தஞ்சை மாணவி வழக்கு.. மதம் மாற்ற முயற்சி நடந்ததாக புகார் இல்லை.. அமைச்சர் அன்பில் விளக்கம்!
தஞ்சாவூர்: தஞ்சை மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த புகாரும் இல்லை, சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் மத மாற்றம் குறித்த புகார் வைக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், அறைகளை சுத்தம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதாகவும்.. அதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. அதே சமயம் பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மாணவி பலியான விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாணவி வழக்கு.. கிறிஸ்துவத்திற்கு எதிராக பாஜக வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறது- திருமா விமர்சனம்

தஞ்சை மாணவி
மாணவியை மதம் மாற கூறி பள்ளியின் ஆசிரியர்கள் 2 பேர் கட்டாயப்படுத்தினார்கள். எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் மாணவியின் உடலை அடக்கம் செய்யும்படியும், இந்த தற்கொலை குறித்து தஞ்சை மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் முன்பு வாக்குமூலம் அளிக்கப்படியும் மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டது.

வாக்குமூலம்
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் தந்தை நேற்று தஞ்சாவூர் மேஜிஸ்டிரேட் கோர்ட் முன்பு வாக்குமூலம் அளித்தார். 2 மணி நேரம் அவர் தனது மகளின் தற்கொலை பற்றி வாக்குமூலம் அளித்தார். அதன்பின் அந்த மாணவியின் சித்தியும் (அப்பாவின் இரண்டாவது மனைவி) கோர்ட்டில் தனது வாக்குமூலத்தை அளித்தார். இதையடுத்து மாணவியின் உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

அன்பில் மகேஷ்
இந்த நிலையில் தஞ்சை மாணவியின் தற்கொலை பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டிஅளித்துள்ளார். அதில், தஞ்சை மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த புகாரும் இல்லை, சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் மத மாற்றம் குறித்த புகார் வைக்கப்படவில்லை. 30க்கும் மேற்பட்ட சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மதமாற்றம் இல்லை
மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கமுடியாது. ஆனால் இங்கு மதமாற்ற முயற்சி நடந்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கண்டிப்பாக அதற்கான விலையை தந்தே ஆக வேண்டும்.

தஞ்சை மாணவி வழக்கு
மாணவ, மாணவியர் எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதை பற்றி முதலில் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். அவசரப்பட்டு யாரும் தவறான முடிவை எடுக்க கூடாது. மாணவர்களுக்கு தங்களுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் அதை பற்றி பேச வேண்டும். உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அரசியலாக்க வேண்டாம்.
மேலும் அவர் அளித்த பேட்டியில், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.
12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த விஷயத்தை தயவு செய்து அரசியலாக்காதீர்கள். தீவிரமாக விசாரித்து யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

கடும் நடவடிக்கை
பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது. குறிப்பிட்ட பள்ளியின் மாணவ, மாணவியர், நிர்வாகிகளிடம் பேசி வருகிறோம். மாணவி மரணத்திற்கு இனிதான் காரணம் தெரிய வரும். பள்ளி வார்டன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். வேறு யார் இதில் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீண்டும் நாங்கள் கண்டிப்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம், என்று அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.