க்ஸ் ஊழியர்களும், நிறுவனமும் மீண்டும் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் லதா சரவணன் இதுதொடர்பாக தெரிவித்துள்ள கருத்து:

Writer Latha Saravanan comments on Chennai silks fire accident

சென்னை சில்க்ஸ் உரிமையாளர் மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் எழுப்பி வியாபாரம் செய்வேன் என்று சொல்லும் மனதிடம் உண்மையில் வியக்க வைக்கிறது.

தி சென்னை சில்க்ஸ் தி.நகரின் வியாபார வளாகத்தில் ஒரு முக்கிய இடம். பலதரப்பட்ட விமர்சனங்களைச் சுமந்து நிற்கும் இந்த கட்டிடத்தின் இன்றைய நிலை தீ நாக்கிற்கு தன்னை இரையாக்கிக்கொண்டது தான். எங்கே புகை வருகிறது என்பதை அறிந்து கொள்ளவே நீண்ட நேரம் எடுத்தது. யாருடைய கவனக்குறைவோ விபத்து நிகழ்ந்திருக்கிறது. சில நாக்குகள் உச்சு கொட்டுகிறது. சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சிலர் கேலி பேசுகிறார்கள். உண்மையில் தவறு யார் மேல்தான் உள்ளது?.

நான்கு மாடிக் கட்டிடத்திற்கு அனுமதி கேட்டு 7 மாடி கட்டியவர்கள் மீதா? அதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதா? லஞ்சம் பெற்றுக்கொண்டு எதையும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் மீதா? ஏரிகளையும் நீர்வளங்களையும் வளைத்து பிளாட் போட்டு விற்றார்கள், விளைவு இயற்கை தன் கோபத்தை புயலாய் காட்டி வீசியது. நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் உணவு கிடைக்காமல் சிறுக சிறுக சேமித்து வைத்தப் பொருட்கள் எல்லாம் கண்ணுக்கு எதிரே தண்ணீரில் மூழ்கியதை நாம் கண்டோம். அதன்பிறகு ஏரிகளைத் தூர் வாராததால் இந்த பிரச்சனை என்றார்கள்.

நம்மை விட மழை குறைவாக இருக்கும் மாவட்டங்களிடம் தண்ணீருக்கு கையேந்தும் நிலை. எங்கே சென்றாலும் தமிழன் அடிபடும் அவலம். அதையெல்லாம் எண்ணியாவது வந்த மழை நீரை சேமித்து வைத்திருக்கலாம். அதையும் செய்யத் தவறினோம். 60 அடி தோண்டி மரத்தை நட்டு இருந்தால் அது தன் கடமையைச் செய்திருக்கும். ஆனால் இன்று 600அடி தோண்டினாலும் தண்ணீர் வரவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய தவறுக்கு அடுத்தவரைக் காரணம் காட்டியே நாம் அந்த நேரங்களைக் கடந்து விடுகிறோம். தன் குற்றங்களுக்கு சிறந்த வக்கீலாகவும் அடுத்தவரின் குற்றங்களுக்கு நீதிபதியாகவும் நம்மை நாமே நியமித்துக் கொள்கிறோம்.

சாலையில் செல்லும் போது காலில் ஒருவருக்கு கல் குத்திவிட்டால் கல் குத்திவிட்டது என்றுதானே சொல்கிறோம். ஆனால் சாலை ஓரத்தில் போடப்பட்டு இருந்த கல்லில் நாம்தான் போய் அடிபட்டுக்கொண்டோம். பழி மட்டும் கல்லின் மேல்தான், வாகனங்களின் புகையால் மாசு கெட்டுப்போகிறது என்று அறிக்கையினைப் படித்தாலும் கூட 50% கழிவில் வாகனம் வாங்க க்யூவில் நிற்கிறோமே? நம்மீது சுமத்தப்படும் எதையும் ஒரு முனகலோடு நகர்ந்து கொள்ள நம்மை நாமே பழக்கப்படுத்திக்கொள்ள முடிவெடுத்து விட்டோம். இது ஒன்றும் இயற்கையின் சீற்றத்தினால் விளைந்தது இல்லை,

எத்தனை மாடிகள் வேண்டுமானாலும் கட்டிக்கொள்வேன் என்று வியாபாரத்தை மட்டும் நினைவிற் கொண்டிருக்கும் ஒரு வியாபார உலகத்தின் அலட்சியம், ஒவ்வொரு தளத்திற்கும் புகையை வெளியிடும் கருவிகளை அமைக்காமல் விட்ட இலட்சியம், இலட்ச இலட்சமாக விளம்பரம் எடுத்து அதை சுவரெங்கும் ஒட்டிவைத்திருக்கும் இடத்தில் அவசர காலத்தில் எப்படி எந்த வழியாக வெளியே செல்ல வேண்டும் என்ற வரைபடங்களை வைக்காததும் ஒரு அலட்சியம், மின்சார கசிவுதான் இந்த விபத்திற்கு காரணம் எனில் மின் ஆய்வு பணிகளை சரிவர செய்யாத வயர்மேனின் அலட்சியம். இன்னும் 86 கட்டிடங்கள் விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் மாநகராட்சியின் அலட்சியம்

இத்தனை அலட்சியத்திற்கும் கொடுத்திருக்கும் விலைதான் இந்த விபத்து. இழப்பு பெரியதுதான் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் பெரியதுதான். இனி நடக்கப்போவது என்ன? அங்கு வேலை பார்த்த ஊழியர்களின் நிலை என்ன? இன்சூரன்ஸ் மூலமாக பணத்தை கிளைம் பண்ணிக்கொண்டாலும், இழப்பு இழப்பு தானே !

எதற்கு அழுவது எதற்கு சிரிப்பது என்பதெல்லாம் போய் எல்லா உணர்ச்சிகளும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரித்தாகிப் போய் இருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் உலாவிவரும் மீம்ஸ்களை கடக்கும் போது, எத்தனையோ அலட்சியங்களையெல்லாம் சட்டையை பிடித்து கேள்வி கேட்காமல் அந்த விளம்பரங்களில் நடித்திருக்கும் நடிகையை கேலி செய்து மீம்ஸ்போடுவது எந்த விதத்தில் நியாயம்?! யாரையும் வற்புறுத்தி அவர்கள் வியாபாரம் செய்வதில்லை, நாம் தான் நமது தேவைகளுக்கு அவர்களிடம் சென்று வாங்கி வருகிறோம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்க நாம் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிந்திக்கவேண்டிய நேரம் இது. தவிர்த்து யாரும் யாரையும் கிண்டல் செய்வதையும் கேலி செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள், இதனால் என்ன பலன் நமக்கு கிடைக்கிறது. அடுத்தவர்களின் மனவேதனைகளைக் கூட உணராமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

சம்பந்தப்பட்டவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நாமும் உணரவேண்டும், ஒரு நிறுவனம் என்பது தனி நபர் சார்ந்தது இல்லை, அதை நிர்மாணிக்கும் திறனில் எத்தனை பேரின் உழைப்பும், வியர்வையும் கலந்திருக்கிறது. வெறும் கட்டிடம் மட்டுமின்றி அத்தனை பேரின் உழைப்பும் மன நிம்மதியும், எதிர்காலம் பற்றிய பயமும் எரிந்துகொண்டு இருக்கிறது. மனிதர்கள் என்ற முறையில் சக மனிதனின் வருத்தத்தினை நாம் பங்குபோட்டு கொள்ள வேண்டும். சென்னை சில்க்ஸ் உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரிந்த அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், இழப்பு என்பதும் தேடலுக்கான ஒரு ஆரம்பம்தான் என்றும், அதை ஈடு செய்யும் அளவிற்கு மனவலிமையும், தைரியத்தையும் கடவுள் உங்களுக்கு நிச்சயம் அருள்வார். அதற்கு எங்களின் பிராத்தனையும் துணைநிற்கும்.

- லதா சரவணன்

English summary
Noted writer Latha Saravanan has expressed her opinion on the fire accident which gutted the Chennai Silks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X