கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மண்டியிட்டுவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. அண்ணாமலை தாக்கு
தேனி: கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டியிட்டுவிட்டார் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் செய்வதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில் முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர் மட்டம் 136 அடி இருக்கும் போதே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது.
பேபி அணை மரங்களை வெட்ட தமிழகத்துக்கு உரிமை- சட்டப்படி அனுமதி தந்தோம்: கேரளா அரசுக்கு வனத்துறை பதிலடி

நீரை தேக்கி
அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்காதது ஏன் என பல முறை கேட்டும் தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார். அதன்படி இன்றைய தினம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழக முதல்வர்
இதுகுறித்து பாஜக அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தின் முதல்வர் தமிழகத்தை சேர்ந்த முல்லை பெரியாறு அணையின் உரிமையை இழந்து தற்போது அணையின் உரிமையை கேரளத்திடம் விட்டு கொடுத்தது தவறு. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசு தமிழகத்தின் அனுமதி இல்லாமல் தண்ணீரை திறந்துள்ளதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை தமிழர்களால் கட்டப்பட்டு தமிழர்களால் பராமரிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை தமிழகத்திற்கு பாத்தியப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுயஅறிவு இல்லாமல் பேசி வருகிறார்.

பேபி அணை
நீர்வளத்துறை அமைச்சர் கேரள அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பேபி அணையை பலப்படுத்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததாக கூறினார். இதற்க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த கேரள முதலமைச்சர் நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என தெளிவாக கூறியுள்ளார். இந்த செயல் வேடிக்கையாக உள்ளது.

உரிமை
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அணையின் உரிமையை மீட்டு கேரளத்தவர்களுக்கு தண்ணீர் திறந்ததற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். தொடர்ந்து அமைதியாக இருந்தால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டது போல் முல்லை பெரியாறு அணையை முற்றுகையிடுவோம் என பாஜக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.