நீரில் விழுந்த சிறுவன்.. காப்பாற்ற குதித்த நண்பர்கள் - 3 சிறுவர்கள் உயிரை பறித்த பெரியகுளம் கண்மாய்
தேனி: பெரியகுளம் கைலாசபட்டி அருகே பாபிபட்டி கம்மாயில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள சிறுவன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேரையூர் சேர்ந்த பன்னீர்செல்வம், மீனம்பட்டியை சேர்ந்த சபரிவாசன், நிலக்கோட்டை சேர்ந்த மணிமாறன், நிலக்கோட்டையை சேர்ந்த ருத்ரன் ஆகிய 4 சிறுவர்களும் பாபிபட்டி குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அவர்களில் ஒரு சிறுவன் தண்ணீரில் தவறி விழுந்தார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பேரும் குளத்தில் குதித்துள்ளனர். இதில், குளத்து நீரில் மூழ்கி பன்னீர்செல்வம், சபரிவாசன், மணிமாறன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குளத்தில் குதித்தனர். இதில் ருத்ரன் என்ற சிறுவன் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நான்கு பேரையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மூவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுவன் ருத்ரன், தேனி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.