"வார்டன் வேலை வாங்கியதுதான் தற்கொலைக்கு காரணம்.." தஞ்சை பள்ளி மாணவி பேச்சுடன் வெளியான புதிய வீடியோ
தஞ்சை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி விடுதியின் வார்டன் சகாயமேரி தன்னை படிக்க விடாமல் வேலை வாங்கியதே காரணம் என மாணவி வாக்குமூலம் அளித்த புதிய வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், இந்து மத அடையாளமான, பொட்டு வைக்கக் கூடாது என என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் அந்த வீடியோவில் மாணவி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் விஷம் குடித்து கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார்.
இவர் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவி இறப்பில் இரு வேறு கருத்துகள் உலவி வந்தன. அதில் ஒன்று, பள்ளி மாணவி இறந்ததற்கு பள்ளியின் கட்டாய மதமாற்ற முயற்சியே காரணம் என பாஜகவும் இந்து அமைப்புகளும் குற்றம்சாட்டி வந்தன.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்

அதிக வேலை
மற்றொன்று பள்ளியில் அந்த மாணவிக்கு அதிக வேலை கொடுத்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி வந்தது. இதற்கு காரணம், சிறுமி பேசுவதை போல வெளியான ஒரு வீடியோதான். அதில், பள்ளியில் மதம்மாற கட்டாயப்படுத்தியதாக ஒரு வார்த்தை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ மருத்துவமனையில் வைத்து எடுக்கப்பட்டிருந்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ அரசியல்ரீதியாகவும் பேசுபொருளாக மாறியதால், வீடியோவை எடுத்த நபரை டிஎஸ்பி ஆபீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவிட்டது. அவரும் விளக்கம் கொடுத்தார். இன்னொரு பக்கம், சித்தி கொடுமைதான் சிறுமி மரணத்திற்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது, மாணவி மரணத்திற்கு முன்பு பேசி எடுக்கப்பட்ட வீடியோ, புதிதாக, வெளியாகியுள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியர்
வீடியோவில் அந்த மாணவியின் பெயர், பள்ளி தலைமை ஆசிரியரின் பெயர்கள் கேட்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவி கூறுகையில், நான் இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்தேன். ஆனால் இந்த வருஷம் 12ம் வகுப்பில் குடும்ப சூழல் காரணமாக என்னால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தாமதமாகத்தான் பள்ளியில் சேர்ந்தேன். 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற விரும்பினேன். ஆனால் பள்ளி முடிந்து வந்ததும் ஹாஸ்டலில் வார்டன் சகாயமேரி என்பவர் என்னை அவ்வப்போது கணக்கு வழக்குகளை பார்க்க சொல்லுவார்.

படிக்க முடியவில்லை
நானோ, தாமதமாக பள்ளியில் சேர்ந்ததால் எனக்கு எதுவும் புரியலை. அதனால் அப்புறமாக கணக்கு எழுதி தருகிறேன் என சொன்னாலும் விடமாட்டார். நான் சரியாக எழுதி கொடுத்தாலும் அதில் தப்பு இருப்பதாக கூறி நீண்ட நேரம் காக்க வைப்பார். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பின்னர் மதிப்பெண்கள் குறைந்தன. இப்படியே போனால் என்னால் படிக்கவே முடியாது என்பதால் நான் விஷம் குடித்தேன்.

பொட்டு வைக்க தடை இல்லை
நான் பொறுப்பானவள் என கூறி விடுதியிலும் என்னிடம் நிறைய வேலை வாங்குவார். வீட்டுக்கு போக வேண்டும் என கேட்டாலும் என்னை விட மாட்டார்கள். பொட்டு வைக்கக் கூடாது என என்னை வற்புறுத்தவில்லை என அந்த மாணவி கூறியுள்ளார். இந்த வீடியோப்படி பார்த்தால் மதமாற்றம் என்ற வார்த்தையோ, இந்து என்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டதாகவோ எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் வழக்கில் இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள், மாணவி பேசி எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டி இது மதமாற்றம் என கூறிய நிலையில், புதிய வீடியோவில் பேசுவதை வைத்து இது வார்டன் நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சல் என்ற வாதம் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, வழக்கின் மர்மங்களை களைய சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுப்பதை பார்க்க முடிந்தது. இன்னொரு பக்கம், மத பிரச்சினையை தூண்டிவிட்ட பாஜக தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன.