For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் ஏன் வாழனும்.. திருவுடையான் மறைவு குறித்து வண்ணதாசன் வேதனை

Google Oneindia Tamil News

மதுரை: மறைந்த மக்களின் பாடகர் திருவுடையன் மறைவுக்கு எழுத்தாளர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மக்களுக்கான கருத்துக்களை மிக எளிமையான வார்த்தைகளில், அழகுற நாட்டுப் புறப் பாடல்களாகப் பாடி மக்கள் மனதைக் கவர்ந்தவர் திருவுடையான். வெண்கலக் குரலால் அவர் பாடிய பாடல்கள் மக்களைத் தட்டி எழுப்பியவை.

இன்று காலை மதுரை வாடிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார் திருவுடையான். அவரது மறைவுச் செய்தி கேட்டதும் எழுத்தாளர்கள், கம்யனிஸ்ட் இயக்கத் தோழர்கள், பல்துறையினர் வாடிப்பட்டி மருத்துவமனையில் திரண்டு விட்டனர்.

Writers condole the death of singer Thiruvudayan's death

இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்ட பலரும் திருவுடையான் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கவிஞர் வண்ணதாசன்

கவிஞர் வண்ணதாசன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:

Writers condole the death of singer Thiruvudayan's death

கடந்த வயது அப்படியே தான் முடிந்தது.இந்த வயதும் அப்படியே தான் துவங்கி இருக்கிறது.
திருவுடையானை இழந்திருக்கிறேன். திருவுடையானுடன் இரண்டு நிமிடங்கள் கூடத் தனிப்படப் பேசியிருக்க மாட்டேன். எனக்குத் தெரிந்தவை எல்லாம் அவருடைய நெருக்கமான சிரிப்பு, பாடும் போது வெளியேயும் உள்ளேயும் அதிர்ந்தடங்கும் குரல், சதா தரையில் அமர்ந்து வாசிக்கையில் தபேலாவில் புரண்டாடும் அவருடைய விரல்கள்.

என் இரண்டு மூன்று மேடைப் பேச்சை அவரின் தபேலா வாசிப்பில் இருந்து துவங்கியிருக்கிறேன். திறவு கோல்களையும் திறப்புகளையும் எனக்குத் தந்தவை அவர் விரல்கள். அவரே அறியாத ஒரு அவர் என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறார். நிறையப் பேரை இப்படி இழக்கச் செய்கிற வாழ்வு, இப்படி இன்னும் சிலரையேனும் அடையச் செய்யுமா தெரியவில்லை.

Writers condole the death of singer Thiruvudayan's death

வருத்தத்தில் அல்ல, நிறைவில் தான் தோன்றுகிறது, 'நான் எல்லாம் ஏன் எழுதணும்?'
இசையின் 'ஆட்டுதி அமுதே' , ஜான் சுந்தரின் 'நகலிசைக் கலைஞன்' இரண்டையும் அடுத்தடுத்து வாசித்து முடித்ததும் அப்படித்தான் தவிக்கிறது.
மரபின் மைந்தன் முத்தையா, ஜயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இருவரோடும் முதல் நாள் மாலை மேடையில் பேசுகிறேன். மறுநாள் முத்தையா, ஜயந்தஸ்ரீ, அவரது கணவர் பாலகிருஷ்ணன் மூவரோடும் இருக்க வாய்க்கிறது. முன்னிருவரையும் விட அதிகம் என்னைத் தொடுகிறவராக பாலகிருஷ்ணனை உணர்கிறேன். அவர்களிடம் விடை பெறுகையில் தோன்றுகிறது, 'நான் எல்லாம் எதற்குப் பேசணும்?'

நா.முத்துக்குமார், எங்கள் குடும்பத்தின் ரேஷன் கார்டில் இணைக்கப்படாத பெயராக இருந்த 'மீனாக்கா', இன்றைக்குக் காலை திருவுடையான் எல்லோரின் மறைவுக்குப் பின், எனக்குத் தோன்றுகிறது, 'நான் ஏன் இருக்கணும்?'

இப்படி எல்லாம் கேள்வி வருவது, சுய இரக்கத்தில் அல்லது ஒரு வருத்தத்தில் அல்ல, ஒரு வித உணர்வு நிறைவில் தான். தெருக் குழாயில் குடி தண்ணீர் பிடிக்கப் போகிறவள், தன் ஆயிரம் அன்றாடக் கவலையின் நடுவில், சொரு சொருவென்று மஞ்சள் பிளாஸ்டிக். குடம் கழுத்து வரை நிறைந்து விளிம்புக்கு வருவதைப் பார்க்கிற நேரத்து மன நிலை. வழிந்து சிந்துவதை கூடுதலாக ஒரு கணம் பார்த்து,பார்த்தபின் பதறுகிறவன் தானே நான்.

பாரதி கிருஷ்ணகுமார்

எழுத்தாளர் - இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் தனது முகநூலில் திருவுடையான் மறைவு குறித்து
எல்லோருக்கும் பாடியவனை ....
எனக்கெனவும் பாடியவனை....
இழந்தேன் . அய்யோ....
துயர் மிகுந்து தவிக்கிறேன் என்று கூறி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கவின் மலர்

Writers condole the death of singer Thiruvudayan's death

பத்திரிகையாளர் கவின் மலரின் இரங்கல்:

எத்தனையோ கலை இரவுகளில் விடியல் கானம் பாடிய தோழர் திருவுடையான் விபத்தில் மரணமுற்ற செய்தி வந்திருக்கிறது இந்த விடியலில். இதை எங்ஙனம் தாங்குவது! மிக நிராதரவான தருணமிது. கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. வீதியில் இறங்கிப் பாடிய நீ வீதியிலேயே மரணமடைந்திருக்கிறாய் தோழா! உன்னையும் உன் கம்பீரக் குரலையும் உன் பாடல்களையும் எவ்வளவு நேசித்திருக்கிறேன் என்று இத்தருணமே முன்னெப்போதையும்விட அதிகம் உணர்த்துகிறது. இந்த மரணம் அநியாயமானது. ஒப்புக்கொள்ள முடியாதது. அஞ்சலியை செலுத்தவும் மனம் வரவில்லை..இச்செய்தி பொய்யென்று எவரேனும் உரைக்க மாட்டீர்களா?

தற்போது வாடிப்பட்டி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிவடைந்து திருவுடையான் உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

English summary
Writers and verious personalities have condoled the death of singer Thirvuydayan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X