"அதிமுக எங்க பங்காளி.. ஆனா பாஜக பகையாளி” கூட்டணி கிடையாது - போட்டுத்தாக்கிய ஆர்.எஸ்.பாரதி!
தேனி: அதிமுக எங்கள் பங்காளி, எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் பாஜக எங்கள் பகையாளி என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
மேலும், தி.மு.க பா.ஜ.கவுடன் இனி எப்போதும் சேராது என ஆர்.எஸ்.பாரதி எம்.பி உறுதியாகப் பேசியுள்ளார்.
“பழைய தி.மு.க-வ பார்க்கணும்னா இப்படி பண்ணுங்க..” - ஸ்டாலினிடம் இருந்து பறந்த அதிரடி ஆர்டர்!

சாதனை விளக்க கூட்டம்
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று தேனி மாவட்டம் போடியில் நடைபெற்றது. தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க வேண்டும் என்றால் இருக்கின்ற நேரம் போதாது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தமிழக அரசு ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடனில் இருந்தது. ஆனால் அவரது நிர்வாகத் திறமையால் கடனை சமாளித்து வருவதோடு, மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை விட
மேலும் பேசிய அவர், இது பெண்களுக்கான ஆட்சி. பெண்களின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் தி.மு.க ஆட்சியை பாராட்டி வடமாநிலங்களில் உள்ள ஊடகங்கள் எல்லாம் பேசுகின்றன.
ஸ்டாலின் முதலமைச்சராக வந்ததும் எதிர்க்கட்சிகளை எல்லாம் பழிவாங்குவார் என எல்லோரும் சொன்னார்கள். ஆனால் யாரும் பழிவாங்கப்படவில்லை. ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமியை மரியாதையாக நடத்தியது ஸ்டாலின் தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் போன்றோர் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்கின்றனர்.

அதிமுக பங்காளி
தமிழகத்தில் அ.தி.மு.க எங்கள் பங்காளி கட்சி. எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் பா.ஜ.க எங்கள் பகையாளி கட்சி. ஒரு போதும் தி.மு.க பா.ஜ.கவுடன் சேராது.
கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏன் வழங்கவில்லை என பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க கேட்பதற்கு தகுதி கிடையாது. அரசு ஊழியர்களை பாதுகாக்கும் இயக்கமாக தி.மு.க எப்போதும் இருக்கும் என்றார்.

பழிவாங்க அவசியமில்லை
மெரினாவில் கலைஞருக்கு சமாதி கட்ட இடம் கொடுக்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தி.மு.கவினரின் சட்டப் போராட்டத்தால் வெற்றி கிடைத்தது. முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் நினைத்திருந்தால் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்திருக்க முடியும். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. எங்களுக்கு யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை எனப் பேசினார்.