For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டி.எஸ்.பி தற்கொலைக்கு காரணமான உயரதிகாரிகளை கூண்டோடு சஸ்பெண்ட் செய்க... சொல்கிறார் யுவராஜ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாமக்கல்: டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலையில் பொய்யான செய்திகளை பரப்பும் மேற்கு மண்டல ஐ.ஜி, சேலம் டி.ஐ.ஜி, எஸ்.பி செந்தில்குமார், ஏடிஎஸ்பி சந்திரமோகன், ராசிபுரம் டிஎஸ்பி ராஜு ஆகியோரை கூண்டோடு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் கூறியுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று உலா வருகிறது.

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளி யுவராஜ் பெயரில் வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

யுவராஜ் கூறியதாக உலா வரும் வாட்ஸ் அப் செய்தி:

தற்கொலைக்கு ஆதாரம்

தற்கொலைக்கு ஆதாரம்

கடந்த 80 நாட்களாக நடந்து வந்த அரசியல்வாதிகளின் கைக்கூலி காவல்துறை அதிகாரிகளின் அகோர தாண்டவத்தை தாங்க இயலாத நேர்மையான பெண் காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா அவர்கள் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி கடிதம் எழுதியதாக காட்டினாலும், யார் என்ன விதமான கதைகள், காரணங்கள் கட்டினாலும் உயர் அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக, ஜனநாயகத்திற்கு விரோதமாக தன்னை செயல்பட வற்புறுத்தி தந்த மன உளைச்சலும், ஒரு பெண் என்றும் பாராமல் பேசப்பட்ட வார்த்தைகளுமே டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்கள் தற்கொலை முடிவெடுக்க காரணம் என்பது சத்தியமான உண்மை. (இதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது.

வாய் திறக்காதது ஏன்?

வாய் திறக்காதது ஏன்?

ஒருவர் நேர்மையான அதிகாரியாக இருந்து பணி செய்ய விரும்பினால் இன்று இருக்க கூடிய நிர்வாக நிலை எப்படிப்பட்ட பிரச்னை தருகிறது பாருங்கள். ஒரு பெண் டிஎஸ்பி தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டிருக்கிறார். எந்த ஒரு அரசியல் தலைவரும் உளமார்ந்த ஆக்ரோசத்தோடு வாய்திறக்கவில்லையே ஏன்?.

நியாயமான விசாரணை

நியாயமான விசாரணை

தனது வாழ்க்கையை இந்த சமூக நலன்களுக்காக அர்ப்பணித்து நேர்மையாக வாழ நினைத்தது குற்றமா? அவரது உறவினர்கள், நண்பர்கள் தவிர எவரும் வாய்திறக்க மறுப்பது ஏன்?. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் வெளியிட்ட ஆடியோவில் மிகத் தெளிவாக நேர்மையான அதிகாரியாக செயல்படும் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்களை உயரதிகாரிகள் தவறான முறையில் வழி நடத்துகின்றனர் என்பதை குறிப்பிட்டிருந்தேன். நியாயமான காவல்துறை உயரதிகாரிகள் இருந்திருந்தால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தபடவில்லை?.

நேர்மையான அதிகாரி

நேர்மையான அதிகாரி

நேர்மைக்கு ஜாதி மத பேதமில்லை. அவர் என் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தது வழக்கு பதிவு செய்தார். அதில் தவறு இல்லை. அன்றைய சூழ்நிலைக்கு அது சரியே. ஆனால் நியாயமான தொடர் விசாரணையை மேற்கொள்ள விடாமல் கையில் சிக்கியவர்களை எல்லாம் உயரதிகாரிகள் தேவைக்கேற்ப பொய் வாக்குமூலங்களை பதிவுசெய்து மிரட்டி, அடித்து துன்புறுத்தி கையொப்பம் பெற்று சிறையிலடைக்க தன்னையும் தனது நிர்வாகத்தையும் தவறாக பயன்படுத்துவதையும் மேலும் பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததும் மீதமிருக்கும் ஐந்து பேரையும் எனது மனைவியையும் கைது செய்ய துடியாய் துடித்த உயரதிகாரிகள் என்ற சட்டவிரோதிகளுக்கு இடம் கொடுக்கவா? தனது நேர்மையை பலி கொடுக்காமல் காப்பாற்றவா? என்ற போராட்டத்தில் உயரதிகாரிகள் கொடுமையை இனியும் தாங்க முடியாத நிலையில் தான் மிகவும் நேசித்த காவல்துறை பணியை ராஜினாமா செய்து உயிர்வாழ்வதைவிட சாவதே மேல் என உயிர் விட்டுவிட்டார் என்பதே உண்மை.

சஸ்பெண்ட் செய்க

சஸ்பெண்ட் செய்க

தமிழக அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்பட்டு உண்மையான குற்றம் செய்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுப்பது உண்மை நோக்கமானால் முதல் கட்ட நடவடிக்கையாக குற்றத்தை மொத்தமாக மறைத்து பொய்யான செய்திகளை பரப்பும் மேற்கு மண்டல ஐ.ஜி, சேலம் டி.ஐ.ஜி, முதல் குற்றவாளி நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இவரது தளபதியாக செயல்பட்ட ஏடிஎஸ்பி சந்திரமோகன், காவல்துறையின் கரும்புள்ளியான ராசிபுரம் டிஎஸ்பி ராஜு ஆகியோரை கூண்டோடு சஸ்பெண்ட் செய்யுங்கள். அதன்பின்னர்தான் பாவப்பட்ட ஜென்மமாக உழைக்கும் கீழ் அதிகாரிகள் உண்மையை போட்டுடைப்பார்கள்.

அஞ்சவேண்டாம்

அஞ்சவேண்டாம்

விஷ்ணுபிரியா அவர்களின் தலைமையில் செயல்பட்ட அதிகாரிகள் அவருக்கு நன்றி செலுத்திட விரும்பினால் அவருக்கு கொடுக்கபட்ட மன உளைச்சலை தயங்காமல் வெளியிடுங்கள். எதற்கும் அஞ்சாதீர்கள். அவரது தோழி மகேஷ்வரியை போல வேலையே போனாலும் சரியென உண்மையை சொல்லுங்கள். அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் நூறு சதவிகிதம் உண்மை அதற்குண்டான ஆதாரங்கள் அவரிடம் உள்ளதா என எனக்கு தெரியாது. ஆனால் அவரது தகவல்கள் உண்மை என்பதற்கு என்னிடம் அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன.) நீங்களும் மூடி மறைத்தால் காவல்துறையில் நேர்மையாக செயல்பட நினைக்கும் ஒவ்வொரு அதிகாரியாக நாடு இழக்க நேரிடும். நாட்டில் வாழவே தகுதி இல்லாதவர்கள் காவல்துறையில் உயரதிகாரிகள். காவல்துறைக்கு நூறு சதவிகிதம் பொருத்தமான பெண் விஷ்ணுபிரியா. உயரதிகாரிகள் அவரை நாட்டில் வாழ விடவில்லை. என்ன ஓர் விசித்திரமிது?

மரணதண்டனையை ஏற்பேன்

மரணதண்டனையை ஏற்பேன்

கோகுல்ராஜ் கொலை வழக்கினை எவ்வித சமரசமில்லாமல் காவல்துறை நடத்தட்டும், நான் குற்றவாளி என நிரூபித்தால் மறு பேச்சின்றி மரணதண்டனையை ஏற்க எப்போதும் நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் அப்பாவி பெண்ணை மன உளைச்சல் படுத்தி கொன்று அவரது குடும்பத்தாரை சிதைக்க காரணமான காவல்துறை அதிகாரிகளை, இவர்களை ஏவிய அரசியல்வாதிகளை யார் தண்டிப்பது?.

உண்மை குற்றவாளிகள்

உண்மை குற்றவாளிகள்

காவல்துறை உயரதிகாரிகள் கொடுத்த மன உளைச்சல் மட்டுமே டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்ய காரணம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. மிக விரைவில் அதனை வெளியிடுவேன். அதனை வைத்து உண்மையான குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்யவில்லை எனில் எனது சட்டப்படியான நடவடிக்கை தொடங்கும். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லுகிறேன். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் தப்பிக்கலாம். என்னிடமிருந்து தப்பிக்க இயலாது. இதனை காலம் சொல்லும்.

வளைக்கும் அரசியல்வாதிகள்

வளைக்கும் அரசியல்வாதிகள்

நேர்மையான அதிகாரிகள் வாழவேண்டும், தனது கடமையை யாருக்கும் பயப்படாமல் செய்யவேண்டுமானால் பொதுமக்களாகிய நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க இவரது மரணத்திற்கு பதில் வேண்டும். யார் விட்டாலும் இந்த பிரச்னையை நாம் விடக்கூடாது. மீதமிருக்கும் நேர்மையான அதிகாரிகளை காப்பாற்றும் நடவடிக்கையையும் சுயநலத்துக்காக ஏவலர்களாக செயல்படுகிற காவல்துறை அதிகாரிகளையும், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை தன் சௌரியத்திற்கு வளைக்க நினைக்கும் அரசியல்வாதிகளையும் களை எடுக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். அதன் மூலமாக மட்டுமே நமது சகோதரி விஷ்ணுபிரியா அவர்களின் ஆன்மாவை சாந்தியடை வைக்க முடியும் என்று கூறியுள்ளார் யுவராஜ்

இந்த யுவராஜ் ஏற்கனவே கோகுல்ராஜ் கொலை தொடர்பாகவும் வாட்ஸ் ஆப்பில் ஒரு பேச்சை உலவ விட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Controversial caste leader Yuvaraj has sufaced again on Whatsapp and has commented on the DSP Vishnupriya suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X