விதைக்கப்பட்டார் வடுகபட்டி ஆறுமுகம்.. எல்லையில் தீவிபத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்!
பெரியகுளம்: ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த போது தீ விபத்தில் வீரமரணமடைந்த தேனி ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ஆறுமுகம் (38). இவர் 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நாயக்காக பணிபுரிந்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் தீவிபத்தில் படுகாயமடைந்தார். அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விமானம் மூலம் அவரது உடல் வடுகபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலில் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீரமரணமடைந்த ஆறுமுகத்திற்கு மனைவி பாண்டிராணி (32), 7 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். ஆறுமுகத்தின் உடலை பார்த்து மனைவியும் ஒன்றும் அறியாத குழந்தைகளும் அழுதது பார்ப்போரை கலங்க வைத்துவிட்டது.