தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோடிகளில் வசூலித்து கொடுத்த ஆடி மொய் விருந்து... கொரோனா காலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை

தஞ்சை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆடி மாதத்தில் மொய் விருந்து மூலம் பல நூறு கோடி ரூபாய் வரை வசூலாகும். கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்து நடத்துவதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கோடிகளில் வசூலித்து கொடுத்த மொய் விருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடத்த முடியாமல் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொய் விருந்து நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி மொய் விருந்து நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம், வீடு கிரகப்பிரவேஷம், சடங்கு, வளைகாப்பு போன்ற வீட்டு விஷேசங்களுக்கு சென்றால் தகுதிக்கு ஏற்றார் போலவும் உறவுக்கு ஏற்றார் போலவும் மொய் செய்வது வழக்கம். ஆடி மாதத்தில் எந்த வித விஷேசமும் வீட்டில் வைக்க முடியாது. பல கோவில்களில் கிடா வெட்டு வைத்து மொய் வசூலிப்பார்கள்.

ஆடி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை ஆடி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை

ஆடி மாதம் வந்துவிட்டாலே போதும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மொய் விருந்துகள் தடபுடலாக நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கில் அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டு, பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு அறுசுவை அசைவ விருந்துகள் அமர்களப்படும்.

மொய் விருந்து

மொய் விருந்து

1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளிலும் திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்...நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு, கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருகிறது.

ஆடி மாத மொய் விருந்து

ஆடி மாத மொய் விருந்து

ஆடி முதல் தேதியில் தொடங்கி கடைசி ஆடி வரைக்கும் தினம் ஒரு தெருவில் மொய்விருந்து நடைபெறும். மொய்விருந்து வைப்பவர்கள். வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர்களில் மொய்விருந்து வைப்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். விருந்து நடைபெறும் தேதியை குறிப்பிட்டு வரவேற்பு பேனர்களும் ஆங்காங்கே வைத்திருப்பார்கள்.

ஆடு கோழி மீன்

ஆடு கோழி மீன்

மொய் விருந்து வைப்பவர் சாதி மதம் பேதமின்றி ஊர் மக்கள் அனைவரையும் மொய் விருந்துக்கு அழைப்பது வழக்கம். ஆடு, கோழி, மீன் போன்ற அசைவ உணவுகளை சமைத்து வைத்து விருந்தில் பரிமாறுவார்கள்.
விழாவுக்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் சிறப்பான முறையில் வரவேற்று, வாழை இலை போட்டு அசைவ உணவு வகைகளை பரிமாறி திக்குமுக்காட வைப்பார்கள்.

கறிக்குழம்பு சுவை

கறிக்குழம்பு சுவை

மொய் விருந்து குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை. காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மிகச்சில விருந்துகளில் மட்டுமே சைவம் பரிமாறப்படும். அசைவ விருந்துகளில் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும். ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு.

கோடிகளில் வசூல்

கோடிகளில் வசூல்

மொய் விருந்தில் கலந்துகொள்பவர்கள் சாப்பிட்டு முடிந்த பின்னர் பணத்தை மொய் வைப்பார்கள். பானைகளிலும் அண்டாக்களிலும்தான் மொய் பணத்தை வசூலித்து போடுவார்கள். சில இடங்களில் லட்சங்களில் கூட மொய் வைப்பார்கள். கோடிக்கணக்கில் மொய் பணம் வசூலாகும். மொய் வசூல் செய்வதற்காக ஐந்தாறு கவுண்டர்கள் செயல்படுவதுண்டு. அள்ளி கொடுக்கும் பணத்தை கோணியில் கட்டி எடுத்துச் செல்வார்கள் விருந்து கொடுத்தவர்கள். கடந்த காலங்களில் 5 கோடி வரை வசூலாகியுள்ளது மொய் பணம். ஒரு நம்பிக்கையின் பேரில்தான் இதுபோன்ற மொய் விருந்துகள் நடைபெறுகின்றன.

முன்னேற்றத்திற்கு உதவும் பணம்

முன்னேற்றத்திற்கு உதவும் பணம்

பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள உறவுமுறைகளையும், நண்பர்களையும் கை தூக்கிவிடும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொய் விருந்துகள் தோன்றின. அவரவர் வசதிக்கேற்ப ஐநூறு, ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை மொய் செய்வது காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. வாழ்க்கையில் தொழில் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த மொய் விருந்துகள் பெரியளவில் கை கொடுத்து உதவுகின்றன என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

நன்மைகள் அதிகம்

நன்மைகள் அதிகம்

மொய் விருந்துகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு யாரிடமும் கடன் பெறாமல் தொழில் தொடங்கி வெற்றிக்கண்டவர்கள் ஏராளம். மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள். மொய் விருந்தை மேலோட்டமாக பார்க்கும் போது அது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் தெரிந்தாலும் அதன் பயனும், நன்மையும் அதனை உணர்ந்தவர்களுக்கே தெரியும். பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கு இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.

மொய் விருந்து நடத்தவும் தடை

மொய் விருந்து நடத்தவும் தடை

கொரோனா தாக்கத்திற்கு மொய் விருந்துகளும் தப்ப முடியவில்லை. கடந்த கால் நூற்றாண்டு கால வரலாற்றில் கடந்த 2 ஆண்டு காலமாக மொய் விருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி மாதத்தில் வழக்கமாக காணப்படும் உற்சாகமும், மகிழ்ச்சியும் இரண்டு ஆண்டு காலமாக காணாமல் போய் விட்டது. தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் மொய் செய்தவர்கள் மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கணிசமான தொகையை ஈட்டலாம் என நினைத்தவர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அமர்களப்பட்ட விருந்து

அமர்களப்பட்ட விருந்து

தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு முழுமையாக நீங்காத நிலையில், மொய் விருந்து நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. சிசிடிவி கேமிரா காட்சி, துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள், தனியார் வங்கி சார்பில் அமைக்கப்பட்ட ஸ்டால் என அமர்க்களமாய் நடைபெற்று வந்த மொய் விருந்தின் மூலம் ஆடு வியாபாரிகள் முதல் அச்சக தொழில் செய்வோர் வரை பலர் பயன்பெற்றனர்.

இரண்டு ஆண்டுகளாக முடக்கம்

இரண்டு ஆண்டுகளாக முடக்கம்

மொய் விருந்துகள் மூலம் சமையல்காரர்கள், பந்தல்காரர்கள், ஒலி பெருக்கி ஏற்பாட்டாளர்கள், அரிசி வியாபாரிகள், ஆட்டுக்கறி விற்பனையாளர்கள், மொய் எழுத்தர்கள், பந்தல் அலங்கார வடிவமைப்பாளர்கள், விறகு விற்பவர்கள், பிளக்ஸ் தயாரிப்பாளர்கள், என பல தரப்பட்டோரும் பயன் அடைந்து வருவாய் ஈட்டி வந்தனர். ஆனால் இரண்டாண்டு காலமாக இவர்கள் அனைவரது வருவாயையும் மொத்தமாக பறித்து முடக்கிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ்.

மொய் விருந்து நடத்தக்கூடாது

மொய் விருந்து நடத்தக்கூடாது

அரசின் தடை உத்தரவை மீறி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மொய்விருந்து நடைபெறுவதாக தகவல் வெளியானதை அடுத்து மொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். மொய் விருந்து நடத்தப்படும் தனியார் மண்டபங்களின் உரிமைகள் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

English summary
Many have been disappointed that the Moi party, which has raised millions, has not been held for the past two years. The district collector has ordered that no moi party should be held in Thanjavur district as the corona curfew is in force. The district collector has warned that stern action will be taken against those who violate the ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X