என்னாது தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி படம் அகற்றமா? நாலாபுறமும் பார்த்தால்தானே உண்மை தெரியும்!
தஞ்சை: தஞ்சாவூரில் மேயர் அலுவலகத்தில் கருணாநிதி படம் அகற்றப்பட்டு அவருக்கு பதிலாக உதயநிதியின் படம் வைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த தகவல் உண்மை இல்லை என கள நிலவரம் விவரிக்கிறது.
அண்ணா தொடங்கிய திமுகவில் கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர் திமுகவின் தலைவராகவே பொறுப்பேற்றுள்ளார். மேலும் ஸ்ாடலின் மகன் உதயநிதியும் அரசியலுக்கு வந்துவிட்டார்.
ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு கட்சியினர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதை சட்டசபையில் கூட கண்கூடாக தெரிந்தது. திமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து போய் முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் வைத்தனர்.
வேலுமணி 811 கோடி ஊழல்! 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு? திமுக தயங்குவது ஏன்? மநீம கமல்ஹாசன் கேள்வி!

உதயநிதி ஸ்டாலின்
பின்னர் பின்னால் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒவ்வொருவராக வணக்கம் வைத்தனர். இதைதான் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாரிசு அரசியல் என்கிறார்கள். இதை திமுக மறுக்கிறது. மேலும் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா என கேள்வி எழுப்பி ஒரு பட்டியலையும் திமுக நீட்டியுள்ளது.

கருணாநிதி பேனர்
இந்த நிலையில் உதயநிதி அரசியலுக்கு வரும் போதிலிருந்தே பேனர்களில் கருணாநிதிக்கு பதிலாக உதயநிதியின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததை சிலர் டிவிட்டரில் அவரிடமே கேட்டனர். இதற்கு உதயநிதி பதிலளிக்கையில், இனி இது போல் நடைபெறாது என உத்தரவாதம் கொடுத்திருந்தார்.

கும்பகோணம்
இந்த நிலையில் தஞ்சாவூரில் " கும்பகோணத்தில் திராவிட திருவிழா" என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிலையில் தஞ்சாவூர் மேயர் அலுவலகத்திற்கு சென்றிருந்தார் உதயநிதி.

மேயர் அறையில் கருணாநிதி புகைப்படம் இல்லை
அப்போது மேயர் இருக்கையில் அமர்ந்திருந்த சண் ராமநாதன், உதயநிதி உள்ளிட்டோருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். அப்போது அந்த மேயருக்கான அறையில் ஸ்டாலினின் புகைப்படமும் உதயநிதியின் புகைப்படமும் இருந்தது. ஆனால் கருணாநிதியின் புகைப்படம் இல்லை. இந்த புகைப்படம் வைரலானது. இதை கண்ட உடன்பிறப்புகள் உதயநிதி ஸ்டாலினை கவருவதற்காக கருணாநிதியின் புகைப்படத்தை இல்லாமல் வைத்திருப்பதா என கண்டனம் தெரிவித்ததோடு தங்களது மனக்குமுறலையும் கூறியிருந்தனர்.

உண்மை நிலவரம்
ஆனால் இதுகுறித்து உண்மை நிலவரத்தை அறிய தஞ்சை மேயர் அலுவலகத்தில் விசாரித்த போது தஞ்சை மேயரின் அறையில கருணாநிதி, அண்ணா ஆகியோரின் படங்கள் இருக்கின்றன. மாலை அணிவிக்கப்பட்ட கருணாநிதியின் படம் இருக்கிறது. அத்துடன் மேயரின் மேஜையில் கருணாநிதி, அண்ணாவின் சிறிய படங்களும் வைக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது கருணாநிதி புகைப்படம் இல்லாமல் இருப்பதாக வைரலாகும் படம் ஜூம் செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே உதயநிதிக்காக கருணாநிதியின் படம் அகற்றப்படவில்லை. இதுதான் உண்மை நிலவரம்!