"பிள்ளை மாதிரி பார்த்தோம்.. அரசியல் செய்கிறார்கள்.." தஞ்சாவூர் மாணவி பற்றி பள்ளி நிர்வாகம் விளக்கம்!
தஞ்சாவூர்: மாணவி மரணத்தை அரசியலுக்காக ஒருசில பிரிவினர் கையிலெடுத்து திசைதிருப்புவதாக பள்ளி நிர்வாகம் அறிக்கை தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ மத கல்வி நிறுவனம் ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று
கட்டாய மதமாற்றம் செய்யச்சொல்லி மாணவியை பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகி துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக
இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, மாணவிக்கு நீதிகேட்டும் பாஜக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது. இந்திய அளவில் அந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. மாணவியின் குடும்பத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது.

கைது
மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி நிர்வாகம்
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் இதற்கு விளக்கமளித்துள்ளது. ''மாணவி 8ம் வகுப்பு முதல் எங்கள் பள்ளியில்தான் பயின்றார்; எங்கள் அனைவருக்கும் பிள்ளையாகவே வளந்தார். அதனால்தான் 10ம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்தார்.அவரது இறப்பு குறித்து பல வதந்திகள் பரவுகின்றன. மாணவி மரணத்தை அரசியலுக்காக ஒருசில பிரிவினர் கையிலெடுப்பதும், திசை திருப்புவதும், பொய்களை விதைப்பதும், எம்மீது அவதூறு பரப்புவதும் பல வழிகளில் தொடர்வது வருத்தமளிக்கிறது.

ஆதாரம் இல்லை
இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ள வேண்டும். எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை; மதமாற்ற நடவடிக்கை குற்றச்சாட்டிற்கு எம் நிறுவனங்களில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எங்கள் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களே இதற்கு சாட்சி'' என்று பள்ளி நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.