For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறந்த நதிகளின் ஆவிகள் வீடு திரும்பிகொண்டிருக்கின்றன....- மனுஷ்ய புத்திரன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை புரட்டிப் போட்ட பெருமழை குறித்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை:

இந்த முறை
தண்ணீரின் தெய்வம்
தண்ணீருக்கான எங்கள் பிராத்தனைகளால்
மனம் உடைந்துவிட்டது
ஒரு ராட்சத மழைத்துளி
நகரத்தின் மையத்தில்
விழுந்து சிதறியது

எனது நகரம்
இறந்த நதிகளின்மீது
கட்டப்பட்டிருக்கிறது

ஆயிரம் ஆயிரம்
வாகனங்களும் மனிதர்களும்
தினமும் கடந்து செல்லும்
அந்தப் பாலத்தின் அடியில்
ஒரு அதிகாலையில்
தற்செயலாக குனிந்து பார்த்தேன்
பத்தடி உயரத்தில் செந்நிறமாக
ஒரு ஆறு நடந்து போய்க்கொண்டிருந்தது
நான் உறைந்து நின்றுவிட்டேன்
அந்த இடத்தில் திடீரெனெ
ஒரு நதி உண்டாகுமெனெ
யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்

Writer Manushyaputhiran's poem on Chennai flood

யாரோ ஒருவன்
அப்போதுதான் எழுந்து
தன் காலைத்தேநீரை
அருந்திக்கொண்டிருந்தான்
வாசற்கதவை திறந்துகொண்டு
ஒரு நதி உள்ளே வருவதைக் கண்டு
திடுக்கிட்டான்
நதி கடுமையான பசியில் இருந்தது
அவனை இழுத்துகொண்டு
வேகவேகமாக நடந்து சென்றது

நகரத்தில்
புதிதாக வளர்ச்சியடைந்த பிரதேசமொன்றில்
பிரமாண்டமான ஒரு ஏரி
திடீரெனெ தோன்றியது
பிரமாண்டமான குடியிருப்புகளும்
சினனஞ்சிறு குடிசைகளும்
அந்த ஏரிக்குள்
ஒரு கடல்கொண்ட நகரம்போல
அசைந்துகொண்டிருந்தன
"நகரத்திற்குள் இவ்வளவு பெரிய ஏரியை
கொண்டுவந்துவிட்டது யார்?"
என்று நகரவாசிகள் கூக்குரலிட்டார்கள்
ஏரிக்குள் இருந்து
ஒரு குரல் கேட்டது
"நீண்ட நாளைக்குப் பிறகு
எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறோம்
கொஞ்சம் பொறுங்கள்
இங்கிருந்து கிளம்பிவிடுவோம்"

Writer Manushyaputhiran's poem on Chennai flood

நகரத்திற்கு வெளியே
ஏரிகளிலிருந்து
"சீக்கிரம் கதவைத்திற"
என்று உறுமல்கள்
கேட்டவண்ணம் இருக்கிறன

நகரமெங்கும்
தெருவுக்குதெரு
குட்டி ஓடைகள்
நடமாடத்தொடங்கின
குட்டி வாய்க்கால்கள்
குட்டி அருவிகள்
குட்டிக் குளங்கள்
அவை தங்களுக்கு மிகவும் பழகிய
ஒரு ஸ்வாதீனமான இடத்தில் நுழைவதுபோல
எல்லா இடங்களுக்குள்ளும்
நுழைந்து வெளியேறுகின்றன
நீர்மையின் ஆயிரம் பசித்த நாவுகள்
மக்களின் மேல் நீள்கின்றன

இப்போது சாக்கடையாக மாறிவிட்ட
இந்த நகரத்தின் இறந்த நதியொன்றில்
முன்னொரு காலத்தில்
படகுகள் சென்றுகொண்டிருந்தன
நான் மழைக்காலங்களில்
வீட்டு முற்றத்தில்
என் குழந்தைகளுக்கு
காகிதப் படகுகள் செய்து தருவேன்
தண்ணீரில் அவை
இன்னொரு தேசத்திற்கு செல்லும் என்று
அவர்களை நம்ப வைப்பேன்
திடீரென ஒரு நாள்
'ஆட்டோ'களும்
‘கார்'களும் நெரியும்
என் தெருவில்
என் வீட்டிலிருந்து குழந்தைகளை
ஒரு படகில் ஏற்றிக்கொண்டு
பதட்டத்துடன் விரைந்துகொண்டிருந்தேன்
அந்தப் படகில் நாங்கள்
காலத்தின் இன்னொரு கரை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தோம்

பிரமாண்டமான வணிக வளாகத்திற்குள்
மக்கள் வெள்ளம் போல
மழை வெள்ளம் நுழையும் காட்சி
ஒரு பிரளயத்தைப்போல இருக்கிறது
"அந்த இடங்கள் நாங்கள் பார்க்க
வயல்களாக இருந்தன"
என்று சொல்பவர்கள்
நெற்கதிர்களைப்போல
கட்டங்கள் மிதக்கும்
நிலக்காட்சியைக் கண்டு
மனம் அதிர்கிறார்கள்
இவ்வளவு காலம்
பூமிக்கு அடியில்
துயரத்துடன் பதுங்கியிருந்த சர்ப்பங்கள்
விழித்தெழுந்து
தண்ணீரோடு தண்ணீராக
தங்கள் பூர்வீக வாழ்விடங்களுக்குள் நுழைகின்றன
ஒரு கல்லூரிக்குள்
வெள்ளத்தில் மிதந்து வந்த தவளைகள்
விரிவுரயாளர்களின் மேஜைகள் மேல்
ஏறி அமர்ந்து பேசத் தொடங்கின

நகரவாசிகள்
பசியிலும்
குளிரிலும்
பயத்திலும்
நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்

வளர்ப்புபிராணிகளின்
பசித்த குரல்கள்
தண்ணீருக்கு மேல்
மிதந்துகொண்டிருக்கின்றன
தண்ணீரில் இன்னும்
என்னென்னெவோ மிதந்து செல்கின்றன
பொம்மைகள்'
உள்ளாடைகள்
நாற்காலிகள்
பாத்திரங்கள்
உடைந்த மரக்கிளைகள்
புத்தகங்கள்
தொப்பிகள்
தலைகீழாக கவிழ்க்கபட்ட
ஒரு நகரத்தின் பொருள்கள்

மக்களின் கோபம்
தொலைகாட்சி திரைகளில்
தண்ணீரைப்போல
வழிந்தோடிக்கொண்டிருக்கிறது
ஒரு பெண் ஆவேசமாக
மைக் முன்னால் கத்திக்கொண்டிருந்தாள்
" நான்கு நாட்களாக
வீட்டை விட்டு இறங்க முடியவில்லை
உணவு இல்லை
பால் இல்லை
காய்சலுக்கு மருந்து இல்லை
குடிக்க தண்ணீர் இல்லை
கழிவறைக்கு தண்ணீர் இல்லை
ஆனால்
தண்ணீர்,
எங்குபார்த்தாலும் தண்ணீர்
எங்கு பார்த்தாலும் தண்ணீர்
இந்த தண்ணீரை யாராவது
இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்"

நான் யாரோ ஒருவனின் இடத்தில்
தற்காலிகாக குடியேற்றப்பட்டிருக்கிறேன்
என்னைபோல
எவ்வளவு பேர்..எவ்வளவு பேர்
எங்கள் பாதுகாக்கபட்ட வெளிகளை
ஒரு பிரமாண்டமான நீர்த்துளி
ஒரு நாளில் கரையச் செய்துவிட்டது
அந்த இடம் 'எப்போது நீ இங்கிருந்து போவாய்?'
என்று என்னை கேட்டுகொண்டே இருக்கிறது

நாங்கள் அடைத்துக்கொண்டு வாழ்ந்த
எல்லாக் கதவுகளையும்
மழை ஒரே ஒரு தட்டுதலில்
உடைத்து திறந்துவிட்டது
நகரவாசிகள்
மனிதக் கரங்களின்
வெதுவெதுப்பை வேண்டுகிறார்கள்
ஒருவர் கரத்தை ஒருவர்
இறுக பற்றிக்கொள்ள விழைகிறார்கள்

நகரத்தலைவர் புன்னகையுடன்'
கையை விரிக்கிறார்
" மக்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்
எதற்கும் என்னை பொறுப்பாக்காதீர்கள்
இந்த வருடம் மழை அதிகம்"

இறந்து எனது தகப்பனின் குரலை
நான் மழைச்சத்தத்தின் நடுவில்
ஒரே ஒரு முறை கேட்டேன்
" போ..போய்விடு
சீக்கிரம்
இந்த பைசாச நகரத்தை விட்டு"
பிடிவாதமாக பதிலளித்தேன்
" முடியாது
போவதென்றால்
இந்த நகர மக்கள் அனைவரையும்
அழைத்துக்கொண்டுதான் செல்வேன்"

மழைக்கோட்டுகள் அணிந்த
மீட்புப் பணியாளர்கள்
தலையை விரித்துப்போட்டுக்கொண்டு
சிவந்த கண்களுடன்
தெருவுக்குத் தெரு உட்கார்ந்திருக்கும்
மழையின் கரங்களை
கட்டப்போராடுகிறார்கள்

இறந்த நதிகளின் ஆவிகள்
வன்மத்தோடும்
துயரத்தோடும்
நகரமெங்கும்
வீடு திரும்பிகொண்டிருக்கின்றன

English summary
Writer Manushyaputhiran posted a poem on Chennai flood in his Facebook page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X