தை அமாவாசை.. சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள்

கும்பகோணம்: கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் மற்றும் மகாமக குளத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பது மரபு. முன்னோர்களை வழியனுப்புவதே தை அமாவாசை நாளாகும்.
தை அமாவாசை தினமான இன்று மகோதய புண்ணியகாலமும் இணைந்து வருவதால் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தை அமாவாசை
கும்பகோணத்தில் காவிரி ஆறு, திருச்செந்தூர் கடற்கரை, தூத்துக்குடி கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தை அமாவாசை என்றாலே விசேஷம் என்ற நிலையில் சோமவாரத்தில் வரும் தை அமாவாசை மிகவும் விசேஷம் நிறைந்ததாகும்.

108 தடவை
தை அமாவாசையை முன்னிட்டு, அரச மரத்தின் முப்பெரும் தேவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மன் தியானம் இருப்பதால் பிரம்ம முகூர்த்தத்தில் அரச மரத்தை பெண்கள் ஆண்கள் சுற்றி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆகையால் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அரசமரத்தை ஏராளமான பெண்கள் ஆண்கள் 108 தடவை சுற்றி வந்தனர்.

சாபம்
தூத்துக்குடியிலும் இன்று தை அமாவாசையன்று கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது. இதில் , 500-க்கும் மேற்பட்டோர் கலந்துள்ளார்கள். தர்ப்பணம் அளிக்காவிட்டால் முன்னோர்களின் சாபம் பரம்பரை பரம்பரையாக நம்மை சுற்றும்.

நம்பிக்கை
பாதுகாத்த முன்னோர்களுக்காக தர்ப்பணம் அளித்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம்.